கும்பாபிஷேக முறை. திருக்குட நன்னீராட்டுப் பெருவிழா என்பார்கள். கும்பாபிஷேகத்திலே பலவகைகள் உண்டு. அதிலே தொடக்கத் திருக்குட நன்னீராட்டு விழா அதாவது இதை அநாவர்த்தனம் என்பார்கள். புதிதாக ஒரு கோவில் கட்டினால் அதற்கு அநாவர்த்தன முறையில் செய்யவேண்டும்.
பழைய காலத்திலே கட்டப்பட்டு, பாழ்பட்டுப் பூஜையின்றி இருந்து, அந்தத் திருக்கோவிலைப் புதுப்பித்துச் செய்யப்படுவது, திருத்திய திருக்குட நன்னீராட்டு என்பதாகும். இதை ஆவர்த்தனம் என்பார்கள்.
பூஜையிலே இருக்கக்கூடிய கோவிலுக்கு 12 ஆண்டுகளுக்கு ஒருமுறை, இடம் சரிவர இல்லாமல் இருந்தாலோ, மருந்துக்கலவை சிதைந்திருந்தாலோ, வண்ணங்கள் அழிந்திருந்தாலோ இதைச் செய்வார்கள். இதற்கு மறு திருக்குட நன்னீராட்டு என்று பெயர். இதை புனராவர்த்தனம் என்பார்கள்.
இன்னொன்று எளிய முறையிலே நடைபெறுவது. திருக்கோவிலினுடைய வளாகத்திலே எதிர்பாராத இறப்போ, அல்லது தூய்மையற்ற நிகழ்ச்சிகள் நடந்துவிட்டாலோ, இதை ஒரு சுத்தியாகச் செய்வார்கள். இதற்கு எளிய திருக்குட நன்னீராட்டு, அந்தரீதம் என்று பெயர்.
கும்பாபிஷேகத்திற்கு உண்டான காலங்களையும், தக்க இடங்களையும், வேள்விச்சாலைகள் அமைக்கும் இடங்களையும் பெரியோர்கள் முடிவு செய்வார்கள். முதலிலே நடைபெறுவது இளங்கோவில் அமைத்தல் என்று பெயர். இதை பாலாலய பிரதிஷ்டை என்பார்கள்.
அதற்குப் பிறகு வேள்விச் சாலையை அமைக்க வேண்டும், யாகசாலை என்பார்கள். இதிலே ஒரு குண்டம், நவ குண்டம் என்று பலவகைகள் உள்ளன. இடத்திற்கும், வசதிக்கும் ஏற்ப இதைச் செய்யலாம், வேள்விச் சாலையை அமைக்கலாம். பிறகு முளைப்பாரிகள் இடுதல்; இதற்கு அங்குரார்ப்பணம் என்று பெயர். இதிலே தானியங்களை சேர்த்து வைப்பார்கள். அதற்குப் பிறகு நுழைவாயில் அமைப்பார்கள். யாகசாலைக்கு, வேள்விச் சாலைக்கு 4 பக்கத்திலும் நுழைவாயில் உண்டு. பிறகு வேதிகை அல்லது குண்டங்கள் அமைப்பார்கள்.
இந்தக் குண்டங்களை வட்டமாகவோ, சதுரமாகவோ, அறுகோணமாகவோ, எண்கோணமாகவோ, அரசிலை வடிவமாகவோ ஒவ்வொரு தெய்வங்களுக்கும் ஏற்றாற்போல் அமைப்பார்கள்.
இதிலே 5 இருக்கை மேடை (பஞ்சாஸன வேதிகை) என்று சொல்வார்கள். பஞ்ச குண்டங்கள் அதாவது 5 குண்டங்கள் என்றும் சொல்வார்கள். இது எந்தக் கோவிலுக்குக் கும்பாபிஷேகம் செய்கிறோமோ, அதற்கேற்றாற்போல் பெரியவர்கள் அமைப்பார்கள். பொதுவாகக் குண்டங்கள் பிறை வடிவம், சதுர வடிவம், வட்ட வடிவம், அரசிலை வடிவம், முக்கோணம், எண்கோணம், அறுகோணம் அல்லது தாமரை வடிவத்திலே அமைந்திருக்கும்.
யாகசாலை தொடங்குவதற்கு முன்பு சில ஏற்பாடுகளைச் செய்ய வேண்டும். இதிலே கலசங்களை முதலிலே சரிசெய்ய வேண்டும்; பிறகு கலசத் தூய்மை; ஒவ்வொரு கலசத்திற்கும் தேங்காய், மாவிலை இவற்றையெல்லாம் வைத்துத் தூய்மைப் படுத்துவார்கள்.
நறுமணப்பொடி, ஏலம், சாதிக்காய், கிராம்பு, பச்சைக்கற்பூரம், கஸ்தூரி மஞ்சள் இவற்றையெல்லாம் எடுத்து, சுருட்டி நறுமணப்பொடி செய்வார்கள். கலசத்திற்கெல்லாம் தேங்காய்களை வைக்க வேண்டும்.
தர்ப்பை கூர்ச்சங்கள் (ஞானவாள்) சேர்த்த துணிகளை ஒன்றாகச் சேர்த்து முடித்து வைப்பார்கள்; இதற்கு கூர்ச்சம் என்று பெயர். இதேபோல் 36, 54, 108 என்று பல ஞானவாள்களையும் சேர்த்து வைப்பார்கள்.
பிறகு பவித்திரம் என்பது; தூவணி தூய்மையான ஆபரணம் என்று பெயர். பவித்திரங்களைத் தயார் செய்துகொள்ள வேண்டும்.
அதேபோல் திருக்குடங்களையும் தயார் செய்துகொள்ள வேண்டும்.
திருக்குடங்களே தெய்வத்தினுடைய மேனியாகும். சுற்றப்படும் நூலே அதனுடைய நாடிகள். இந்த கலசதிற்குள்ளே குடங்களிலே இருக்கும் நீர்தான் அதனுடைய ரத்தம். குடத்திலே இடப்படுகின்ற நாணயம், மோதிரம் முதலியன உடற்கூறுகள். அதிலே வைக்கின்ற மாவிலைக் கொத்துதான் மங்கலம். தேங்காய்தான் அதனுடைய தலை (சிரம்). உள்ளே இருக்கின்ற கூர்ச்சம், தண்டு முதுகெலும்பு என்று சொல்வார்கள். வண்ண நூல்களினால் சுற்றப்படுவதே பெருமானுடைய 5 வண்ணங்கள் ஆகும்.
பிறகு மஞ்சள் அரிசியையும், திருவிளக்குகளையும் தயார் செய்துகொள்ள வேண்டும். கலசங்களைச் சந்தனம், குங்குமம் எல்லாம் இட்டு அழகு படுத்துவார்கள். பிறகு ஆனைந்து என்று சொல்லப்படும் பசுவிலிருந்து கிடைக்கக்கூடிய பால், தயிர், நெய், கோசலம், கோமயம் (சாணம்) ஆகியவற்றைத் தனித்தனியாகவோ, சேர்த்தோ ஒரு சொம்பிலே எடுத்து வைத்துக்கொள்வார்கள்.
இதற்குப் பிறகு ஆகுதி செய்ய வேண்டிய பொருள்களாகிய வேர்கள், இலைகள், சிராய்பட்டைகள், விதைகள், காய், கனி, கிழங்குகள் முதலியவற்றையெல்லாம் எடுத்துக்கொள்வார்கள். தொன்னைகளைத் தயார் செய்துகொள்ள வேண்டும்.
மூங்கில் கூடைகளையும், தட்டுகளையும் தயார் செய்துகொள்ள வேண்டும். பிறகு நிறையாகுதி அதாவது பூர்ணாகுதி என்பார்கள்; அதற்குண்டான வேர், பச்சை கற்பூரம் ஆகியவற்றை ஒரு துணியிலே முடித்துக் கொள்வார்கள்.
இவையெல்லாம் தயார் செய்த பிறகு, காப்புக்கயிறு செய்யவேண்டும். கும்பாபிஷேகத்தினுடைய நிகழ்சிகளையும், அங்கங்களையும் வரக்கூடிய தொடர்களிலே பார்க்கலாம்.
ஓம் சக்தி.