திருவாலி. அருள்மிகு அழகிய சிங்கர் திருக்கோவில். அழகிய சிங்கர், லக்ஷ்மி நரசிம்மர் வீற்றிருந்த திருக்கோலம். உற்சவர் திருவாலி நகராளன். தாயார் பூர்ணவல்லி, அமிர்தகடவல்லி. தலவிருட்சம் வில்வம். தீர்த்தம் இலாக்ஷனி, புஷ்கரணி. புராணப்பெயர் ஆலிங்கனபுரம். இது நாகப்பட்டினம் மாவட்டத்திலே அமைந்துள்ளது.
குலசேகர ஆழ்வார், திருமங்கையாழ்வார் ஆகியோரால் மங்களாசாஸனம் செய்யப்பட்ட திவ்யதேசம் ஆகும். இந்த ஊரினுடைய PINCODE – 609106.
இந்த ஊரைச் சுற்றி உக்ர நரசிம்மர், வீரநரசிம்மர், திருநகரி யோகநரசிம்மர், ஹிரண்ய நரசிம்மர் ஆகிய ஸ்தலங்களும் உள்ளன. மூலவர் சன்னிதியின் மேலுள்ள விமானம் அஷ்டாக்ஷர விமானம் எனப்படும்.
பத்ரிகாச்ரமத்திற்கு அடுத்தபடியாக, பெருமாள் திருமந்திரத்தை, 8 எழுத்து மந்திரத்தை, தானே உபதேசம் செய்த இடம். அதனால் இது பதிரிகாச்ரமத்திற்கு இணையானது.
திருமங்கையாழ்வாருக்கு அருள்புரிய வேண்டுமென்று லக்ஷ்மி தேவி பெருமாளை வேண்டினார். பெருமாள் கூறியபடி லக்ஷ்மி திருவாலியில் தவம் செய்யும் பூர்ணமகரிஷியின் மகளாகப் பிறந்தாள். பெருமாளைத் திருமணம் செய்து கொண்டு, திருவாலி அருகே தேவராஜபுரம் என்ற இடத்திற்கு வரும்போது, திருமங்கையாழ்வார் வழிமறித்து, வழிப்பறி நடத்த, திருமங்கையாழ்வாரினுடைய காதிலே அஷ்டாக்ஷர மந்திரத்தை உபதேசம் செய்து ஆட்கொண்டார்.
திருமங்கையாழ்வார் வழிப்பறி செய்த இடத்திலிருந்த மண்டபத்தை இன்றும் காணலாம்.
திருமால் நரசிம்ம அவதாரம் எடுத்தபோது இரண்யனை வதம் செய்த கோபம் அடங்காமல் இருந்தார். இதனால் பயந்துபோன தேவர்களும், ரிஷிகளும் காப்பாற்றுவாயாக என்று லக்ஷ்மி தேவியை வணங்கினார்கள். அவர்களுடைய வேண்டுகளை ஏற்று லக்ஷ்மி தேவியார், பெருமாளினுடைய வலது தொடையிலே வந்து அமர்ந்தாள். லக்ஷ்மி தேவியைப் பெருமாள் ஆலிங்கனம் (அணைத்தல்) செய்து கொண்டார். அதனாலே இது திருஆலிங்கனம், ஆலிங்கனபுரம் என்றும் அழைக்கப்படுகிறது. ஆலிநாடு என்றும் திருமங்கையாழ்வாரால் குறிப்பிடப்படுகிறது.
நாராயண நாராயண.