இது தொண்டை நாட்டுத் திருத்தலம். காஞ்சிபுரத்திலிருந்து ஏகாம்பர நாதர் கோவிலுக்குத் தெற்கே 12 கி.மீ தூரத்தில் பாலாற்றினுடைய தென்கரையிலே இருக்கின்ற ஊர். கோவில் வரை செல்ல நல்ல பாதை இருக்கின்றது.
வாலி குரங்கு வடிவிலும், இந்திரன் அணில் வடிவிலும், எமன் முட்டம் வடிவிலும் அதாவது காகத்தினுடைய வடிவிலும் இறைவனை வழிபட்டார்கள்.
மிகச்சிறிய கோவில். கோவிலினுடைய வாயிலிலே, முகப்பிலே அணிலும், காகமும் வழிபடும் சிற்பம் இருக்கின்றது. இறைவனுடைய பெயர் வாலீஸ்வரர், கொய்யா மலை நாதர். இறைவி இறையார் வளையம்மை. தலமரம் இலந்தை மரம். தீர்த்தம் காக்கை தீர்த்தம். காக்கை மடு என்று சொல்கிறார்கள். சிவலிங்கத்தினுடையத் திருமேனி சிறியதாக உள்ளது. கருவறையும் சிறியது. சம்பந்தர் பாடல் பெற்ற ஸ்தலம். கிராமமும் சிறிய கிராமம். திருக்குளம் உள்ளது. அம்பாளுடைய பெயரை இந்த மக்கள் இளையாளம்மன் என்று கூறுகிறார்கள்.
கோவிலுக்குப் பக்கத்திலே கொஞ்சம் தூரத்தில், ஒரு பாறை குடைவரைக் கோவிலாகக் காட்சியளிக்கிறது.
இந்தக் கோவிலுக்கு 6 கல்வெட்டுகள் இருக்கின்றன. அவை, கோனேரின்மை கொண்டான், குலோத்துங்கன், ராஷ்டிரகூட கண்ணார தேவன், கிருஷ்ணதேவராயர் இவர்களுடைய காலத்திலே ஏற்பட்ட கல்வெட்டுகள். இத்தலம் காளியூர்கோட்டத்து இருகழிநாட்டு மாமண்டூர்ப் பற்றத்துப் பல்லவபுரமான திருக்குரங்கணில் முட்டம் என்று குறிப்பிடப்படுகிறது.
சக வருஷம் 1451-லே பூஜைக்காக கிருஷ்ணதேவராயர் பல்லவபுரம் கிராமத்தை இந்தக் கோவிலுக்கு அளித்ததாகக் குறிப்புகள் காணப்படுகின்றன.
இந்த ஊருக்குப் பக்கத்திலே இருக்கின்ற கிராமங்களிலே அநேக பேருக்குப் பொய்யாமலை என்ற பெயர் அதிகமாகக் காணப்படுகிறது. ஸ்ரீ காஞ்சி காமகோடி பீடாதிபதி ஜகத்குரு ஸ்ரீ ஜெயேந்திர சரஸ்வதி ஸ்வாமிகள் அவர்களின் பொன்விழாத் திட்டத்தில், இந்தக் கோவிலுடைய சுற்றுமதில், ஸ்வாமி, அம்பாள் விமானங்கள், திருப்பணிகள் செய்யப்பட்டு 1985-ல் ரக்தாக்ஷி வருடம் தை மாதம் மஹாகும்பாபிஷேகம் நடைபெற்றது.
ஊரின் PINCODE – 631 703.
காஞ்சிபுரத்திலிருந்து வந்தவாசி செல்லும் பேருந்து சாலையில் தூசி என்னும் கிராமத்தை அடைந்தபிறகு, அங்கிருந்து 2 கி.மீ தொலைவில் உள்ளது.
திருச்சிற்றம்பலம்.