நமது இந்து தர்மத்திலே வீட்டிலே செய்யக்கூடிய பூஜைகள், தனியாகச் செய்யக்கூடிய பூஜைகள், உறவுக் காரர்களுக்காகவும், நண்பர்களுக்காகவும் செய்யக்கூடிய பூஜைகள், பொதுவாக செய்யக்கூடிய விழாக்கள்/பூஜைகள் என்று பலவகையாகப் பிரித்துள்ளார்கள். ஏனென்றால், தனியாகச் செய்வது என்றால் ஜெபம் செய்வதோ, சந்தியாவந்தனம் செய்வதோ, தானே மந்திரங்களைப் பாராயணம் செய்வதோ ஆகும்.
ஒரு குடும்பம் கூடி அந்த வீட்டிலே விநாயகர் பூஜையோ, சரஸ்வதி பூஜையோ செய்வது அந்த வீட்டிற்கு மட்டுமாக இருக்கும். ஒரு விழாக்காலமாக இருக்கும்போது, ஒரு பெரிய் குடும்பமே கூடிப் பொங்கல் விழாவாக இருக்கலாம்; நவராத்திரி விழாவாக இருக்கலாம்; கல்யாணங்கள், காதுகுத்துதல், 60-ம் கல்யாணம், 80-ம் கல்யாணம் என்று பலவிதமான உறவுக்காரர்களுக்காகவும், நண்பர்களுக்காகவும் செய்யும் விழாவாக இருக்கலாம்; இவற்றில் எல்லாம் தெய்வத்தன்மையுடன் கூடிய விஷயங்களுடன் தான் இது நடக்கும். பொழுது போக்குக்காக இவை நடைபெறவில்லை.
இதைத் தவிர கோவில்களில் அபிஷேகம் செய்யும்போது உறவுக்காரர்கள், நண்பர்கள் மட்டுமன்றி எல்லாருக்கும் அது பயனளிக்கும். எல்லாரும் அதைத் தரிசிக்கலாம். எல்லாரும் பார்க்கலாம் என்பதற்காக நடத்தப்படுவது. அலங்காரம் செய்வது, லட்சார்ச்சனை, கோடி அர்ச்சனை, சகஸ்ர நாம அர்ச்சனை போன்று பலருக்கும் பயனளிக்கக்கூடியது.
அதேபோல் வெள்ளித்தேர் இழுப்பது, தங்கத்தேர் இழுப்பது என்று வைத்துள்ளார்கள். ஏனென்றால் சில பேரால் முடியாது. முடியாதவர்கள் அந்தத் தேர் இழுக்கும்போது அவர்களுக்கும் அந்த பாக்கியம் கிட்டட்டும் என்பதற்காக இவையெல்லாம் வைத்திருக்கிறார்கள்.
இதைத்தவிர, பொதுவாக ஆழித் தேர் இழுத்தல் விழா, காவடி எடுத்தல், பால்குடம் எடுத்தல் என்று பலவகையான விழாக்கள் எதற்காக என்றால், சமூகத்தில் உள்ள அனைவரும் ஒற்றுமையாக இருக்க வேண்டும், அனைவருடைய சிந்தனையும் தெய்வத்தின்பால் ஒன்றுபட வேண்டும்; இது நம்முடைய கிராமம், இது நம்முடைய சமூகம் என்ற ஒரு விழிப்புணர்வு இருக்க வேண்டும் என்று, ஒற்றுமையைக் காப்பதற்காகவும், ஒற்றுமையோடு பக்தியையும் கலந்து இந்த விழாக்களெல்லாம் அமைந்திருக்கின்றன.
இதையெல்லாம் தாண்டி, சமூக சிந்தனைக்காக, ச்ரமதானம் என்று சொல்வார்கள். இதை வடமொழியிலே பூர்த்தயாகம் என்று சொல்வார்கள். பூர்த்தயாகம் என்றால் பொது நலனுக்காகச் செய்வது. குளம் வெட்டுதல், மரம் நடுதல், தூர் வாருதல், அதேபோல் பூச்செடிகளை வைத்து நந்தவனங்கள் அமைத்தல், ஆற்றினுடைய படுகைகளையும், கரைகளையும் சரியாக அமைத்தல் என்று ஊருக்கு நல்ல விஷயங்களை வைத்துள்ளார்கள். இவையெல்லாம், தெய்வத்தன்மை மட்டும் இன்றி, இயற்கையோடு ஒன்றிய தன்மையைக் காட்டுகின்றன. இவையெல்லாமே இயற்கை சார்ந்த விஷயங்களாகவே, நம்முடைய தர்மத்திலே அமைத்திருக்கிறார்கள்.
இதனால் இந்து தர்மத்திலே பக்தி, தெய்வம், இயற்கை, சமூகம், ஒற்றுமை ஆகியவற்றை ஒன்றாகக் கலந்து உள்ளன. இப்போது இருப்பவர்களுக்கு மட்டும் இன்றி, பின்னால் வரப் போகும் சந்ததிகளுக்கு எல்லாம் சேர்த்து, இப்போதே தர்மம் செய்ய வேண்டும் என்பதே இதன் நோக்கம்.
அறம் செய விரும்பு.
தர்மம் தலைகாக்கும்.
ஊருடன் ஒத்து வாழ்.
ஓம் சக்தி.