சமய இலக்கியங்களிலே தமிழ்ப்பாடல்கள். பொதுவாகத் தமிழ்ப் பாடல்களிலே வெண்பா, ஆசிரியப்பா, கலிப்பா, வஞ்சிப்பா என்பவை சொல்லப்பட்டிருக்கும். சமய இலக்கியங்களிலே, பக்தி இயக்கம் ஆழ்வார்கள், நாயன்மார்கள் வந்தபோது, நிறைய அளவு வெண்பாக்களும், விருத்தங்களும் இடம்பெற்றிருந்தன. விருத்தப்பாடல்கள் 6 சீர், 7 சீர், எண் சீர் இவற்றிலே பொதுவாக அமைந்திருக்கும்.
பதிகங்கள் 10 லிருந்து 12 பாடல்கள் வரை இருக்கும் அல்லது ஒரு பதியைப் பற்றிப் பாடப்பெற்றதாய் இருக்கும்.இதைத் தவிர அந்தாதிகள் நிறைய இடம்பெற்று இருக்கின்றன. ஒரு பாடல் எதில் முடிகின்றதோ, அந்தச் சொல்லிலோ, அந்த எழுத்திலோ, அந்தத் தொடரிலோ அடுத்த பாடல் ஆரம்பிக்கும். பன்னிரு திருமுறைகளிலே அந்தாதிகள் காணப்படுகின்றன.
இதைத் தவிர, சித்திரக் கவிகள் என்பவையும் உண்டு. திருஎழுகூற்றிருக்கை என்று பெயர். ஒரு தேரின் வடிவிலே அமைக்கப்பட்டிருக்கும். ரதபந்தம் என்றும் ஒன்று உண்டு. அதில் எழுத்துகளை ஒரு தேரின் வடிவிலே அமைத்திருப்பார்கள். இதைத் தவிர சதுரங்கபந்தம் நம்முடைய Chess Board போலவே அமைந்திருக்கும்.
அன்னபந்தம் அன்னப்பறவை போல் இருக்கும். மயூர பந்தம் மயிலைப் போல் இருக்கும். டமருக பந்தம் உடுக்கையைப் போல் இருக்கும். அச்வபந்தம் என்று சொல்வார்கள். இந்த அச்வபந்தத்திலே, ஒரு சதுரங்கத்திலே குதிரை எப்படி, ஒரு நேர், ஒரு சாய்வு எப்படித் தாவித் தாவி இருக்குமோ, அப்படி எழுத்துகளைக் கொண்டிருக்கும்.
பெரிய அளவிலே புராணங்களும் உண்டு. அரிச்சந்திர புராணம், நளபுராணம் போல பல புராணங்கள் உண்டு. நெடுங்கதைகள், காப்பியங்கள், காவியங்கள் என்று பார்த்தால் இராமாயணம், கம்பராமாயணம் இருக்கும். இதைப்போல் இராமயணவெண்பா என்பதை மதுரகவி சீனிவாச அய்யங்கார் இயற்றியிருக்கிறார்.
பழைய பாரதம், பழைய இராமாயணம் என்பவை இருந்திருக்கின்றன. அவை நமக்குக் கிடைக்கவில்லை.
அருணகிரிநாதரினுடைய சிறப்பு என்னவென்றால் சந்தத்திலும், வண்ணத்திலும் அமைந்திருக்கும். ஒரு தாளக்கட்டிற்கு ஏற்றாற்போல் அமைந்திருப்பது, திருப்புகழினுடைய ஒரு மிகச்சிறந்த விஷயமாகும்.
இவையெல்லாம் தவிர பாரதியார் பிற்காலத்திலே, நிறைய பாடல்கள் மரபுக்கவிதைகளிலே எழுதியிருக்கிறார். அந்த வழியிலே பார்க்கும்போது, சிற்றிலக்கியங்கள் ஒரு 500-600 வருடங்களுக்கு முன்பு, நிறைய தோன்றியிருக்கின்றன. அந்த சிற்றிலக்கியங்களிலும் சமயம் சார்ந்த விஷயங்கள் அதிகம் உண்டு.
இந்து சமயம் மட்டுமன்றி, இஸ்லாமியத்திற்கும் சீறாப்புராணம் உண்டு. விவிலியம் என்று எழுதியிருக்கிறார்கள். தேம்பாவணி எழுதியிருக்கிறார்கள். புத்த சமயத்திலும், சமண சமயத்திலும் நிறைய காப்பியங்களும், செய்யுள்களும் இருக்கின்றன. பாரத தேசத்தைப் பொறுத்த வரையிலும், தமிழ்நாட்டைப் பொறுத்த வரையில் ஒரு சமயம் என்று இல்லாமல், எல்லா சமயத்திலும் இலக்கணம் சார்ந்த , மரபு சார்ந்த பாடல்கள் மிக அதிக அளவிலே இயற்றப்பட்டிருக்கின்றன.
வாழ்க பாரதம். வெல்க தமிழகம்.