திருவீழிமிழலை வீழிநாதேஸ்வரர். உற்சவர் கல்யாண சுந்தரமூர்த்தி. மாப்பிள்ளை சுவாமி என்று அழைக்கப்படுகிறார். அம்பாள் சுந்தர குஜாம்பிகை அழகிய மாமுலையம்மை. தலவிருட்சம் வீழிச்செடி. தீர்த்தம் விஷ்ணு தீர்த்தம் முதலாய 25 தீர்த்தங்கள். திருவாரூர் மாவட்டத்திலே அமைந்துள்ளது.
திருஞானசம்பந்தர், அப்பர், சுந்தரர் ஆகிய மூவராலும் பாடப்பட்டது. அருணகிரிநாதர் பாடியுள்ளார். சேந்தனாரும் பாடியுள்ளார். காளமேகப் புலவரும் பாடியுள்ளார்.
சிவன் ஸ்வயம்பு மூர்த்தி. இங்கு பாதாளநந்தி காணப்படுகிறது. இறைவன் காசி யாத்திரைக்குக் கிளம்பும் மாப்பிள்ளைக் கோலத்தில் இருப்பதால் மாப்பிள்ளை சுவாமி எனப்படுகிறார். மகாமண்டபம் திருமணமண்டபத்தைப் போல பந்தக்காலுடன் காட்சியளிக்கிறது. இங்கு அழகிய வேலைப்பாடுகள் நிறைந்த வௌவால் நத்தி மண்டபமும் அமைந்துள்ளது.
இந்தக் கோவிலுக்கு எதிரிலே மிகப்பெரிய குளம் உண்டு. இது மாடக்கோவில் அமைப்புடையதாகும். திருமணத்தடை நீங்குவதற்காகப் பிரார்த்தனைகள் தினந்தோறும் நடைபெறுகின்றன.
காத்யாயன முனிவர் என்பவர் தனக்குக் குழந்தையாக, பார்வதி தேவியே வரவேண்டும் என்று தவமிருந்தார். பார்வதி மகளாகப் பிறந்து காத்யாயினி என்ற பெயருடன் வளர்ந்து வந்தார். பெண்ணிற்குத் திருமண வயது வந்ததும், இறைவனே கார்த்யாயனியைத் திருமணம் செய்துகொள்ள வேண்டும் என்று முனிவர் வேண்டும்போது, சிவபெருமானே எழுந்தருளித் திருமணம் செய்துக்கொண்டார்.
ஒரு காலத்திலே இந்தத் தலம் முழுவதும் வீழிச்செடி என்ற ஒரு செடியால் நிறைந்திருந்தது.
அதிலே சந்தனம், செண்பகம், பலா, விளா ஆகிய மரங்களும் இருந்தன. மிழலைக் குறும்பர் என்ற வேடுவர் இந்தத்தலத்தின் இறைவன் மேல் பூசை செய்து தினமும் விளாங்கனியைப் படைத்தார்கள். அவரது அன்பிற்கு இரங்கி அந்த வேடுவர்களுக்கு அஷ்டமாசித்திகளைச் சிவபெருமான் வழங்கினார். வேடுவர்களால் படைக்கப்பட்ட விளாங்கனி இன்றும் வீழிநாதர் பாதத்திலே காட்சியளிக்கிறது.
அதனால்தான் வீழிச்செடி, மிழலைக் குறும்பர் என்பதற்கு ஏற்ப, வீழிமிழலை என்று அழைக்கப்படுகிறது.
ஞானசம்பந்தரும், திருநாவுக்கரசரும் இந்தத் தலத்திலே வந்து தங்கியிருக்கும்போது, பஞ்சம் ஏற்பட்டது. பஞ்சம் போக்குவதற்காக, இருவரும் பாட்டுப்பாடும் போது, அவர்களுக்காகச் சிவபெருமான் படிக்காசு கொடுத்தார். கிழக்குப் பீடத்தில் உள்ளது சம்பந்தருக்கும், மேற்குப் பீடத்தில் உள்ளது திருநாவுக்கரசருக்கும் வழங்கினார். படிக்காசு விநாயகர் என்று விநாயகர் அருள்பாலிக்கிறார்.
ஒருமுறை மகாவிஷ்ணுவினுடைய சக்ரத்தை, ஜலந்தரன் என்ற அரக்கன் எடுத்துச் சென்றுவிட்டான். பரமசிவனிடம் விஷ்ணு வேண்டியபோது வீழிச்செடிகள் இருந்த வீழிமலைக்குச் சென்று பூஜை செய் என்று சொன்னார்.
தினந்தோறும் 1008 தாமரை மலர்களால் சிவபெருமானை அர்ச்சனை செய்யும்போது, ஒருநாள் ஒரு தாமரை மலர் குறைந்தது. அதனால் கமலக்கண்ணன் என்ற பெயருடைய விஷ்ணு, தனது ஒரு கண்ணையே தாமரை மலராக எடுத்து, சிவபெருமானைப் பூஜித்தார். அதனால் நேத்ரார்பணேஸ்வரர் என்றப் பெயரும் இந்த ஈஸ்வரனுக்கு உண்டு.
கண்மலர் காணிக்கை இன்றைக்கும் வழக்கத்தில் இருந்து வருகிறது. ஸ்ரீ விஷ்ணு சிவனுக்குப் பூஜை செய்த கண்மலர் இன்றும் சிவனுடைய பாதத்தில் இருப்பதைக் காணலாம். பூஜைக்கு மெச்சிய சிவன் விஷ்ணுவுக்குச் சக்ராயுதத்தைக் கொடுத்து அருளியிருக்கிறார்.
இந்தத் தலத்தில் வழிபட்டவர்கள் நம்பியாண்டார் நம்பி, சேக்கிழார், ரதிதேவி, வசிஷ்டர், காமதேனு, மனு ஆகியோர் ஆவர். இறைவனுக்கு விழியழகு ஈசர், விழியழகர் என்ற பெயரும் உண்டு.
மேலும், இந்தத் தலத்திற்கு பூகைலாசம், கல்யாணபுரம், அஞ்சாக்சரபுரம், தட்சிணகாசி, ஷண்மங்கலஸ்தலம், ஸ்வேதகாநனம், ஆகாசநகரம், வனசாரண்யம், நேத்ரார்ப்பணபுரம், தேஜினிவனம் என்று 10 பெயர்கள் உண்டு.
மிக அதிகமான பதிகங்களைப் பெற்ற தலங்களுள் திருவீழிமலையும் ஒன்று. அதனால்தான் காழிபாதி வீழிபாதி, என்று சொல்வார்கள். இந்த விமானம் விண்ணிழி விமானம் எனப்படும். இந்த விண்ணிழி விமானத்தில், சீர்காழியில் இருக்கும் காட்சியை ஞானசம்பந்தருக்கு இறைவன் அருளினார். இந்தத் தலபுராணம் திருவாவடுதுறை ஆதினத்தின் 2-வது குருமூர்த்திகளான ஸ்ரீ மறைஞான தேசிகரின் மாணவரான மெய்ஞானமுனிவரால் இயற்றப்பட்டது.
சம்பந்தரும், அப்பரும் படிக்காசுப் பெற்று அவற்றைக் கடைத்தெருவிலே கொண்டு சென்று பொருளை வாங்கி வாருங்கள் என்று சொன்னபோது அவர்களுடைய சீடர்கள் சென்று வாங்கிய கடைத்தெரு இன்று அய்யம்பேட்டை என்று வழங்கப்படுகிறது. அங்கேயுள்ள சுவாமியின் பெயர் செட்டியப்பர். அம்பாள் படியளந்த நாயகி. அய்யம்பேட்டையினுடைய உற்சவமூர்த்தி தராசு பிடித்த கையோடும், அம்பாள் படியைப் பிடித்தக் கையோடும் காட்சி தருகிறார்கள்.
இந்தத் தலவிருட்சமானது ஒவ்வொரு யுகத்திற்கும் மாறுகிறது என்று சொல்வார்கள். முதலில் சந்தனமாகவும், பிறகு செண்பகமாகவும், பிறகு வீழிச்செடியாகவும் உள்ளது. அடுத்த யுகத்திலே இது பலாமரமாக மாறும் என்று சொல்லியிருக்கிறார்கள். கோவிலைச் சுற்றி பத்ம தீர்த்தம், புஷ்கரணி, விஷ்ணு தீர்த்தம், திருவேணி சங்கமம், குபேர தீர்த்தம், சுந்தர தீர்த்தம், வருண தீர்த்தம், லக்ஷ்மி தீர்த்தம், வசிஷ்ட தீர்த்தம் போன்ற 25 தீர்த்தங்கள் உள்ளன.
இது பூந்தோட்டத்திலிருந்து கும்பகோண்ம் செல்லும் பேருந்துகளில் பூந்தோட்டத்திலிருந்து 10 கி.மீ தொலைவில் அமைந்துள்ளது. மேலும் இந்தக் கோவிலிலே மிக அதிகமாகக் கல்வெட்டுகள் காணப்படுகின்றன.
68 கல்வெட்டுகள் முதலாம் குலோத்துங்கன் காலம், முதலாம் பராந்தகன் காலம், சுந்தர பாண்டியன், வீரபாண்டிய தேவன், விஜயநகரப் பரம்பரை காலம் போன்ற பலவிதமான கல்வெட்டுகள் இங்கு உள்ளன.
ராஜேந்திர சோழர் கால கல்வெட்டும் இருக்கின்றது. மூன்றாம் இராஜராஜன், ஜடாவர்மன், சுந்தரபாண்டியன் ஆகியோருடைய காலத்தினுடைய கல்வெட்டுகளும் காணப்படுகின்றன.
இது திருவாவடுதுறை ஆதீன அருள் ஆட்சிக்கு உட்பட்ட திருக்கோவில் ஆகும்.
PINCODE - 609505.
STDCODE – 04366.
சிவ சிவ.