மூலவர்: யோக நரசிம்மர், சோளிங்கர்
தாயார்: அமிர்தவல்லி
உற்சவர்: பக்தவத்சலம், சுதாவல்லி
தீர்த்தம்: அமிர்த தீர்த்தம், தக்கான்குளம்
புராண பெயர்: திருக்கடிகை, சோளசிம்மபுரம்
ஊர்: சோளிங்கர், வேலூர் மாவட்டம்
பெருமாளின் மங்களாசாசனம் பெற்ற 108 திவ்ய தேசங்களில் இது 65 வது திவ்ய தேசம். இங்கே நரசிம்மரும் ஆஞ்சநேயரும் யோகாசனத்தில் அமர்ந்திருப்பது சிறப்பு. சோளிங்கர் திருத்தலம் வேலூர் மாவட்டத்தில் உள்ளது. இங்கு 500 அடி உயரமுள்ள கடிகாசலம் என்ற பெரிய மலைமேல் மூலவரும், அதன் அருகிலுள்ள சிறிய மலையில் சங்கு சக்கரத்துடன் ஆஞ்சநேயரும் அருள்பாலிக்கிறார்கள். சுவாமி ஸ்ரீ சாளக் கிராம மாலை அணிந் துள்ளார்.
நரசிம்மரின் அவதாரத்தைத் தரிசிப்பதற்காக வாமதேவர், வசிஷ்டர், கச்யபர், அத்திரி, ஜமத்கனி, கவுதமர், பரத்வாஜர் ஆகிய சப்தரிஷிகளும் இங்கே வந்து தவமிருந்தார்கள். ஒரு காலத்தில் விசுவாமித்திரர் இங்கே நரசிம்மரை வழிபட்டதாக ஐதீகம். ராமர் ஆஞ்சநேயரிடம் இந்த மலையில் உள்ள ரிஷிகளுக்கு அரக்கர்களால் ஏற்படும் இடைஞ்சலைப் போக்கி வை என்றார். அதன்படி ஆஞ்சநேயர் இங்கு வந்து காலன், கேயன் என்னும் இரு அரக்கர்களுடன் சண்டை செய்தார். ராமரை வழிபட்டு சங்கு சக்கரங்களைப் பெற்று அதன் மூலம் அரக்கர்களை அழித்தார். பிறகு பெருமாள் முனிவர்களின் விருப்பப்படி நரசிம்ம மூர்த்தியாகக் காட்சி கொடுத்தார். இதைக் கண்டு களித்த ஆஞ்சநேயரிடம், நீ எனக்கு முன்பாக கையில் சங்கு சக்கரத்துடன் யோகத்தில் அமர்ந்து இரு என்று கூறினார். அதன்படி ஆஞ்சநேயர் நரசிம்மர் கோயில் உள்ள மலைக்கு அருகில் உள்ள சிறிய மலையில் யோக ஆஞ்சநேயராக இருக்கிறார்.
பேயாழ்வார், திருமங்கையாழ்வார், ஸ்ரீமந்நாதமுனிகள், திருக்கச்சிநம்பிகள், இராமனுஜர், மணவாள மாமுனிகள் ஆகியோர் பாடியுள்ளனர்.
கார்த்திகை திருவிழா, சித்திரை பிரம்மோற்சவம், வைகாசி நரசிம்ம ஜெயந்தி, திருவாடிப்பூர உற்சவம், ஆவணி பவித்ரோற்சவம், புரட்டாசி நவராத்திரி, ஐப்பசி மணவாள மாமுனி உற்சவம், மார்கழி பகல்பத்து ராப்பத்து உற்சவம், தைப்பொங்கல் என்று அனேக உற்சவங்கள் இங்கு சிறப்பு.
1305 படிக்கட்டுகளோடு மலை மீது அமைந்த அழகான தலம். மலைப்பாதைக்கு அருகில் வழிநெடுக கற்களை ஒன்றின் மேல் ஒன்றாகக் கோபுரம் போல் கட்டினால் உடனே வேண்டுதல் நிறைவேறுகிறது என்பது நம்பிக்கை.
இங்கே பிறந்த தொட்டாச்சாரியார் ஆண்டுதோறும் காஞ்சிபுரம் வரதராஜப்பெருமாளைத் தரிசிப்பதை வழக்கமாகக் கொண்டிருந்தார். ஒரு முறை உடல் நிலை சரியில்லாததால் காஞ்சிபுரம் செல்ல முடியவில்லை. இங்குள்ள தக்கான் குளக்கரையில் அமர்ந்து காஞ்சியில் நடக்கும் கருட சேவையை நினைத்தார். உடனே பெருமாள் கருட வாகனத்தில் இங்குள்ள நரசிம்ம குளத்தில் தரிசனம் தந்தார். பராங்குச சோழன் கட்டிய கோயில்; 3ஆம் நூற்றாண்டைச் சேர்ந்தது.
சோளிங்கர் 631102.