10ஆவது திவ்யதேசம், தஞ்சாவூர் மாவட்டம்
மூலவர்: வல்வில் ராமன், சக்கரவர்த்தி திருமகன்
அம்மன்/தாயார்: பொற்றாமரையாள், ஹேமாம்புஜவல்லி
தல விருட்சம்: புன்னை மரம்
தீர்த்தம்: ஜடாயு தீர்த்தம்
பொதுவாக ராமர் நின்ற கோலத்தில் தான் காட்சி தருவார். ஆனால் இங்கு ராமர் சயன கோலத்தில் (படுத்த நிலையில்) அருள்பாலிக்கிறார்.இக்கோயில் சோழர்களால் கட்டப்பட்டது. திருமங்கை ஆழ்வாரால் மங்களா சாஸனம் செய்யப் பட்டது. வைகுண்ட ஏகாதசி விமரிசையாகக் கொண்டாடப் படுகிறது.
சீதையை ராவணன் கவர்ந்து சென்றபோது ஜடாயு அவனுடன் போரிட்டார். ஜடாயுவை ராவணன் வாளால் வெட்டினான். ஜடாயு ராமா, ராமா என முனகியபடி விழுந்து, குற்றுயிராகக் கிடந்தார். ராம, லட்சுமணர்கள் முனகல் சத்தத்தை கேட்டு அருகில் சென்று பார்த்தார்கள்.ராவணன் சீதையை கவர்ந்து சென்ற விஷயத்தைக் கூறிவிட்டு,ஜடாயு உயிர் துறந்தார். ராமன் ஜடாயுவுக்கு ஈமக்கிரியை செய்ய எண்ணினார். ஈமக்கிரியை செய்யும் போது மனைவியும் அருகில் இருக்க வேண்டும் என்பது விதி. சீதை இல்லை என்பதால் மானசீகமாகச் சீதையை நினைத்தார். உடனே சீதையின் மறு அம்சமாகிய பூமாதேவி காட்சியளித்தாள். பிறகு ஜடாயுவிற்கு செய்ய வேண்டிய ஈமக்கிரியைகளைச் செய்தார்.
திருமங்கையாழ்வார் இங்கே வந்த போது, வேறு ஏதோ தெய்வம் இருப்பதாக நினைத்துக், கவனிக்காமல் சென்று விட்டார். அப்போது ஒரு ஒளி தோன்றி, சங்கு சக்ரதாரியாக ராமபிரான் காட்சியளித்தார். இதைக்கண்ட ஆழ்வார், அறிய வேண்டியதை, அறியாமல் சென்று விட்டேனே என்று 10 பாசுரம் பாடினார். தந்தையாகிய தசரதருக்குச் செய்ய வேண்டிய இறுதிக் காரியத்தைச் செய்ய முடியாவிட்டாலும், ஜடாயுவிற்குச் செய்ததை நினைத்து ராமர் தன் துக்கத்தைத் தணித்துக் கொண்டார்.
இத்தலப் பெருமாளை ஜடாயு ஆகியோர் தரிசனம் செய்துள்ளார். இத்தலப் பெருமாள் கிழக்கு நோக்கி புஜங்க சயனத்தில் அருள்பாலிக்கிறார்.
நவ க்ரஹங்களில் புதனுக்குரிய பரிகார தலமாக விளங்குகிறது. பித்ருக்களுக்குப் பரிகாரம் இங்கே செய்வது உகந்தது. திருமணத்தடை உள்ளவர்கள் இங்கு வழிபாடு நடத்தினால் திருமணம் கைகூடும் என்பது நம்பிக்கை.
PIN Code: 612301
STD Code:
ராம நாம மஹிமை - சொற்பொழிவு - ஸ்ரீமதி. சரண்யா விஸ்வநாத்
சொற்பொழிவின் உரையைப் படிக்க, இங்கே க்ளிக் செய்யவும்.
நாராயண நாராயண.