மூலவர்: பாசுபதேஸ்வரர்
அம்மன்: சத்குணாம்பாள், நல்லநாயகி
தல விருட்சம்: மூங்கில்
தீர்த்தம்: கிருபா தீர்த்தம், நள தீர்த்தம்
ஆகமம்/பூஜை: காமிய ஆகமம்
மாவட்டம்: கடலூர்
சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழகம் வளாகத்திற்குள் கோயில் உள்ளது. மூங்கில்வனம் எனவும் இதற்கு ஒரு பெயர் உண்டு. திருநாவுக்கரசர், திருஞானசம்பந்தர், அருணகிரி நாதர் ஆகியோரால் பாடல்பெற்ற தலம். காவிரி வடகரைத் தலங்களில் இது 2வது தலம். தேவாரப்பாடல் பெற்ற தலங்களில் முதலானது சிதம்பரம். இரண்டாவது திருவேட்களம். இத்தல இறைவன் சுயம்பு மூர்த்தி. சம்பந்தர் சிதம்பரம் நடராஜரைத் தரிசிக்க வந்த போது, திருவேட்களத்தில் தங்கித் தரிசித்துள்ளார். திருவேட்களம் பற்றி சம்பந்தர் பாடும் போது "வேட்கள நன்னகர்", "வாழ்வில் ஒரு முறையாவது திருவேட்களம் போ" என்றும் பாடுகிறார்.
பாரதப்போரில் வெற்றி பெற அர்ஜுனன் பாசுபத அஸ்திரத்தைப் பெற வேண்டும். கிருஷ்ணர், பாசுபதாஸ்திரத்தை நீ சிவனிடமிருந்து பெற வேண்டும். அதற்கு இந்திரனின் அனுமதி பெறுக என்றார். அர்ஜுனன் மூங்கில் காடாக இருந்த இத்தலத்தில் தவம் புரிந்தான்.அர்ஜுனனின் தவத்தைக் கலைக்கத் துரியோதனன் மூகாசுரனைப் பன்றியாக அனுப்பினான். சிவன் பார்வதியுடன் வேடன் உருவில் வந்தார்; பன்றியைக் கொன்றார். அதே பன்றியின் மீது அர்ஜுனனும் அம்பு எய்தான். பன்றியை யார் கொன்றது என்பதில் சிவனுக்கும் அர்ஜுனனுக்கும் சண்டை நடந்தது. அர்ஜுனனின் வில் முறிந்து போனது. கோபமடைந்த அர்ஜுனன் அந்த முறிந்த வில்லால் வேடனை அடித்தான். அந்த அடி எல்லா உயிர்களின் மீதும் விழுந்தது. வேடுவப்பெண்ணாக வந்த பார்வதி கோபம் கொண்டாள். உடனே சிவன் தன் திருவடியால் அர்ஜுனனை எற்றி, தூக்கி எறிந்தார். சிவனின் பாத தீட்சை பெற்றான் அர்ச்சுனன். அன்னையின் கருணையால் கிருபாகடாட்ச தீர்த்தத்தில் விழுந்தான். சிவன் பார்வதியுடன் காட்சி கொடுத்து பாசுபதாஸ்திரத்தை அருளினார். அர்ஜுனன் வில்லால் அடித்த தடத்தை லிங்கத்தின் மீது பார்க்கலாம்.
பல்லவ அரசர்களால் செங்கற்களால் கட்டப்பட்டது இக்கோயில். 1914ல் கானாடுகாத்தான் பெத்த பெருமாள் செட்டியாரால் கருங்கல் பணி செய்யப்பட்டது. அம்பிகையின் சன்னதியில் 4 தூண்களில் அர்ஜுனன் தன் ஆயுதங்களை வைத்தல், ஒரு காலில் நின்று தவம் செய்தல், சிவன் வேடன் வடிவத்தில் வருதல், சிவ-அர்ஜுன சண்டைஆகியவை சிற்பங்களாகச் செதுக்கப்பட்டுள்ளன. சூரியனும் சந்திரனும் அருகருகே அமைந்து இருப்பதால், சூரிய சந்திர கிரகணங்களின் போது, இங்கே சிறப்பு வழிபாடு செய்கிறார்கள்.
சித்திரை முதல் தேதி, வைகாசி விசாகம், ஆனித் திருமஞ்சனம், விநாயகர் சதுர்த்தி, நவராத்திரி, தீபாவளி, மகா சிவராத்தரி பங்குனி உத்திரம் என்று திருவிழாக்கள் சிறப்பாக நடக்கின்றன.
பேச்சில் குறைபாடு உள்ளவர்கள் இங்கே பிரசாதமாகத் தரப்படும் மண் உருண்டையை சாப்பிட்டால் விரைவில் பேச்சு வரும் என்பது நம்பிக்கை.
திருவேட்களம் - 608 002
தொபே. 04144