திருச்சி மலைக்கோட்டை உச்சிப்பிள்ளையார் கோவில். தீர்த்தம் காவிரி. சிவாகமப்படி இங்குப் பூஜை நடைபெறுகிறது. திருச்சி மாவட்டத்திலே அமைந்துள்ளது. மலை உச்சிமேல் அமைந்துள்ளதால் உச்சிப்பிள்ளையார் எனப்படுகிறார்.
இந்த மலைக்கோட்டையின் உயரம் 275 அடியாகும். சுமார் 420 படிக்கட்டுகள் உள்ளன. இந்தக் கோவிலுக்குக் கீழே தாயுமானவர் சுவாமி கோவிலிலே இருக்கின்ற ஆயிரம்கால் மண்டபம் மிகவும் சிறப்பு வாய்ந்தது.
6-ம் நூற்றாண்டிலே வாழ்ந்த குணபரன் என்ற மகேந்திரவர்ம பல்லவனுடைய ஆட்சிக் காலத்தில் கட்டப்பட்டதாகக் கல்வெட்டு. தாயுமானவர் கோவில் தேவாரப் பாடல் பெற்ற தலங்களில் ஒன்றாகும்.
இந்த மலைக்கோட்டையிலிருந்துப் பார்த்தால் திருச்சி மாநகரம் முழுவதும் அற்புதமாகத் தெரிகின்றது. அப்பர், ஞானசம்பந்தர், மாணிக்கவாசகர், தாயுமானவர் ஆகியோரால் பாடப்பெற்ற தாயுமானவ சுவாமி கோவிலுக்கு மேலே உச்சிப்பிள்ளையார் கோவில் அமைந்துள்ளது. இந்தக் கோவிலுக்கு செல்லும் வழியிலே குடைந்து எடுக்கப்பட்ட 2 குகைகள் உள்ளன. கிரந்தம், தமிழ் கல்வெட்டுகள் காணப்படுகின்றன. ஒரு குகையிலே 104 செய்யுள்கள் அந்தாதியாக அமைந்திருப்பதைக் காணமுடிகிறது.
புராணப்படி இராமவதாரத்தில் இராவணனை வதம் செய்துவிட்டு சீதையுடன் அயோத்தி செல்கிறார். விபீஷ்ணன், சுக்ரீவன் எல்லோரும் உடன் செல்கிறார்கள். பட்டாபிஷேகம் அயோத்தியில் முடிந்த பிறகு அவரிடம் விடைபெற்றுக் கொண்டு திரும்பும்பொழுது ரங்கநாதர் சிலையை ராமர் விபீஷணனுக்குக் கொடுக்கிறார். அதை எடுத்துக்கொண்டு விபீஷணன் வந்தான். அங்குக் காவிரி கரையிலே ஒரு அழகான சோலை இருந்தது. அப்போது பக்கத்திலே ஒரு சிறுவன் நின்று கொண்டிருந்தான்.
அந்த சிறுவனிடம் ரங்கநாதர் சிலையை வைத்துக்கொள் என்று விபீஷணன் கொடுத்துவிட்டு, சிறிது நேரம் ஓய்வு எடுத்தான்.
விநாயகர் சிறிதுநேரம் கழித்து அந்தச் சிலையைப் பூமியிலே வைத்துவிட்டார். விபீஷணன் வந்து பார்த்தான், அந்த சிறுவனைக் காணவில்லை. ஆனால் சிலையை எடுக்க முடியவில்லை. அதுவே ரங்கநாதராக மாறிவிட்டது. இதனால் இலங்காபுரிக்குச் செல்ல வேண்டிய ரங்கநாதர், விநாயகருடைய அருளாலே ஸ்ரீரங்கத்திலே இருக்கின்றார்.
விபீஷணன் கோபமடைந்து, சிறுவன் மலையிலே உட்கார்ந்து கொண்டிருப்பதைப் பார்த்து, மலைக்குச் சென்று விநாயகருடைய தலையிலே குட்டினார் என்பதும் வரலாறு. உச்சிப்பிள்ளையாரினுடைய தலையிலே இந்தக் குட்டினுடைய வடு இருப்பதாக இன்றும் நம்பிக்கை.
விநாயகரும், தாயுமானவரும், ரங்கநாத சுவாமியும் அருகே திருவானைக்கா ஜம்புகேஸ்வரரும் உலகிற்கு அருள் பாலிக்கிறார்கள்.
PINCODE - 620 002.
ஜய கணேச.