ஊர்: திருப்போரூர்
மூலவர்: கந்தசுவாமி
காஞ்சிபுரம் மாவட்டம்.
திருப்போரூர் சென்னையிலிருந்து 40 கி.மீ., செங்கல்பட்டில் இருந்து 25 கி.மீ. தொலைவில் உள்ளது. அருணகிரிநாதர், சிதம்பர சுவாமிகள் ஆகியோர் பாடியுள்ளனர்.முருகப்பெருமான் அசுரர்களுடன் மூன்று இடங்களில் போர் செய்தார். திருச்செந்தூரில் கடலில் போரிட்டு, சூரனாகிய மாயையை வென்றார். திருப்பரங்குன்றத்தில் நிலத்தில் போர் செய்து கன்மத்தை (வினைப்பயன்) அழித்தார். இங்கே விண்ணில் போர் புரிந்து ஆணவத்தை அடக்கி ஞானம் கொடுத்தார். தாரகனுடன் போர் நடந்ததால் போரூர், தாரகாபுரி, சமராபுரி என்ற பெயர்கள் ஏற்பட்டன.
மூலவர் கந்தசுவாமி சுயம்புமூர்த்தி (தானாகவே தோன்றியவர்). பூஜைகள் செய்வதற்காக சுப்பிரமணியர் யந்திரம் பிரதிஷ்டை செய்துள்ளார்கள். மூலவருக்கு அபிஷேகம் கிடையாது. கூர்ம (ஆமை) பீடத்தின் மேலுள்ள யந்திரத்தில் முருகனின் 300 திருப்பெயர்கள் காணலாம். முருகனுக்குப் பூஜை நடந்தபின் இந்த யந்திரத்திற்குப் பூஜை நடைபெறுகிறது.
பிரம்மாவிற்குரிய அட்சர மாலை கண்டிகை; சிவனைப்போல் வலது கையால் ஆசிர்வதிக்கும் அபயஹஸ்த நிலை; விஷ்ணுவைப்போல் இடது கையைத் தொடையில் வைத்து ஊருஹஸ்த நிலை; இவ்வாறு மும்மூர்த்திகளின் அம்சமாக இந்த முருகன் அருள்பாலிக்கிறார்.
பிரளய வெள்ளத்தால் ஆறு முறை அழிந்துபோய், ஏழாவது முறையாகக் கட்டப்பட்ட கோயிலே இப்போது இங்கு இருக்கிறது. ஓம்கார அமைப்பில் அமைந்த கோயில். சுவாமிமலை திருத்தணி தலங்களைப் போலவே இங்கும் ஐராவதம் (வெள்ளையானை) வாகனம். முருகன் சன்னதியில் பிரம்மாவின் இடத்தில் பிரம்ம சாஸ்தா இருக்கிறார்.
செவ்வாய் தோஷம் உள்ளவர்கள் யந்திர முருகனை வழிபடுகின்றனர். பால் குடம் எடுத்தும் அலகு குத்தியும் நேர்த்திக்கடன் செலுத்துகின்றனர்.
கோயிலுக்கு அருகிலுள்ள ஒரு சிறு குன்றில் கைலாசநாதர் பாலாம்பிகை கோயில் இருக்கிறது. ஒரே ஊரில் மலையில் சிவனும் அடிவாரத்தில் முருகனுமாக அமைந்த தலம் இது. இங்கு வள்ளி தெய்வானைக்கு நவராத்திரி நடைபெறுகிறது. வள்ளி தெய்வானைக்கு ஒன்பது விதமான அலங்காரம் செய்யப்படும். சிவனைப்போல ஐப்பசி பவுர்ணமியில் முருகனுக்கு அன்னாபிஷேகமும் சிவராத்திரியன்று நான்கு கால பூஜையும் நடக்கிறது.
கோயில் ஒரு காலத்தில் மண்ணில் புதைந்து போனது. சுவாமி சிலை ஒரு பனை மரத்தடியில் இருந்தது. மதுரையில் இருந்த சிதம்பர சுவாமியின் கனவில் தோன்றி முருகன் இதுபற்றி அவருக்குச் சொன்னார். சிதம்பர சுவாமிகள் முருகன் சிலையைக் கண்டெடுத்துப் பிரதிஷ்டை செய்தார். கந்தசுவாமியைப் போற்றி 726 பாடல்கள் இயற்றினார். இவருக்கு இங்கு சன்னதி உள்ளது.
இங்குள்ள அம்பிகை புண்ணியகாரணியம்மன். இங்கே முருகன் சிலை கண்டறியப்பட்டபோது அது ஒரு பனை மரத்தில் செய்த பாத்திரத்தில் இருந்தது. இந்தப் பாத்திரத்தை இப்போதும் வைத்துள்ளனர். அட்சயபாத்திரம் போல இந்தப் பானை செல்வத்தைக் கொடுப்பதாக நம்பிக்கை.
அருணகிரிநாதர் திருப்புகழில் கந்தசுவாமியை சகல வேதங்களின் வடிவம் என்று பாடியுள்ளார்.
கந்தசஷ்டி விழா இங்கு விசேஷம். கஜமுகன், பானுகோபன், சிங்கமுகன், சூரபத்மன், அஜமுகி, தாரகன் ஆகிய அசுரர்களை வதம் செய்வது நடைபெறும். மாசி பிரம்மோறசவத்தின் போது முருகன் பிரம்மாவிற்கு பிரணவ உபதேசம் செய்வது நடக்கும். முருகன் ஆட்டுக்கிடா வாகனத்தில் புறப்பாடு நடக்கும்.
திருப்போரூர் - 603110.