திருப்புட்குழி. அருள்மிகு விஜயராகவ பெருமாள் திருக்கோவில். தாயார் மரகதவல்லி. தலவிருட்சம் பாதிரி, ஜடாயு தீர்த்தம். காஞ்சிபுரம் மாவட்டத்திலே அமைந்துள்ளது. திருமங்கையாழ்வாரால் மங்களாசாஸனம் செய்யப்பட்டுள்ளது. இங்கு மூலவர் தன்னுடைய தொடையின் மீது ஜடாயுவை வைத்துக்கொண்டு அருள்பாலிக்கிறார்.
பெருமாளுடைய திருவீதி புறப்பாட்டின் போதெல்லாம் ஜடாயுவிற்கும் சகல மரியாதைகள் செய்யப்படுகின்றன. இது 58-வது திய்வதேசமாகும். மூலவரின் மேலுள்ள விமானம் விஜய வீரக்கோட்டி விமானம் என்று அழைக்கப்படுகிறது. இராமனுஜருடைய குருவான யாதவபிரகாசர் இந்தத் தலத்தில்தான் வசித்தார்.
இந்தக் கோவிலிலே அசைகின்ற உறுப்புகளைக் கொண்ட ஒரு கல்குதிரை இருக்கின்றது. இது சிற்பக் கலையிலே மிக அதிசயமாகப் பார்க்கப்படுகின்றது. உண்மையான குதிரையைப் போலவே இந்தக் குதிரையினுடைய உறுப்புகளும் அசையும். இந்தத் தலத்திலே தர்ப்பணம் செய்வது இரட்டிப்புப் பலன் கிடைக்கும் என்பது நம்பிக்கை.
ராவணன் சீதையைச் சிறையெடுத்துச் சென்றபோது ஜடாயு என்ற பறவை போரிட்டது. ராவணன் அதை வெட்டி வீழ்த்தினான். அதற்குப் பிறகு ஜடாயுவிற்கு இராமரே ஈமக்கிரியை செய்தார்.
புள் என்றால் பறவை, ஜடாயு; குழி என்றால் அதற்கு ஈமக்கிரியை செய்த குழி. ராமர் ஜடாயுவிற்கு இந்த இடத்திலே ஈமக்கிரியை செய்ததால் இந்தத தலம் திரு புள் குழி என்று அழைக்கப்படுகிறது.
இங்கே ஸ்ரீ தேவி, பூதேவி வலப்புறம், இடப்புறம் மாறி அமர்ந்துள்ளார்கள்.
PIN Code: 631502
நாராயண நாராயண.