திருப்புன்கூர். இது சோழ நாட்டில் உள்ள காவேரி வடகரைத் தலம். திருநாளைப்போவார் என்கிற நந்தனார் வணங்குவதற்காக, இறைவன் நந்தியைச் சற்று விலகி இருக்குமாறு அருள் செய்த தலம். ஏயர்கோன் கலிக்காமர், சுந்தரருடன் வந்து தரிசித்த தலம். வைத்தீஸ்வரன் கோவில் திருப்பனந்தாள் சாலையில் 3 கீ.மீ சென்றால் இந்தத் தலம் வரும்.
இறைவன் சிவலோக நாதர், இறைவி சொக்க நாயகி, சொளந்தர நாயகி. தலமரம் புங்க மரம். தீர்த்தம் கணபதி தீர்த்தம். புங்கு+ஊர், புன்கூர் என்று ஆனது. புங்கமரம் இதனுடைய தலவிருட்சம். ஆதலால் புன்கூர் எனப்பட்டது. சமஸ்கிருதத்தில் கஞ்சாரண்யம் என்பர்.
பிரமன், இந்திரன், அகத்தியர் சந்திரன், சூரியன், அக்னி, பதஞ்சலி, வியாக்ரபாதர், சப்தகன்னியர் முதலியோர் வழிபட்ட தலம். விறன்மிண்ட நாயனார் இங்கு வந்து தங்கி இருந்து வழிப்பட்ட தலம். மூவருடைய பாடலும் பெற்ற தலம்.
பஞ்சம் நிலவியதால் ராஜேந்திரசோழன் எல்லா சிவாலயங்களிலும் பூஜைகளைச் செய்ய சொன்னார். அவனுடைய கனவிலே திருபுன்கூர் சிவலோக நாதனை வேண்டினால் மழை உண்டாகும் என்று சிவன் சொன்னார். மன்னனும் அவ்வாறே வந்து சுவாமியை வழிபட்டான். அப்பொழுது சுந்தரர் வந்தார். சுந்தரரை நீங்கள் பாடி மழையைப் பெய்விக்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டான். சுந்தரரும் பாடி மழை பெய்வித்தால் 12 வேலி நிலம் அளிக்குமாறு மன்னனுக்குக் கட்டளை இட்டார். மழையும் பெய்தது. ஆனால் நிற்கவே இல்லை. மறுபடியும் நீங்கள் பாடியே மழையை நிறுத்துங்கள் என்று மன்னன் கேட்க, அதற்கு இன்னொரு 12 வேலி நிலம் வேண்டும் என்றார். சுந்தரர் பாடிய பிறகு மழையும் நின்றது. அதனால் பன்னிரண்டும் பன்னிரண்டும் 24 வேலி நிலம் அளிக்கப்பட்டது.
கோவிலுக்கு, நந்தனார் நாயனார் அவருடைய சொந்த ஊரான ஆதனூரில் இருந்து இங்கு வந்து சிவனை வழிப்பட நினைத்தார். கோவிலுக்கு வெளியே நின்றார்; நந்தி மறைத்தது. இதனைப் பார்த்த துவாரபாலகர்கள், சிறந்த பக்தன் என்று சிவபெருமானிடம் சொன்னார்கள். அதனால் இப்போதும் ஒரு பக்கத்தில் துவாரபாலகர் தலை சாய்ந்த மாதிரியே இருக்கும்.
சிவனும் நந்தனாருடைய பக்தியைக் கண்டு மகிழ்ந்து, நந்தியைச் சற்று விலகி இருக்குமாறு பணித்தார். இதன் மூலம் சிவன் உலகத்திற்குக், குலமோ, வசதியோ, புகழோ தேவை இல்லை, பக்தி இருந்தால் நான் யாருக்காகவும் வருவேன் என்பதை வெளிப்படுத்தினார்.
நந்தனார் பிறகு அங்கு உள்ள ரிஷப தீர்த்தத்தை வெட்டிச் சீர்படுத்த எண்ணினார். யாருமே துணை இல்லாமல் தானே தோண்ட ஆரம்பித்தார். உடனே இறைவன் அவருடைய பக்தியைக் கண்டு மெச்சி, பிள்ளையாரைத் துணையாக அனுப்பினார். பிள்ளையாரே அந்த தீர்த்ததை வெட்டிச் சீர்படுத்தினார் அதனால் குளம் வெட்டிய வினாயகர் என்று அழைக்கப்படுகிறது.
இங்கே பிரகாரத்தின் உள்சுற்றிலே இடப்பக்கத்திலே நந்தனார் திருஉருவம் உள்ளது. இந்தக் கொடிமரத்திற்குக் கவசம் கட்டி இருக்கிறார்கள். நடராசர் சபை இருகின்றது. இந்த நடராஜப் பெருமானுடைய பாதத்திலே, ஒரு தேவர் அமர்ந்து பஞ்சமுக வாத்தியத்தை அடித்து, இசை எழுப்புகின்றதைத் தரிசிக்கலாம்.
இங்கு மூலவர் மண்புற்று சுயம்பு மூர்த்தி. அதனால் அதன்மீது சாத்தப்பட்டிருக்கும் குவளைக்குத்தான் அபிஷேகம் நடைபெறுகிறது.
சோம வாரத்திலும், அர்த்தஜாம பூஜையின் போதும், புனுகு சாத்தப்படுகிறது. மூவர் பாடிய திருபதிதங்கள் பளிங்குக் கற்களில் பதிக்கப்பட்டு உள்ளன. நந்தனார் தேரடியில் நின்று சிவனை தரிசித்ததால் அந்த தேரடியும் புதிப்பிக்கப் பட்டுள்ளது.
இந்த தலத்திற்கு 5 கல் வெட்டுக்கள் உள்ளன. 411 முதல் 415 ஆவது வருடம் வரை உள்ள கல்வெட்டுகள். இதிலே சிவலோகம் உடைய நாதர் என்று குறிப்பிடப்படுகிறது.
இந்த ஊர் பின் கோடு 609 112.
திருச்சிற்றம்பலம்.