திருவெள்ளறை. மூலவர் புண்டரீகாக்ஷப் பெருமாள். தாமரைக்கண்ணன். மங்கையர் செல்வி செண்பகவல்லி. தலவிருட்சம் வில்வம். தீர்த்தம் மணிகர்ணிகா, சக்ர, புஷ்கல, வராக, கந்த, பத்ம தீர்த்தங்கள். திருச்சி மாவட்டத்திலே அமைந்துள்ளது. திருமங்கையாழ்வார், பெரியாழ்வார்களால் மங்களாசாசனம் செய்யப்பட்டுள்ளது.
கோவில் ஒரு கோட்டை போல் விளங்குகின்றது. 50 அடி உயரத்தில் உள்ள வெண்மையான பாறையால் ஆன குன்றின் மீது அமைந்துள்ளதால் வெள்ளறை என்று பெயர் பெற்றது. புண்டரீகன் என்ற யோகி நந்தவனம் அமைத்துப், பெருமாளை வழிபட்டு வந்தான். அவருக்குக் காட்சி கொடுத்ததால் புண்டரீகாக்ஷப் பெருமாள் என்றானது. இந்த ஊரிலே உய்யக்கொண்டார் எங்கள் ஆழ்வான் அவதாரம் செய்துள்ளார்.
பெருமாளைத் தரிசிக்க 18 படிகளைக் கடக்க வேண்டும். இவை கீதையினுடைய 18 அத்தியாயங்களாகக் கருதப்படுகின்றன. அடுத்ததாகக் கோபுர வாயிலிலே 4 படிகள் உள்ளன. அவை 4 வேதங்கள் ஆகும். அதற்கு பிறகு பலிப்பீடத்தை வணங்கிய பிறகு, 5 படிகளைக் கடக்க வேண்டும். அவை பஞ்ச பூதங்களைக் குறிக்கின்றன.
ஒருமுறை ராக்ஷதர்களை அடக்குவதற்காக, சிபி சக்கரவர்த்தித் தன்னுடைய படைகளுடன் வந்தபோது, ஒரு வெள்ளைப் பன்றி அவர்களின் முன்னே தோன்றித் தொந்தரவு கொடுத்தது. ராஜாவால் அதைப் பிடிக்க முடியவில்லை.
ராஜா வேட்டையாடச் சென்றிருக்கும்போது, குகையிலே மார்க்கண்டேய முனிவர் தவம் செய்து கொண்டிருந்தார். மார்க்கண்டேயர் ராஜாவிடம், நாராயணனே உனக்குப் பன்றி உருவத்தில் தரிசனம் கொடுத்திருக்கிறார். பக்கத்திலே இருக்கின்ற புற்றிலே பாலாபிஷேகம் செய் என்றார்.
சிபி சக்கரவர்த்தியும் அவ்வாறு செய்தபோது, நாராயணன் தோன்றி அனைவருக்கும் காட்சி கொடுத்தார். முன்பு கொடுத்த ஒரு வரத்தின்படி, நாராயணன் மஹாலெக்ஷ்மியிடம் இந்தத் தலத்திலே சகல அதிகாரங்களையும் உனக்குத் தந்து விடுகிறேன் என்று சொன்னார்.
மன்னன் திரும்பிப் போவதற்கு இஷ்டமில்லாமல் இருந்தபோது, மார்க்கண்டேயர், பெருமாளுக்கு நீ ஒரு கோவில் கட்டுவாயாக என்றார். அரசனும் 3700 குடும்பங்களை அழைத்து வந்து, கோவிலை நிர்மாணிக்கும்போது, அதிலே ஒருவர் இறந்துவிட்டார்.
பெருமாள் தோன்றி நீ கவலைப்பட வேண்டாம். அந்த இறந்த ஒருவருக்குப் பதிலாக நானே ஒருவராக இருந்து, 3700 பேருக்குக் குறைவில்லாமல் பார்த்துக் கொள்கிறேன் என்று சொல்லி செங்கமலவல்லி மூலஸ்தானத்திலே இருந்து கொண்டு அருள்பாலிக்கிறார்.
கோட்டை போல் இருந்த இந்தக் கோவிலிலே பெரிய பிராகரத்தில் தென்பகுதியிலே கல் அறைகள் உள்ளன. ஒலி எழுப்பினால் எதிரொலி தெளிவாகக் கேட்கின்றது.
இந்த ஊரினுடைய PINCODE – 621009.
ஓம் நமோ நாராயணாய.