குடமுழுக்கிலே அடுத்ததாக வேள்வி வழிபாடு. இந்த வேள்வி வழிபாட்டிலே, முதலில் எட்டுத்திசைக் காவலர்களைக் குண்டங்களில் எழுந்தருளச் செய்ய வேண்டும்.
கிழக்கு - இந்திரன், தென்கிழக்கு - அக்னி, தெற்கு - எமன், தென்மேற்கு - நிருதி, மேற்கு - வருணன், வடமேற்கு - வாயு, வடக்கு - குபேரன், வடகிழக்கு - ஈசானன். எண்திசைக் காவலர்களையும் எழுந்தருளச் செய்தபிறகு திருவருள் சக்திகளைக் குண்டங்களிலே எழுந்தருளச் செய்யவேண்டும்.
எழுந்தருளச்செய்ய வேண்டுமெனும்போது ஒவ்வொன்றுக்கும் உண்டான துதிப்பாக்களையும், ஸ்தோத்திரங்களையும் பாடவேண்டும்.
விநாயகர், முருகன், சிவபெருமான், அம்பிகை, திருமால் ஆகியோரைத் துதிக்கும் பாடல்களையும், தோத்திரங்களையும் பாடவேண்டும். பிறகு திவ்யப் பொருள்களை ஆகுதி செய்யவேண்டும். பிறகு சுவையமுது இடவேண்டும். அதற்குப் பிறகு வேள்வி நிறை வழிபாடு (பூர்ணாகுதி) என்பார்கள்; அதைச் செய்யவேண்டும். அதற்குப் பிறகு வைக்கோல் உருவம் எரித்தல், பூசணிக்காய் பலியிடுதல் என்று ஒரு வழக்கம் உண்டு. அதையும் செய்வார்கள்.
பிறகு அடியார்கள் வேள்விக்கு ஆயத்தம் ஆகவேண்டும். வேள்வி முதன்மை ஆசிரியரை முதன்மை அடியார், சர்வ சாதகம் என்று சொல்வார்கள். அனைத்து அடியார்களும் அனுஷ்டானம் செய்தபிறகு, சின்னகளை அணிந்து, பாராயணம் செய்துக்கொண்டே வேள்விச்சாலைக்குச் செல்லவேண்டும். அவர்கள் எல்லாரும் தர்ப்பை மோதிரம் தூவணி அணியவேண்டும். தர்ப்பைக் கட்டாகிய ஞானவாளையும் ஏந்திச் செல்லவேண்டும்.
பிறகு புற்றுமண் எடுத்தல். இதை மிருத் சங்க்ரஹனம் என்பார்கள். ஆற்றுமண், ஊற்றுமண், யானை மிதித்த மண், புற்றுமண், தர்ப்பை முளைத்த மண், சமாதி வளாக மண் இவற்றில் ஏதேனும் ஒரு இடத்திலிருந்து மண் எடுத்துவர வேண்டும். அடியார் ஒருவர் எடுத்து வருவார். அவருக்கும் பூஜை செய்யவேண்டும்.
பிறகு முளைப்பாரி வழிபாடு (அங்குரார்ப்பணம்) நடத்தவேண்டும். கலசத்தைச் சுற்றிலும் 12 கிண்ணங்களிலே புற்றுமண்ணை இட்டு, தானியம், பயிறுகளைப் பாலுடன் கலந்து வைப்பார்கள். இதற்கு முளைப்பாலிகை என்று பெயர்.
பிறகு அடியார்களுக்கும், அன்பர்களுக்கும் காப்பு அணிவிக்க வேண்டும். ரக்ஷாபந்தனம், காப்புக்கட்டுதல் என்று சொல்வார்கள். இந்தக் காப்புக் கட்டிய பிறகு காப்பு அவிழ்க்கும் வரை அவர்கள் ஊரைவிட்டு வெளியிலே செல்லக்கூடாது.
காப்புக் கட்டிய பிறகு திருக்குடங்களை அமைக்க வேண்டும். தயார் செய்துவைத்த குடங்களை அலங்கரித்து, நீரூற்றி, சந்தனப் பொட்டுகளெல்லாம் இட்டு வேள்விக் குண்டங்களைச் சுற்றியுள்ள இடங்களிலே, இடத்திற்கேற்றவாறு, தேவதைகளுக்கு ஏற்றவாறு வைக்கவேண்டும். பிறகு முக்கிய மூர்த்திகளுக்கு ஒவ்வொன்றுக்கும் எட்டு எட்டு பீடக்கலசங்கள் வைக்கவேண்டும். அதற்குப் பிறகு திருச்சுற்றுக் கலசங்களையும் நிறுவ வேண்டும். திருவருள் சக்திகளை இந்தத் திருக்குடங்களிலே எழுந்தருளச் செய்வதற்காகச் சிறப்புப் பாராயணங்களும், தோத்திரங்களும் செய்யப்படும்.
பிறகு வேள்விச்சாலை வழிபாடு தொடங்கவேண்டும். முதலில் வாயில் காவலர்களுடைய வழிபாடு நடக்கவேண்டும். முதலில் முதன்மை ஆசிரியர் சர்வசாதகம் அவர்கள் ஆரம்பிப்பார்கள்.
அதற்குப் பிறகு குண்டங்களிலே வேள்வி வழிபாடு தொடங்கவேண்டும். வேள்வி வழிபாடு தொடங்கிய பிறகு ஒவ்வொரு முறையும் எண்திசைக் காவலர்களைக் குண்டங்களிலே எழுந்தருளச்செய்து, திருவருள் சக்திகளை எழுந்தருளச் செய்து, விநாயகர், முருகன், சிவபெருமான், அம்மன் ஆகியோருக்கு உண்டான ஸ்தோத்திரங்களைச் சொல்லி, போற்றிகளைச் சொல்லி அர்ச்சனைகள் செய்து, சுவையமுது காண்பித்து வழிபட வேண்டும். ஒவ்வொரு பூஜைக்குப் பிறகும் நைவேத்தியம் செய்ய வேண்டும்.
பூர்ணாகுதி செய்தபிறகு ஒருகால பூஜை அதாவது ஒருகால வேள்வி நிறைவுபெறும். பிறகு ராகங்கள், தாளங்களுடன் இசைக்கருவிகளை வாசித்தல், மறை ஓதுதல் செய்ய வேண்டும்.
வசதிக்கு ஏற்றாற்போல், காலத்திற்கு ஏற்றாற்போல் ஒருகாலம், 4 காலம், 6 காலம், 8 காலம் என்று வேள்விகளை நடத்தித் தொழவேண்டும். கடைசியிலே திருநீற்றுப் பிரசாதம் வழங்க வேண்டும்.
சிவ சிவ.