பூஜைக்காலங்கள் எல்லாம் முடிந்த பிறகு திருமேனிகளை, நீர் மற்றும் தானியங்களிலே வைக்க வேண்டும். அதற்குப் பிறகு மலர், நாணயங்கள், தர்ப்பைகளைத் திருமேனிகளிலே வைத்து அதன்பின் கண் திறத்தல் செய்வார்கள். நயனோன்மீலனம் என்று பெயர். திருமேனிகளுக்குப் புதிதாக வந்த சிலைகளுக்குக் கண்ணைத் திறப்பார்கள். தங்கம் அல்லது வெள்ளி ஊசிகளினால் கண்ணைத் திறப்பார்கள்.
அதற்குப் பிறகு தெய்வத் திருமேனிகளை எடுத்து வலம் வர வேண்டும். ஒரு எருது பூட்டிய வண்டியிலோ, இயந்திர வண்டியிலோ திருமேனிகளை வைத்து வலம் வருவார்கள். அதற்கு பிறகுப் பாவனா அபிஷேகம் என்ற கருத்தினால் திருமஞ்சனம் என்ற வழிபாடு நடக்கும்.
உற்சவ மூர்த்திகள் (உலாத் திருமேனிகள்), உலா விமானங்கள், எந்திரத் தகடுகள் முதலியவற்றிற்கும் திருமஞ்சனம் செய்ய வேண்டும். விக்ரஹங்களுக்குக் கீழே எந்திரத் தகடுகளை வைப்பார்கள்.
அதற்குப் பிறகு விமான கலசங்களை நிறுவ வேண்டும். கர்ப்பகிரஹம் எனப்படும் கருவறையிலே ஆதார பீடத்தையும் நிறுவ வேண்டும்.
அதற்குப் பிறகு அஷ்டபந்தனம் நடக்கும். அதற்குப் பெயர் எண்வகை மருந்து சாத்துதல். சிலைகள் பிடித்துக்கொண்டு நிற்க வேண்டும் என்பதற்காக அஷ்டபந்தனத்தை வைக்கவேண்டும். இதிலே எட்டுவகை மருந்துகள் என்பது சுக்கான், குங்கிலியம், கொம்பு அரக்கு, தேன் மெழுகு, கல் காவி, செம்பஞ்சு, எருமை வெண்ணை, சாதிலிங்கம் ஆகியவை ஆகும். விக்ரஹத்தின் அளவிற்கு ஏற்றாற்போல் மருந்து சாத்த வேண்டும்.
திரிபந்தனம் என்றும் ஒன்று உள்ளது. த்ரிபந்தனம் சாற்றும் முறையும் வழக்கத்தில் உள்ளது.
பிறகு திருச்சுற்றுக் கலச நன்னீராட்டு என்பார்கள். குடமுழுக்கு நாளன்று அதிகாலையில் வேள்வி தொடங்குவதற்கு முன்பாக சுற்றுக்கலசங்களுக்கு வழிபாடு செய்யவேண்டும். அதற்குப் பிறகு திருமேனிகளுக்குக் காப்பு அணிவிக்க வேண்டும். திருமேனிகளுக்கு அருள்நிலை ஏற்றல் என்று ஒன்று உள்ளது. நாடி சந்தானம் என்பார்கள். அதைச் செய்ய வேண்டும். திருக்குடத்தின் வழியாக மூல சன்னதிக்கு அருள்நிலை சேர்வதாக ஐதீகம்.
திருக்குடங்களை யாகசாலையிலிருந்து புறப்பாடு செய்யவேண்டும். அது புறப்படுவதற்கு முன்பு அறம் செய்ய வேண்டும். யாத்ரா தானம் என்று பெயர். யாத்ரா தானத்திற்குப் பிறகு திருக்குடங்களின் ஞானஉலா. திருக்குடங்களை உலா எடுத்துச் செல்லவேண்டும். இதன்போது அன்பர்கள் போற்றி ஓம் நமச்சிவாய, ஓம் நமோ நாராயணாய, வெற்றிவேல் முருகனுக்கு அரோஹரா என்று கோஷங்கள் போட வேண்டும்.
அதற்குப் பிறகு திருக்குடங்கள் விமானத்தில் ஏறி திருக்குட நன்னீராட்டு நடைபெறும். மூலவர் விமானம், ராஜ கோபுரம், திருச்சுற்றுத் தெய்வங்களின் கோபுரம் இவற்றிலுள்ள விமானங்களுக்கும் ஒரே நேரத்தில் திருக்குட நன்னீராட்டலாம். விமான கலசத்திற்கு ஆனைந்து ஆட்டித் தூய்மை படுத்திய பிறகு ஞானவாள் மூலம் அருள்சக்தியை ஏற்றிய பிறகு, வருகைப்பதிகம் பாடிப், பிறகு நன்னீராட்டு நடைபெற வேண்டும்.
நன்னீராட்டு நடைபெற்ற பிறகு மூலவர் திருக்குட நன்னீராட்டு, விமானங்களுக்கு நீராட்டு முடிந்த பிறகு மூலவருடைய திருமேனிகளுக்கு அபிஷேகம் செய்யவேண்டும். அதற்குப் பிறகு ஊர்திகள், வாகனங்கள் அவற்றிற்கும் திருக்குட நன்னீராட்டு செய்யவேண்டும். வாகனங்களுக்குப் பிறகு பலிபீடம், அதற்குப் பிறகு கொடிமரம் ஆகியவற்றிற்கும் நன்னீராட்டு நடைபெறும்.
இதன்பிறகு சுற்றுத் தெய்வங்களுக்கு உண்டான திருக்குட நன்னீராட்டு அபிஷேகம் நடைபெறும்.
இதற்குப் பிறகு மகாஅபிஷேகம். இதைப் பெரும் திருமஞ்சனம் என்பார்கள். தெய்வங்களுக்கு உண்டான அலங்காரங்களைக் களைத்துவிட்டு திருமஞ்சனப் பொருள்களால் பெரும் திருமஞ்சனம் என்பதை ஆட்டவேண்டும். இதில் நன்னீர், ஆனைந்து, திருமஞ்சனப்பொடி, மாப்பொடி, பஞ்சாமிர்தம், நெய், பால், தயிர், தேன், கரும்புச்சாறு, பழச்சாறு, இளநீர், சந்தனம், பன்னீர், திருநீறு, பொன்மணிகள், சங்குநீர் ஆகியவற்றால் அபிஷேகம் செய்யவேண்டும்.
அதற்குப் பிறகு ஆடை, வஸ்த்திரம். அதற்குப் பிறகு மலர்மாலை சூட்டவேண்டும். பிறகு பதின்மங்கலக் காட்சி; தசதரிசனம் என்று பெயர். 10 வகை மங்கலப் பொருள்களைத் தெய்வத்திற்கு காட்ட வேண்டும். கண்ணாடி, துறவி, பசு, மலர், செல்வம், நிறைகுடம், விசிறி, திருவிளக்கு, கன்னிப்பெண், திருக்கோவில் பொறுப்பாளர். இந்தப் பதின்மங்கலக் காட்சி வழிபாடு முடிந்த பிறகு தூபம், திருவிளக்கு, சுவையமுது இவற்றைக் காட்டி, பேரொளி வழிபாடு செய்யவேண்டும்.
பேரொளி வழிபாட்டிற்குப் பிறகு 16 வகையான உபசாரங்கள் செய்வார்கள். இதில் கண்ணாடி, குடை, சந்திரகளம், சூர்யகளம், விசிறி, வெண்சாமரம், ஆலவட்டம் ஆகியவற்றைக் காண்பித்து ராஜ உபசாரம், தேவ உபசாரம் செய்வார்கள். அவற்றைக் காண்பித்து பேரொளி வழிபாடு செய்து, அனைவருக்கும் தீர்த்தம், திருநீறு, அமுது வகைகள் பிரசாதம் முதலியவை கொடுக்க வேண்டும்.
அனைவரும் காப்புக்களைக் களைய வேண்டும். இத்துடன் கும்பாபிஷேகம் நிறைவு பெறுகிறது. இதற்கு பிறகு மண்டல வழிபாடு 48 நாட்கள் செய்வார்கள்.
ஓம் சக்தி.