திருவேற்காடு. இது தொண்டைநாட்டுத் திருத்தலம். ஞானசம்பந்தருடைய பாடல்பெற்ற ஸ்தலம். இறைவன் வேதபுரீஸ்வரர், வேற்காட்டுநாதர். இறைவி பாலாம்பிகை, வேற்கன்னி. தலமரம் வெள் வேலமரம்.
தீர்த்தம் வேலாயுத தீர்த்தம். இந்த தீர்த்தம் கிணறுதான். இறைவன் சுயம்பு மூர்த்தி. அரசமரத்தின் இடத்தில் உள்ளது. சென்னையிலிருந்து திருவேற்காட்டிற்கு நகரப் பேருந்துகள் ஏராளமாக உள்ளன.
இங்குள்ள கருமாரியம்மன் கோவில் மிகவும் பிரசித்தம். அதிலிருந்து 1 கி.மீ தொலைவில் சிவாலயம் உள்ளது. காடுவெட்டியாறு என்று சொல்லப்படுகின்ற பழைய பாலாற்றங்கரையில் கோவில் உள்ளது.
அகத்தியருக்கு இறைவன் திருமணக்கோலம் காட்சியளித்த தலம். சூரசம்ஹாரத்திற்குப் பிறகு முருகப்பெருமான் இந்தத் தலத்திற்கு வந்ததாக தலபுராணம் கூறுகிறது. முருகப்பெருமான் வேலால் கீறி உண்டாக்கிய தீர்த்தமே வேலாயுத தீர்த்தம் எனப்படுகிறது.
நான்கு வேதங்களும் வேலமரங்களாய் நின்று இறைவனை வழிபட்டதால் இது வேல் காடு, வேற்காடு என்று பெயர் பெற்றது. விஷம் தீண்டாத பதி என்ற சிறப்பும் இந்தத் தலத்திற்கு உள்ளது. திருப்புகழ் பாடல் உள்ளது.
திருமால் ஒருமுறை தன்னுடைய சங்கைத் தவற விட்டுவிட்டார். இத்தலத்தில் வழிபட்டு மீண்டும் சங்கைப் பெற்றார். ஆதிசேஷனும் இத்தலத்துச் சிவனை வழிபட்டது.
அருணகிரியார் சன்னிதி, மூர்க்கநாயனார் சன்னிதி, அகத்தியர் சன்னிதி ஆகியவை உள்ளன. இங்கு வில்லேந்தி மயிலேறி காட்சி தரும் ஆறுமுகன் சன்னிதி உள்ளது. நடராஜர் சபையும் உள்ளது.
இதனுடைய PINCODE – 600077.
சிவசிவ.