தூப்புல் விளக்கொளிப் பெருமாள். தீபப்பிரகாசர், திவ்யப்பிரகாசர். தாயார் மரகதவல்லி. தீர்த்தம் சரஸ்வதி தீர்த்தம். புராணப்பெயர் திருத்தண்கா. காஞ்சிபுரம் மாவட்டத்திலே அமைந்திருக்கின்றது. திருமங்கையாழ்வாரால் மங்களாசாஸனம் செய்யப்பட்டிருக்கிறது. மூலவர் சன்னதியின் மேல் உள்ள விமானம் ஸ்ரீகர விமானம் ஆகும்.
சரஸ்வதி தேவிக்கு இந்தத் தலத்திலே பெருமாள் காட்சி தந்துள்ளார். தர்ப்பைப்புல் நிறைய வளர்ந்திருந்ததாக இருந்த இந்தக் காட்டிலே, திருமால் காட்சியளித்ததால் இது “தூப்புல்” எனவும், “திரு தண் கா” எனவும் அழைக்கப்படுகிறது.
ஆச்சார்யாரான வேதாந்த தேசிகன் இங்கு அவதாரம் செய்ததால் அவரைத் தூப்புல் வேதாந்த தேசிகன் என்று சிறப்பாக அழைக்கிறோம். வைணவ ஆச்சார்யாரான வேதாந்த தேசிகன் அவர்களுடைய தாய், தனக்குக் குழந்தை வேண்டிப் பெருமாளைத் துதித்தார்.
பெருமாளும் மனமிரங்கி, தனது கையிலிருக்கும் மணியையே இவருக்குக் குழந்தையாகப் பிறக்கும்படி அருள்பாலித்தார். அதனால்தான் இன்றளவும் கூடப் பூஜையின் போது மணியடிப்பதில்லை என்று சொல்வார்கள்.
வேதாந்த தேசிகன் அவர்கள் 100 ஆண்டுகளுக்கு மேல் வாழ்ந்த மஹான். பல நூல்களை வடமொழியிலிருந்து தமிழில் மொழிபெயர்த்துத் தந்தவர். காஞ்சி வரதராஜப் பெருமாள் மீது அடைக்கலப்பத்து என்பதையும் இயற்றியவர்.
படைப்பினுடைய நாயகனாகிய பிரம்மா தனக்கு பூலோகத்திலே கோவில் இல்லை என்று வருத்தப்பட்டார். சிவனை நோக்கி ஒரு யாகம் நடத்தினார். ஆனால் அந்த யாகத்திற்குத் தனது மனைவியான சரஸ்வதியை அழைக்கவில்லை. சரஸ்வதியும் பிரம்மாவினுடைய இந்த யாகம் இருண்டு போகட்டும் என்று சாபமிட்டு விட்டார். பிரம்மா விஷ்ணுவிடம் மறுபடியும் வேண்டினார்.
பெருமாளே ஜோதிவடிவில் காட்சிதந்து யாகத்தை நடத்த அருள்புரிந்தார். சரஸ்வதி தேவியையும் சமாதானம் செய்தார். ஜோதியாக வந்ததால் விளக்கொளிப் பெருமாள் என்றும் தீபப்பிரகாசர் என்றும் பெருமாள் அழைக்கப்படுகிறார்.
இந்த ஊரினுடைய PINCODE – 631501.
ஓம் நமோ நாராயணாய.