ஒவ்வொருவரும் என்னென்ன பூஜைகள் செய்ய வேண்டும், வீட்டிலேயே செய்யவேண்டிய பூஜைகள் என்னென்ன அன்பதை இப்பொழுது பார்க்கலாம்.
முன்பே பூர்வாங்க பூஜை பற்றிப் பார்த்தோம். அதாவது ஒரு பூஜை செய்வதற்கு முன்பு, குரு தியானம், கலசத்திற்குப் பூஜை, இடத்திற்குப் பூஜை முதலியவற்றைப் பார்த்தோம். இப்பொழுது என்னென்ன பிரதான பூஜைகள் முக்கிய பூஜைகள் என்பதைப் பார்ப்போம்.
விநாயகர் சதுர்த்திக்கு சித்தி விநாயக பூஜை.
நவராத்திரி முடிந்த பிறகு சரஸ்வதி பூஜை.
அதேபோல் வரலட்சுமி விரத பூஜை.
கோகுலாஷ்டமி என்று சொல்லக்கூடிய கிருஷ்ண ஜென்மாஷ்டமி பூஜை.
மகா சிவராத்திரி பூஜை.
ஸ்ரீராம நவமி பூஜை.
அகண்ட தீப பூஜை, சொர்ண கௌரி விரத பூஜை.
ஒவ்வொரு ஊரிலும் இருக்கக்கூடிய நதிகளுக்கு வடக்கே இருப்பவர்கள் கங்கை, யமுனை இவற்றிற்கெல்லாம் செய்வார்கள். இதேபோல் நாம் காவேரி பூஜை செய்யவேண்டும்.
அதற்குப் பிறகு ரிஷி பஞ்சமி என்ற ஒரு பூஜை உண்டு. கருட பஞ்சமி பூஜை உண்டு.
ஸ்கந்த சஷ்டி பொதுவாக எல்லா சஷ்டிகளிலும் பண்ணலாம். சுப்பிரமணிய பூஜை.
அதற்கு பிறகு சுக்லசஷ்டி விரதம். இதை நாகபூஜை என்று சொல்வார்கள்.
ஏகாதசி விரதம். மகாவிஷ்ணுவிற்குப் பூஜை. அதேபோல் துவாதசியிலே பிருந்தாவன துளசி பூஜை என்பார்கள்.
ஒவ்வொரு பிரதோஷத்திலும் சாம்பசிவ பூஜை சிவனுக்குண்டானது.
அதேபோல் சத்தியநாராயண பூஜை.
சித்திரை மாதத்திலே பௌர்ணமி வருவதற்கு சித்ராபௌர்ணமி அல்லது சித்திரகுப்த பூஜை என்பார்கள்.
சோமவார விரதம் இதை அஶ்வத்த நாராயண பூஜை, அரசமரத்துப் பூஜை என்பார்கள்.
தை மாதத்திலே பொங்கலுக்குச் சூரியனுக்கு மகரசங்கராந்தி பூஜை. மாட்டுப்பொங்கலின் போது இந்திர பூஜை, கோ பூஜை பசுக்களுக்கு பூஜை செய்யவேண்டும்.
ஒவ்வொரு திங்கள் கிழமையுமே சோமவாரம் என்பதற்காக சிவனுக்குப் பூஜை உண்டு.
இதைத் தவிர தீபாவளியின் போது லக்ஷ்மி குபேர பூஜை என்று வடநாட்டிலே அதிகம் கொண்டாடுவார்கள். தென்னாட்டிலே கொஞ்சம் குறைவாக உள்ளது.
புரட்டாசி சனிக்கிழமைகளிலே விஷ்ணுவிற்குப் பூஜை.
ரதசப்தமி என்று சொல்லக்கூடிய நாளில் எருக்கு இலையையும், அட்சதையையும் வைத்துக்கொண்டு குளிப்பார்கள். இதற்கு ரதசப்தமி ஸ்நானம் என்று பெயர். அதேபோல் பீஷ்மாஷ்டமிக்கு ஒரு அர்க்கியம் விட வேண்டும்.
இதேபோல் நவராத்திரி 9 நாட்களுக்கும் நவராத்திரி பூஜை.
பெண்களுக்குக் காரடையான் நோன்பு இதை காமாட்சி பூஜை என்றும் சொல்வார்கள்.
ஹரிஹர புத்ர பூஜை ஐயப்ப பூஜை என்றும் சொல்வார்கள்.
சங்கர ஜெயந்தி, ஆதி சங்கர பகவத் பாத பூஜை.
இதைத்தவிர கேதாரேஸ்வர விரதம், சம்பத் கௌரி விரதம், மங்கல கௌரி விரதம் என்பதெல்லாம் அம்மனுக்காகவும், சிவனுக்காகவும் தொடர்ந்து செயவது வழக்கம்.
இதைத்தவிர ஒவ்வொரு ஊரிலும் இருக்கக்கூடிய இஷ்ட தெய்வங்கள், குலதெய்வங்கள், கிராம தெய்வங்கள் இவற்றிற்குத் தனியாகப் பூஜை செய்து படையல் போடுவது என்பது வழக்கம்.
வீட்டிலே செய்வது மட்டுமல்லாமல், ஒரு குடும்பத்தில், ஒரு பரம்பரை என்று சொல்வார்கள், அதேபோல் ஊரே கூடி செய்கின்ற சிறப்பு விழா இருக்கக்கூடும். மயிலாப்பூர் என்று எடுத்துக்கொண்டால் அதற்கென்று சில விழாக்கள் இருக்கும். அதேபோல் திருவையாறு என்று எடுத்துக்கொண்டால் அந்த ஊருக்கு என்று சில விஷயங்கள் இருக்கும். காவடி எடுத்தல் போன்றவைகளும், ஊர் கூடி செய்வது தான்.
இதைத்தவிர நாடே கூடி செய்யக்கூடிய விஷயங்களான தேருக்குப் பூஜை செய்வது, தேரினுடைய வடத்தை எடுத்து கண்ணில் ஒற்றிக் கொள்வது போன்றவை உண்டு.
இதை ஒவ்வொரு ஊருக்கும் பிரத்யேகமாக இருக்கக்கூடிய சிறப்பு விழாக்கள் என்று சொல்வார்கள்.
இப்படி பொதுவாக ஒவ்வொரு பூஜைகளுமே ஒவ்வொரு மாதத்திலும், பௌர்ணமியை ஒட்டி வரும். திருவாதிரை பூஜையாக இருக்கட்டும், மாசி மகமாக இருக்கட்டும் எல்லாமே பௌர்ணமியை ஒட்டியே வரும். பௌர்ணமியை ஒட்டி வரும் விழாக்கள்தான் பொதுவாக பூஜை செயவது வழக்கம். ஏனென்றால் அமாவாசையிலே நீத்தார் பித்ருக்கள் என்று சொல்லக் கூடிய முன்னோர்களுக்குத் தர்ப்பணம் செய்வதுதான் முக்கியம். தர்ப்பணங்களைப் பற்றி பிறகு பார்ப்போம்.
சிவசிவ.