திருவானைக்கா அகிலாண்டேஸ்வரி கோவில். சுவாமி ஜம்புகேஸ்வரர். அம்மன் பெயர் அகிலாண்டேஸ்வரி. வெண்நாவல் மரம் ஸ்தல விருட்சம். காவேரி, நவ தீர்த்தங்கள். ஸ்ரீவித்யா வைதீக பூஜை நடைபெறுகிறது. இது திருச்சி மாவட்டத்திலே அமைந்திருக்கின்றது. இது தேவாரப்பாடல் பெற்ற ஸ்தலமாகும். இறைவன் சுயம்பு லிங்கம். இது அப்புஸ்தலம் அதாவது நீர் ஸ்தலமாக வழிபடப்படுகிறது.
அம்மனுடைய 51 சக்தி பீடங்களில் இது ஞானசக்தி பீடமாக விளங்குகின்றது. பிரம்மா ஒருமுறை தான் படைத்த பெண்ணையே திருமணம் செய்து கொள்ள விரும்பினார். அதனால் அவருக்கு தோஷம் உண்டானது. சிவனை நோக்கித் தவமிருந்தார். சிவன் காட்சி கொடுக்கக் கிளம்பும்போது அம்பாள் தானும் வருவதாகச் சொன்னாள். சிவன் வேண்டாமென்று சொன்னார்.
ஆனால் அம்பாள், நாம் இருவரும் மாறுவேடத்தில் செல்வோம். நீங்கள் பெண்ணாகவும், நான் ஆணாகவும் செல்வோம் என்று மாறுவேடத்தில் சென்றார்கள். சிவனும், சக்தியும் ஒன்று என்பதை இந்தத் திருவிளையாடல் காண்பிக்கின்றது.
பிறகு பிரம்மாவிற்கு தோஷ விமோசனம் வழங்கினார்கள். இப்போதும் சிவன், அம்பாள் இருவரும் மாறுவேடத்தில் பிரம்ம தீர்த்ததிற்கு எழுந்தருளுவது உற்சவத்தின்போது நடைபெறுகிறது. சக்தி பீடங்களில் ஒன்றான இத்தலத்தில் அகிலாண்டேஸ்வரியாக, அகிலத்தை எல்லாம் காப்பவளாக இருக்கின்றாள்.
உச்சிக்காலத்திலே ஜம்புகேஸ்வரரை அகிலாண்டேஸ்வரி பூஜிப்பதாக ஐதீகம். அதனால் மதியவேளையிலே அம்பாளுக்குப் பூஜை செய்யும் அர்ச்சகர் புடவை, க்ரீடம், மற்றும் மாலை அணிந்து சிவன் சன்னதிக்குச் சென்று பூஜை செய்துவிட்டு வருகிறார். இது அம்பாளே பூஜை செய்வதாக ஐதீகம் ஆகும்.
ஆடி மாதத்திலே தவமிருந்ததால் ஆடிவெள்ளி சிறப்பாகக் கொண்டாடப் படுகிறது. அம்பாள் காலையிலே லக்ஷ்மியாகவும், உச்சிக்காலத்திலே பார்வதியாகவும், மாலையிலே சரஸ்வதியாகவும் காட்சி தருகின்றாள். அம்பாளுக்கு இந்தத் தலத்திலே குருவாக இருந்து உபதேசம் செய்ய, அம்பாள் மாணவியாக இருந்து சிவனிடமிருந்து கற்றறிந்தார் என்பது புராணம்.
ஆரம்பத்திலே இங்கு அம்பாள் உக்கிரமாக இருந்தாள். அதை சாந்தப் படுத்துவதற்காக, ஸ்ரீசக்கரத்தில் அம்பாளுடைய ஆக்ரோஷத்தை உட்புகுத்தி சாந்தம் செய்வார்கள்.
ஆதிசங்கரர் ஸ்ரீசக்கரத்திற்குப் பதிலாக 2 தாடங்கங்களைக் காதில் அணியும் அணிகலனாகப் பிரதிஷ்டை செய்தார். அதன்பிறகு அம்பாள் சாந்தமானாள். அம்பாளை மேலும் சாந்தமடையும் வகையிலே அம்பாளுக்கு எதிரே விநாயகரையும், பின்புறம் முருகனையும் ஆதிசங்கரர் பிரதிஷ்டை செய்தார்.
இந்தக் கோவிலிலே திருக்கல்யாணம் நடப்பதில்லை. சிவனை வேண்டி அம்பாள் தவமிருந்தபோது அவளுக்குக் காட்சி கொடுத்தார் ஆனால் திருமணம் செய்து கொள்ளவில்லை. அதனால் இங்கு திருக்கல்யாணம், பள்ளியறை பூஜை ஆகியவை கிடையாது.
வேதியர் ஒருவர் கல்வியிலே மிகவும் வல்லவர். அவரது பக்தியிலே மகிழ்ந்து. அவருக்கு அருள்வதாக அம்பாள் சொன்னாள். வெற்றிலையை நான் உன்னுடைய வாயிலே உமிழ்ந்து விடுகிறேன். வாயைத் திறக்கிறாயா என்று கேட்டாள். வந்தது அம்பாள் என்று தெரியாமல் கோபமடைந்த வேதியர் அவளை விரட்டிவிட்டார்.
அந்தக் கோவிலிலே வரதன் என்ற பக்தன் இருந்தான். கோவிலைச் சுத்தம் செய்பவன். கோவில் பாழ்படாமல் இருப்பதற்காக எந்தத் தியாகத்தையும் செய்வேன், தாராளமாக என்னுடைய வாயிலே தாம்பூலத்தை உமிழ்ந்து கொள் என்று சொன்னவுடன் அம்பாளும் அப்படியே செய்தாள். அந்த வரதன் தான் பெரிய கவியாகிய காளமேகப்புலவர் என்று அழைக்கப்பட்டவர். அதனால் இந்த அம்பாளுக்கு கல்வியறிவு கொடுப்பதிலே வள்ளல் என்ற பெருமை உண்டு.
ஓம் சக்தி.