வாயுவும் அக்னியும் அந்தப் பொறிகளை கங்கையிடம் விட, கங்காதேவி, அவற்றை “சரவணப் பொய்கை”யில் சேர்ப்பித்தாள். அங்கு மலர்ந்திருந்த ஆறு தாமரை மலர்களை அவை அடைந்தன. ஆறு குழந்தைகளாக அவை மாறின.
அம்பா, துலா, நிதந்தி, அப்ரயந்தி, மேகயந்தி, வர்ஷயந்தி எனும் கார்த்திகைப் பெண்கள் அறுவர் அங்கு வர, அக் குழந்தைகளை அவர்கள் எடுத்து வளர்த்தனர்.
“சரவணப் பூந்தொட்டில் ஏறி, அறுவர் கொங்கை விரும்பி” என்று கந்தர் அலங்காரத்திலும், “மந்தாகினி பிரபவ தரங்க விதரங்க வன சரோதய! கிர்த்திகா வர புத்ர! ராஜீவ பரியங்க” என்று மயில் விருத்தத்திலும் இந்நிகழ்வைப் பாடுகிறார்.
அப்போது, அங்கே உமையம்மை வருகிறாள். ஆறு குழந்தைகளையும் பார்க்கிறாள். அவர்கள்,
“அம்பொனின் திருவரைக் கிண்கிணி கிணின் கிணின் கிணின் என
குண்டலம் அசைந்து இளம் குழைகளில் ப்ரபை வீச
தந்தன தனந் தனந் தன என செஞ்சிறு சதங்கை கொஞ்சிட
மணித் தண்டைகள் கலின் கலின் கலின் என
திருவான சங்கரி மனம் குழைந்து உருக, முத்தம் தர,
செழும் தளர் நடையிட்டு”
அவளிடம் வந்தனர்.
அக் குழந்தைகளை அவள் அணைக்க, கருணைகூர் முகங்கள் ஆறும், கரமது பன்னிரண்டும், இரு தாளும் உடைய ஓர் மேனியாகி, ஒரு திரு முருகனாய் உலகம் உய்ய உதித்தான்.
உமையம்மையால் ஒன்று சேர்க்கப்பட்டவன் ஆதலால் – கந்தன் என்றும், சரவணப் பொய்கையில் தோன்றியதால் சரவணபவன் என்றும், க்ருத்திகை மாதர்களால் வளர்க்கப்பட்டதால் கார்த்திகேயன் என்றும், கங்கை நதியில் விடப்பட்டதால் காங்கேயன் என்றும், அக்னியின் கரத்தில் ஏந்தப்பட்டதால் சுசீகரன் என்றும் பலவாறு அழைக்கப்பட்டான் முருகன்.
எல்லோர் மனத்திலும் ஒரு குதூகலம் உண்டானது. ஆனால், கடல், குன்று, சூரன் ஆகிய மூன்றும் அழுதன.
“திருந்தப் புவனங்கள் ஈன்ற பொற்பாவை திருமுலைப்பால் அருந்தி, சரவணப் பூந்தொட்டில் ஏறி, அறுவர் கொங்கை விரும்பி, கடல் அழ, குண்றழ, சூர் அழ…” என்று ஒரு கந்தர் அலங்காரத்தில் பாடுகிறார்.
சூரன், தனக்கு ஆபத்து வந்துவிட்டது என்று அழுகிறான் சரி. குன்றும் கடலும் ஏன் அழ வேண்டும்? சூரனுக்குக் கவசமாய் இருக்கப் போவது கிரௌஞ்ச மலை. அதனையே முருகன் முதலில் வேல் எறிந்து தாக்கப்போகிறான் என்று அது உணர்ந்துகொண்டது போலும்! பின்னர், சூரன் ஒளிந்துகொள்ள இடம் கொடுக்கப்போவது கடல்! அக் கடலை வற்றச் செய்து, சூரனை அழிக்கப்போகிறான் முருகன் என்பதை அந்தக் கடலும் உணர்ந்துகொண்டது. ஆதலால் அவைகளும் அழுதன.
குழந்தை முருகன் சப்பாணி கொட்டும் அழகை மற்றொரு கந்தர் அலங்காரப் பாடலில் பாடுகிறார் அருணகிரிநாதர்.
“இருநான்கு வெற்பும் அப் பாதியாய் விழ, மேரும் குலுங்க, விண்ணாரும் உய்ய, சப்பணி கொட்டிய கை ஆறிரண்டுடைச் சண்முகனே”
ஒரு குழந்தை, தன் இரண்டு கைகளையும் ஒன்றோடு ஒன்று அடித்துச் சப்பாணி கொட்டும். ஆனால், முருகனோ, பன்னிரு கரமுடைய பரமன். தன் பன்னிரண்டு கைகளை அவன் கொட்டியதும், தேவர்களுக்குப் பயம் அகன்றது. மேரு மலை குலுங்கியது. எட்டுத் திக்கில் உள்ள மலைகளும் பாதியாய் உடைந்தன என்று ரசித்துப் பாடுகிறார்.
முருகன் வளர்ந்துவிட்டான். எப்போது சூரனை அழிப்பான் என்று காத்திருந்தனர் தேவர்கள்.
சிவபெருமான் முருகனை அழைத்து, “நீ போய் தேவர்களின் சிறையை நீக்க, சூரபத்மனோடு போரிடு” என்று உத்தரவிட்டதை, ‘நிருதரார்க்கொரு’ எனத் தொடங்கும் திருப்புகழில் பாடுகிறார்.
“தருவின் நாட்டு அரசாள்வான் வேணுவின்
உருவமாய்ப் பல நாளே தானுறு
தவசினால் சிவன் ‘நீ போய் வானவர் சிறைதீர
சகல லோக்கியமே தான் ஆளுறும்
அசுர பார்த்திபனோடே சேய், அவர்
தமரை வேல் கொடு நீறாயே பட விழமோது’
என்றருள”
என்று வருகின்ற அவ்வரிகள்.
உடனே, அம்பிகை, தன் சக்தியை ஒன்றாகத் திரட்டி, வேலாயுதமாக முருகனின் கையில் கொடுக்கிறாள்.
இன்றும், சிக்கல் திருத்தலத்தில், கந்த சஷ்டியின் ஐந்தாம் நாள், வேல் வாங்கு நிகழ்வு உத்ஸவமாக நடந்து வருகிறது. தலத்து இறைவி, வேல்நெடுங்கண்ணி, சிங்கார வேலனுக்கு வேல் கொடுக்க, அவரது திருமேனி வியர்த்துப்போவது, அதிசயிக்கத்தக்க ஒன்று.
கொம்பனையார் எனத் தொடங்கும் திருச்செந்தூர்த் திருப்புகழில்,
“பம்பரமே போல ஆடிய
சங்கரி வேதாள நாயகி
பங்கய சீபாத நூபுரி கரசூலி
]
பங்கமிலா நீலி மோடி
பயங்கரி மாகாளி யோகினி
பண்டு சுராபாண சூரனொடு எதிர்போர் கண்டு
‘எம் புதல்வா வாழி வாழி’
எனும்படி வீறான வேல் தர…”
என்று பாடுகிறார்.
முருகப் பெருமானின் திருக்கரத்தில் இருக்கும் இந்த வேல் மட்டுமே சூரர் குலத்தை முற்றிலுமாக அழிக்க வல்லது என்று பிரமனும், தேவர்களும் கருதி, முருகனிடம் வேண்டி நின்றனர் என்று வேல் விருத்தத்தில் பாடுகிறார் அருணகிரிநாதர்.
“வெங்காளகண்டர் கை சூலமும் திருமாயன்
வெற்றிப்பெறு சுடர் ஆழியும்
விபுதர்பதி குலிசமும் சூரன் குலம் கல்லி
வெல்லா எனக் கருதியே
‘சங்க்ராம! நீ ஜயித்து அருள்’ எனத் தேவரும்
சதுர்முகனும் நின்றிரப்ப
சயிலமொடு சூரன் உடல் ஒரு நொடியில் உருவியே
தனி ஆண்மை கொண்ட நெடுவேல்”
என்று பாடுகிறார்.
தொடரும்....