வேப்பூர் அருள்மிகு வசிஷ்டேஸ்வரர் கோவில். அம்மன் பெயர் பாலகுஜாம்பிகை. இது வேலூர் மாவட்டத்திலே அமைந்திருக்கின்றது. இங்கு வள்ளி, தேவசேனாவுடனான சுப்பிரமணிய சுவாமியை அருணகிரிநாதர் பாடியிருக்கிறார்.
இவ்வூரில் வேப்ப மரங்கள் நிறைந்திருந்ததால், இந்த ஊர் வேம்பூர் என்று அழைக்கப்பட்டு, பின்பு வேப்பூர் என மருவியுள்ளது.
இந்தத் தலத்தைச் சுற்றியுள்ள பகுதிகளில் யாரேனும் இறந்துவிட்டால் 3-ம் நாள் சிவனுக்கு விசேஷ பூஜை நடக்கிறது. நவக்கிரகங்களுக்கு வஸ்திரம் அணிவித்து, மோட்ச தீபம் ஏற்றி, நவ தானியம், நெல்பொரி படைத்து வழிபடுகிறார்கள். பாலாற்றினுடைய தென்கரையிலே அமைந்த கோவில் இது.
சிவனுடைய சன்னிதி மண்டபத்திலே வசிஷ்டர் காட்சியளிக்கிறார். வசிஷ்டருக்குப் பூஜை செய்த பிறகே, சிவனுக்குப் பூஜை நடக்கிறது. சிவராத்திரியன்று இரவிலே இருவருக்கும் விஷேச பூஜை உண்டு. உத்ரட்டாதி நட்சத்திரத்தன்று வசிஷ்டருக்குச் சிவன் காட்சி தந்ததாக நம்பிக்கை. இந்தத் தலத்திலே பாலகுஜாம்பிகை தனி சன்னிதியிலே இருக்கின்றாள்.
திங்கள் கிழமைகளிலே மாலை 6 மணிக்கு, சிவன் சன்னிதியில் உள்ள எல்லா எரியும் விளக்குகளையும் அணைத்துவிட்டு, மீண்டும் ஏற்றுகிறார்கள். இது இந்த ஊரிலே நடக்கின்ற ஒரு வழக்கம்.
சப்தரிஷிகளில் ஒருவரான வசிஷ்டர் வேம்பு வனமாக இருந்த வனத்திலே சிலகாலம் தங்கி, சிவலிங்க வழிபாடு செய்தார். சிவன் அவருக்கு காட்சி தந்து லிங்கத்தில் ஐக்கியமானார். அதனால் இந்தத் தல சிவனுக்கு வசிஷ்டேஸ்வரர் என்று பெயர். இந்தத் தலத்தில் உள்ள முருகன் சன்னதியை அருணகிரிநாதர் பாடியிருக்கிறார்.
ஓம் முருகா.