இறைவர்: சுவேதாரண்யேஸ்வரர், வெண்காட்டு நாதர்.
இறைவியார்: பிரமவித்யாநாயகி.
தல மரம்: ஆல், கொன்றை, வில்வம்,அரசு
தீர்த்தம் : முக்குளம் (சூரிய, சந்திர, அக்கினி தீர்த்தங்கள்)
பிரமனுக்கு அம்பாள் வித்தையை இத்தலத்தில் உபதேசித்தாள்; அதனால் அம்பாளுக்கு பிரமவித்யாம்பிகை என்று பெயர். தேவேந்திரன், ஐராவதம் என்கிற வெள்ளை யானை, மஹாவிஷ்ணு, சூரியன், சந்திரன்,அக்னி , ச்வேத கேது, சுவேதன் ஆகியோர் பூஜித்துள்ளனர். உத்தாலக முனிவரின் எட்டு வயது மகனான ச்வேதகேதுவின் உயிரைப் பறிக்க யமன் பாசக் கயிற்றை வீசினான்; சுவாமி கால- சம்ஹாரம் செய்ததாக ஸ்தலபுராணம். வால்மீகி ராமாயணத்தில் ஸ்வேதாரண்யம் என்று குறிப்பிடப் பட்டுள்ளது. மயிலாடுதுறை - மங்கைமடம் செல்லும் பேருந்துகள் திருவெண்டுகாடு வழியாகச் செல்கின்றன.
சம்பந்தர், அப்பர், சுந்தரர் ஆகிய மூவரும் பாடியுள்ளனர். இத்தலத்துக்கு மூன்று மூர்த்திகள், மூன்று அம்பிகைகள், மூன்று தல மரங்கள், மூன்று தீர்த்தங்கள். சுவேதாரண்யர், அகோரர், நடராசர்; பிரம்மவித்யாநாயகி, துர்க்கை, காளி; வடஆலமரம், கொன்றை, வில்வம்; சூரிய, சந்திர, அக்கினி. இங்கே முள் இல்லாத வில்வமரம் உள்ளது.
சலந்தரனின் மகன் மருத்துவன்; இறைவனிடம் இருந்து தவத்தினால் சூலத்தைப் பெற்றான். அதைத் தேவர்கள் தவம் செய்ய முடியாத படி துன்புறுத்தப் பயன்படுத்தினான். இறைவன் நந்தியை அனுப்பினார்; மருத்துவன் மாயச் சூலத்தை நந்தி மீது ஏவ, அச்சூலம் நந்தியின் உடலை ஒன்பது இடங்களில் துளைத்துவிட்டது. இறைவன் தாமே அகோரமூர்த்தியாக வடிவுகொண்டு வந்து அவனை அழித்தார். சுவாமிக்கு எதிரில் வெளியே உள்ள நந்தியின் உடம்பில் ஒன்பது துவாரங்கள் இருப்பதை இன்றும் காணலாம்.
சுவேதாரண்யேசுவரருக்கு காமிகாகமத்தின்படியும், அகோரமூர்த்திக்கு காரணாகமத்தின்படியும், நடராசப்பெருமானுக்கு மகுடாகமத்தின்படியும் பூசைகள் நடக்கின்றன.
ஆல வ்ருக்ஷத்தின் அடியில் ருத்ர பாதம் இருக்கிறது. இது பித்ரு கடன் செய்ய உகந்த இடம்.
சம்பந்தர் இங்கு வந்தபோது, ஊரெல்லாம் சிவலிங்கங்களாகக் காட்சி அளித்ததாகவும், அம்பாள் அவரைத் தன் இடுப்பில் தூக்கி வந்து சுவாமி தரிசனம் செய்வித்தாள் என்பதும் செவிவழிச் செய்தி. "பிள்ளை இடுக்கி அம்மன்" என்ற பெயரில் அம்பாள் பிரகாரத்தில் காட்சி தருகிறாள். சிறுத்தொண்ட நாயனாரின் மனைவி திருவெண்காட்டு நங்கை இவ்வூரைச் சேர்ந்தவர்.
ஸ்ரீகாஞ்சி காமகோடி பீடாதிபதி ஸ்ரீ பரமசிவேந்திர சரஸ்வதி ஸ்வாமிகளின் அதிஷ்டானம் இங்கு மணிகர்ணிகா கட்டத்தில் இருக்கிறது. திருவாவடுதுறை ஆதீன எட்டாவது குரு மகா சந்நிதானம் மாசிலாமணி தேசிக மூர்த்திகளின் சமாதி , மேல வீதியில் உள்ளது.
நடராச சபை தில்லையைப் போலச் செப்பு அறையில் அமைந்துள்ளது; ஸ்படிக லிங்கத்திற்கு தில்லையைப் போலவே அபிஷேகம் நடைபெறுகிறது. சிதம்பர இரகசியமும் உள்ளது. ஆதி சிதம்பரம் என்று இந்த ஊருக்குப் பெயர். நவ தாண்டவங்களான ஆனந்த தாண்டவம், காளி ந்ருத்தம், கௌரீ தாண்டவம், முனி ந்ருத்தம், சந்தியா தாண்டவம், திரிபுர தாண்டவம் , புஜங்க லலிதம், சம்ஹார தாண்டவம், பைஷாடனம் ஆகியவற்றை, நடராஜர் இங்கு ஆடினார்.