உஜ்ஜைனி மஹாகாளேஸ்வரர், அம்பாளுடைய பெயர் சங்கரி, ஹரசித்திதேவி. தலவிருட்சம் ஆலமரம். சுக்ரநதி, சூர்யகுண்டம், நித்யபுஷ்கரணி, கோடிதீர்த்தம் ஆகியவை தீர்த்தங்கள். இதனுடைய புராணப்பெயர் அவந்திகா நகர். உஜ்ஜைனி மாவட்டம், மத்தியப் பிரதேச மாநிலம்.
சிவபெருமானுடைய 12 ஜோதிர்லிங்கங்களிலே இதுவும் ஒன்று. அம்மனுடைய சக்தி பீடங்களிலே இது மஹோத்பலாபீடம் ஆகும்.
7 மோட்ச நகரங்களான அயோத்தி, மதுரா, ஹரித்துவார், காசி, காஞ்சி, அவந்திகா, துவாரகை என்பனவற்றில் அவந்திகா நகரே உஜ்ஜைனி ஆகும். இங்கு கிருஷ்ண பரமாத்மா, குருவான சாந்தீபனி முனிவரிடம் பலராமன், சுதாவர் ஆகியோருடன் படித்தார். வானசாஸ்த்திரம் படித்ததாக நம்பிக்கை. தேவாமிர்தம் சிந்திய 4 புண்ணிய ஊர்களில் உஜ்ஜைனியும் ஒன்றாகும். இங்கு ஜெயசிம்மன் நிறுவிய வான ஆராய்சி நிலையமும் இருக்கின்றது. இரயில் நிலையத்திலிருந்து கோவில் 2 கி.மீ தொலைவிலே உள்ளது.
ஒருமுறை பூஜித்த பொருள்களை நிர்மால்யம் என்பார்கள். புதிதாக அலங்கரிப்பது மரபாகும். இந்த சிவன் கோவிலிலே ஜோதிர் லிங்கத்துக்கு வில்வம், பிரசாதம் போன்றவற்றை மீண்டும் உபயோகிக்கிறார்கள். மகாகாளவனம் என்பது கந்த புராணத்தில் கூறப்படும் பெயராகும். ‘உத் ஜைன’ என்பார்கள். அதுவும் ஒரு பெயர்க்காரணம். ஜைன சமயத்தை உச்ச நிலைக்குக் கொண்டு வந்த நகரம்.
திரிபுர அசுரர்களை சிவபெருமான் வெற்றி கொண்ட புனிதத் தலம் உஜ்ஜைனி ஆகும். இங்கு சித்தி வடம் என்ற அதிசய ஆலமரம் ஒன்று உள்ளது. பல நூறு வருடங்களாக இது சிறியதாகவே உள்ளது. இங்கு இராமயண காலத்திலே ராமர் வந்து நீராடியதால் இராமர்காட் என்ற குளியல் துறையும் இருக்கின்றது. தமிழ் இலக்கியத்திலே உதயணன் கதை என்பது உஜ்ஜைனியில் நடந்தது என்கிறார்கள்.
பட்டி, விக்ரமாதித்தர் ஆகியோர் காளியிடம் வரம் பெற்ற தலம். இங்கு வான ஆராய்ச்சி நிலையம் உள்ளது. சில கட்டடங்களில் உள்ள நிழலைக் கொண்டே மணி, நட்சத்திரம், திதி, நிமிடம் ஆகியவற்றைத் துல்லியமாக அறிய முடியும். சாலி வாகன சகாப்தம் என்ற ஒரு சகாப்தத்தையே உருவாக்கிய அரசர் இங்கு ஆட்சி செய்துள்ளார்.
அவந்தி மாநகரிலே விலாசன் என்று ஒரு அந்தணன் இருந்தான், சிவபக்தன். தூஷணன் என்பவன் ஒரு மலையிலிருந்து அடிக்கடி நகருக்கு வந்து சூறையாடித் துன்புறுத்தினான். மக்கள் குறையைச் சொன்னபோது, ஒருநாள் விலாசன் பூஜை செய்துக்கொண்டிருந்த சமயம், அரக்கன் வந்து சிவலிங்கத்தை உடைத்தான்.
சிவலிங்கத்திலிருந்து மாகாகாளர் எழுந்தருளி அரக்கனை அழித்தார். மக்கள் மஹாகாளரை இங்கேயே தங்கிவிடு என்று சொல்லியதால், அங்கேயே வேண்டுகோளுக்கு இணங்கித் தங்கிவிட்டார்.
வசுதேவர், தேவகிக்கு பிறந்த 8-வது குழந்தையான மாயாவை அழிப்பதற்காக, கம்சன் அந்தக் குழந்தையை மேலே தூக்கி வாளால் வெட்டப்போனான். அது விண்ணில் பறந்து மகா காளியாக மாறியது. அந்தக் காளி இங்கே வந்து தங்கிய காளி மாதா என்பார்கள்.
ஒருபொழுது கைலாசத்திலே சிவபெருமானும், பார்வதி தேவியும் சொக்கட்டான் விளையாடிக் கொண்டிருந்தார்கள். அப்போது சண்டன், பிரசண்டன் என்ற 2 அசுரர்கள் வந்து நந்தி தேவனையும் துன்புறுத்தி, சிவபெருமானைப் போருக்கு அழைத்தார்கள். சிவபெருமான் வரத்தினால் என்னால் இவனை ஒன்றும் செய்யமுடியாது. பார்வதி தேவிதான் வெல்லமுடியும் என்று பார்வதி தேவியிடம் கேட்டவுடன், பார்வதி தேவி சிவனுடைய சித்தத்தை அறிந்து, மகாகாளியாக மாறினாள்.
நவசக்தி தேவிமார்களையும் தன்னுடன் அழைத்துக்கொண்டு அரக்கனுடன் போரிட்டார். அரக்கர்கள் எருமைக் கடா உருவம் எடுத்தார்கள். நவசக்தி தேவியுடன் சிங்கவாகனத்தில் அமர்ந்து மகாகாளி அரக்கர்களை வதம் செய்தார்.
ஹரன் என்னும் சிவபெருமானுடைய சித்தத்தைப் பூர்த்தி செய்தமையால் மகாகாளிக்கு, ஹரசித்திதேவி என்ற பெயர் ஏற்பட்டது. இந்த ஹரசித்தி தேவி கோவிலிலே இன்னும் வழிபாடு சிறப்பாக நடைபெறுகிறது. விக்கிரமாதித்தனுடைய குலதெய்வம் இந்த ஹரசித்தி தேவியே ஆவார்.
பல மன்னர்கள் தலைநகராகக் கொண்டு ஆட்சி செய்த இடம். உஜ்ஜைனி புராண காலம், சரித்திர காலம், இதிகாச காலம் போன்ற பல காலங்களிலும் சிறப்பு வாய்ந்ததாகும். இங்கும் 12 வருடங்களுக்கு ஒருமுறை கும்பமேளா கொண்டாடப் படுகிறது.
விக்ரமாதித்தனுடைய தலைநகரம் இதுவே. இந்துக்கள், பௌத்தர்கள், ஜைனர்கள் ஆகியோருக்கு இது முக்கியமான யாத்திரைத் தலமாகும். அசோகச் சக்கரவர்த்தி, உஜ்ஜைனி வர்த்தகருடைய மகளையே மனைவியாகத் திருமணம் செய்துக் கொண்டார். மௌரியப் பேரரசினுடைய கிளை தலைமைப் பீடம் இங்குள்ளது. அசோகருடைய கல்வெட்டுகளில் உஜ்ஜைனி பேசப்படுகிறது. பாணினி, ஹியான்சாங்க் போன்றவர்களின் குறிப்புகளிலும் உஜ்ஜைனி காணப்படுகிறது. பதஞ்சலி, காளிதாசர், திருமங்கையாழ்வார் ஆகியோர் தங்களுடைய இலக்கிய படைப்பிலே புகழ்ந்து பாடியுள்ளார்கள்.
PINCODE – 456 001.
STD CODE – 0734.
ஓம் சக்தி.