உத்திரமேரூர். இது காஞ்சிபுரம் மாவட்டத்தில் அமைந்துள்ளது. மூலவர் பால சுப்ரமணிய சுவாமி, அம்மன் கஜவள்ளி. இங்கு பெருமான் ஊன்றிய வேலைச் சிலை வடிவிலே தரிசிக்கலாம்.
இந்தத் தலத்திலே வள்ளியும், தெய்வானையும் ஒன்றாகச் சேர்ந்து கஜவள்ளி அம்மனாகக் காட்சி தருவது அபூர்வமாகும்.
ஒரு முறை சேயாறு (இப்பொழுது செய்யாறு) என்ற ஆற்றினுடைய கரை ஒரத்திலே காச்யப முனிவர் தவம் செய்து கொண்டிருந்தார். அப்பொழுது மலையன், மாகறன் என்ற அசுரர்கள், அவரது வேள்விக்கு இடையூறு செய்தனர். காச்யப முனிவர் இறைவன் கடம்ப நாதரிடம் முறையிட்ட பொழுது, சிவபெருமானும் கவலை வேண்டாம், என்னுடைய இளைய மகன் முருகனை அனுப்பி வைக்கிறேன், என்று சொல்லி முருகனுக்குத் துணையாக வாள் படையையும் அனுப்பி வைத்தார்.
முதலில் முருகப் பெருமான் வந்து இரண்டு அசுரர்களுக்கும் தவறு செய்யாதீர்கள் என்று உபதேசம் செய்தாலும், அசுரர்கள் அதைக் கேட்கவில்லை. முருகப்பெருமான் கோபம் கொண்டு, வேலாயுதத்தை நோக்கி, நீ காச்யப முனிவரது வேள்விச் சாலையின் கிழக்குத் திசையிலே, ஊன்றி நிற்பாயாக; அசுரர்களைக் கட்டுப் படுத்துவாயாக என்று கூறியவுடன், வேலும் அவ்வாறே ஊன்றி நின்றது. மாகறன் சண்டைக்கு வந்த பொழுது, சிவபெருமான் கொடுத்த வாளால், முருகன் மாகறனுடைய தலையை வெட்டினார். தம்பி இறந்து போன காரணத்தினால் கோபம் கொண்ட மலையனும், தன்னுடைய தாய் ஆகிய மாயாவியிடம் இருந்து மந்திரங்களைப் பெற்று, போருக்கு வந்தான். அவனையும் முருகப்பெருமன் வாளால் வெட்டி வீழ்த்தினார்.
மலையனுடைய தலை விழுந்த இடம் மலையன்களம்; இப்பொழுது மலையான்குளம் என்று அழைக்கப்படுகிறது. மாகறன் அழிக்கப்பட்ட இடம் தான் இன்று மாகறல் என்ற பெயருடன் விளங்குகிறது.
காச்யப முனிவருடைய தவத்தைக் காத்த அந்த ஊன்றிய வேலை எல்லாரும் தரிசனம் செய்ய வேண்டும். இளையனார் (இளையவராகிய முருகன்) இங்கே வந்து யாகத்தைக் காத்ததினால், இந்தத் தலம் இளையனார் வேலூர் என்றும் அழைக்கப்படுகிறது.
முருகப்பெருமானுடைய திருமேனி சுமார் 6 அடி உயரமாகும். இந்தத் தலத்திலே சண்டிகேஸ்வரர், சுமித்திர சண்டிகேஸ்வரராகக் காட்சி தருவது விசேஷமாகக் கருதப்படுகிறது.
உத்திரமேரூர் தமிழ்நாட்டினுடைய பண்பாட்டிலே மிக முக்கியமான ஊராகும். கல்வெட்டுகளும் செப்பேடுகளும் இங்கு மிக அதிகம் காணப்படுகின்றன.
வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா.