திருப்பாலைத்துறை. இது சோழநாட்டுத் தலம். காவிரியின் தென்கரைத் தலம். கும்பகோணம் – தஞ்சாவூர் நெடுஞ்சாலையில் இருக்கிறது. அருகிலே பாபநாசத்தில் உள்ள நூற்றெட்டு சிவலிங்கக் கோவிலோடு இந்தக் கோவிலையும் இணைத்துச் சொல்கிறார்கள்.
இறைவனுடைய பெயர் பாலைவனேஸ்வரர், பாலைவனநாதர். இறைவி தவளவெண்ணகையாள் – தவளாம்பாள் என்று சொல்கிறார்கள்.
தலமரம் பாலை. அந்த மரத்தை இப்போது காணமுடியவில்லை. தீர்த்தம் வசிஷ்ட தீர்த்தம், இந்திர தீர்த்தம், எம தீர்த்தம், குடமுருட்டி ஆறு முதலியன. அப்பரினுடைய பாடல் பெற்ற ஸ்தலம் ஆகும். திருமால், பிரமன், திசை பாலகர்கள், வசிஷ்டர், தேவர்கள் ஆகியோர் வழிபட்ட தலம். பாண்டவர்கள் வனவாசத்தின் போது தௌமிய முனிவர் சொல்படி, அர்ச்சுனன் இங்கே வந்து, வில்வித்தை நுட்பங்களை எல்லாம் கற்றுக்கொண்டு, பாதாள உலகம் சென்றான் என்று சொல்லப்படுகிறது.
தாருகா வனத்து முனிவர்கள் சிவனைப் புறக்கணித்து அவரையே அழிக்க எண்ணினார்கள். தீய யாகத்தைச் செய்தார்கள். புலியை வரவழைத்து அதை இறைவன் மீது ஏவினார்கள். இறைவனும் அந்தப் புலியினுடைய தோலை உரித்து உடுத்திக்கொண்ட செயலைச் செய்த தலம், இந்தத் தலமாகும். பாலைவனம், பிரம்மவனம், அரசவனம், புன்னாகவனம் எனப் பல பெயர்கள் இதற்கு உண்டு. திருநல்லூரைச் சேர்ந்த சப்தஸ்தானங்களில் இத்தலத்தையும் ஒன்றாகச் சொல்கிறார்கள்.
4 வேதங்களின் நடுவிலே இருப்பது யஜூர் வேதம். அதனுடைய நடுவிலே இருப்பது பஞ்சாக்ஷரம் நமச்சிவாய என்பது. அதை ஒரு பொக்கிஷம் போல் வேதத்தினுடைய நடுவிலே வைத்திருக்கிறார்கள். அதைப் போலவே திருமுறைகளிலே தேவாரத்திலே, அப்பர் தேவாரத்தின் நடுவிலே 51-வது பதிகத்திலே, “விண்ணினார் பணிந்து” என்று தொடங்கும் பாடலிலே, சிவாய என்ற சூட்சம பஞ்சாக்ஷரத்தை வைத்திருக்கிறார்கள். அந்தச் சிறப்பினையுடைய பதிகம், இந்தத் தலத்திற்குரிய பதிகமாகும்.
5 நிலை கொண்ட இராஜகோபுரம் இருக்கின்றது. கோபுர வாயிலிலே பிட்டுக்கு மண் சுமந்த வரலாறு காணப்படுகிறது.
இங்கே ஒரு மிகப்பெரிய நெற்களஞ்சியம் உள்ளது. செங்கல்லால் கட்டப்பட்டது. இந்தக் களஞ்சியத்தில் 12000 கலம் நெல் கொள்ளப்படும் என்று சொல்லக் காணும்போது, இந்தக் கோவிலுக்கு மிக அதிகமாக நெல் கொடுக்கப்பட்டிருக்கிறது என்பது தெரிய வருகிறது.
சுவாமி, அம்பாள் இருவரும் கல்யாண கோலத்திலே காணப்படுகிறார்கள்.
இந்தக் கோவிலிலே முதலாம் குலோத்துங்கன், விக்கிரம சோழன், இரண்டாம் இராசராசன், மூன்றாம் இராசராசன், மூன்றாம் குலோத்துங்கன் ஆகியோருடைய கல்வெட்டுகள் உள்ளன. நித்த வினோத வளநாட்டு நல்லூர் நாட்டைச் சேர்ந்த ஊர் என்று எழுதப்பட்டுள்ளது. திருப்பாலைத்துறை மகாதேவர் என்று குறிப்பிட்டுள்ளார்கள். பாபநாசம் வட்டத்திலே வருகின்றது.
தஞ்சை மாவட்டம். Pincode - 614 205.
திருச்சிற்றம்பலம்.