தலம் விராலிமலை. மூலவர் சண்முகநாதர், ஆறுமுகப்பெருமான். வள்ளி, தேவசேனாவுடன் வீற்றிருக்கிறார். தலவிருட்சம் விராலிச் செடி. தீர்த்தம் நாக தீர்த்தம். தீர்த்தத்தினுடைய நடுவே நாகப்பிரதிஷ்டை உள்ளது. இந்த ஊர் புதுக்கோட்டை மாவட்டத்திலே அமைந்திருக்கிறது.
முன்பொரு காலத்திலே, ஒரு குராமரம் ஒன்று இருந்ததாம். வேடன் ஒருவன் புலியை விரட்டிக்கொண்டு வந்திருக்கிறான். இந்த குராமரம் இருக்கின்ற இடத்திலே, அந்தப் புலி காணாமல் போய் விடுகிறது. அந்தக் குராமரம் இருக்கும் இடத்தில்தான், முருகப்பெருமான் இருப்பதாக எண்ணி, வழிபாடு நடந்து வருகின்றது.
வயலூரிலே இருந்த அருணகிரிநாதரை, விராலிமலைக்கு வா! என்று முருகன் அழைத்தார். அருணகிரிநாதரும் அவ்வாறே வந்தார். ஆனால், அவருக்கு இடம் தெரியவில்லை. தவித்துக் கொண்டிருக்கும்போது வேடன் உருவத்தில் முருகப்பெருமானே வந்து, விராலிமலைக்கு வழி சொல்லி அழைத்துச்சென்று, மலையை அடைந்தவுடன் மறைந்துவிடுகிறார்.
இந்த மலையில்தான் அருணகிரிநாதருக்கு அஷ்டமாசித்தியை, அதாவது கூடுவிட்டுக் கூடுபாயும் வித்தை முதலான உள்ள அஷ்டமாசித்திகளை, முருகப்பெருமானே அருணகிரிநாதருக்கு அருள்கிறார்..
திருப்புகழிலே அருணகிரிநாதர் இந்தத் தலத்தை 18 முறை பாடியிருக்கிறார். புராணத்திலே பிரம்மாவினுடையத் தலையை சிவன் கொய்துவிடுகிறார். அப்போது பிரம்மாவினுடைய மகனான நாரதர், என் தந்தை தவறு செய்யவில்லை என்று வாதம் செய்தார். அதனால் சிவநிந்தனை அவருக்கு நேர்ந்துவிட்டது. அதனால் அவருடைய தம்புராவும் வளைந்துவிட்டது. இந்தத் தலத்தில் முருகப்பெருமானை வணங்கி விமோசனம் பெற்றார். நாரதர் உற்சவராகவும் இங்கு காணப்படுகிறார். திருவிழாவின்போது ஸ்வாமியின் முன்பு இவருடைய உலாவும் நடக்கிறது.
விராலிமலை மயில்கள் நிறைந்த மலை. ஆறுமுகப்பெருமான் வீற்றிருக்கின்ற தெற்குப் பார்த்த மயில், அசுரமயில் என்று அழைக்கப்படுகிறது. இந்த மலையே மயில் உருவத்தில் இருப்பதாக எண்ணுகிறார்கள். திருவண்ணாமலையில் மிக அதிக அளவில் சித்தர்கள் தவம் செய்து இருந்தனர். அதற்கு ஈடாக, விராலிமலையிலும் ஞான சித்தர்கள் தவம் செய்ததாக, இன்னமும் செய்துக் கொண்டிருப்பதாக வரலாறு. சனகர், சனந்தனர், சனாதனர், சனத்குமாரர் ஆகிய நால்வரும் த்யானம் செய்தபோது, முருகனே தோன்றி அருள்தந்த திருத்தலம் விராலிமலை.
இந்தக் கோவிலிலே ஒரு அதிசயமான நைவேத்தியம் நடக்கிறது. மாலை வேளையிலே முருகப்பெருமானுக்கு சுருட்டு நைவேத்தியம் செய்கிறார்கள்.
ஒரு காலத்தில் திருப்பணி நடந்தபோது, கருப்பமுத்து என்ற பக்தர் இருந்தார். காற்றுடன் மழை பெய்தது. அதனால் அவரால் ஆற்றைக் கடக்க முடியவில்லை. முருகனைப் பிரார்த்தித்தார். குளிர் தாங்காமல் அவர் சுருட்டைப் பற்ற வைத்துவிட்டார். அப்போது அவருக்கு அருகே வந்தவரும் நடுங்கியபடியே வந்தபோது உங்களுக்கும் சுருட்டு வேண்டுமா? என்று கருப்பு முத்து கேட்டார். வந்தவரும் சுருட்டை வாங்கிக்கொண்டு விட்டார். ஆற்றைக் கடப்பதற்கு அவர் உதவி செய்தார். அதற்குப் பிறகு அவரைக் காணவில்லை.
கோவிலில் தரிசனம் செய்தபோது முருகனின் முன்னால் சுருட்டு இருப்பதைக் கண்டு அதிர்ச்சி அடைந்தார். அங்கிருந்தவர்களும் அவர் கூறியதைக் கண்டு, ஆச்சர்யப்பட்டனர். முருகப்பெருமானே, அன்று முதல் சுருட்டை நைவேத்தியமாக ஏற்றுக்கொள்ளும் பழக்கமும் ஏற்பட்டது.
இடையிலே, புதுக்கோட்டை மஹாராஜா அதற்கு தடை விதித்தபோது முருகப்பெருமான் அவருடையக் கனவிலே தோன்றி, சுருட்டுப் பழக்கத்திற்காக நான் ஏற்றுக்கொள்ளவில்லை. அன்பனுடைய பக்திக்காகவே அதை ஏற்றுக்கொண்டேன். இந்த சுருட்டு நைவேத்தியம் தொடர்ந்து நடக்கட்டும் என்று முருகப்பெருமானே சொன்னார்.
இந்தத் தலத்திலே காவடி எடுத்தல், பால்குடம் எடுத்தல், அங்கப் பிரதக்ஷிணம் செய்தல், சண்முக வேள்வி, சண்முகார்ச்சனை, அன்னதானம் செய்தல், கார்த்திகை விரதம் இருத்தல் என்று சகலவிதமான விரதங்களும், நேர்த்திக்கடன்களும் நடைபெறுகின்றன.
இந்தத் தலத்தினுடைய STD CODE – 04322.
விராலிமலையினுடைய PINCODE – 621316.
வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா!