இறைவர்: கர்ப்பபுரீஸ்வரர், முல்லைவனநாதர், மாதவிவனேஸ்வரர்.
இறைவியார்: கர்ப்பரட்சகி, கரும்பனையாள்
தல மரம்: முல்லை
தீர்த்தம் : பாற்குளம், க்ஷீரகுண்டம், சத்திய கூபம், பிரமதீர்த்தம்
சம்பந்தர், அப்பர்,பிரமன், கௌதமர், சந்திரன் ஆகியோரால் வழிபடப்பெற்ற தலம். ஊர்த்துவபாத மகரிஷியின் சாபத்தால் நிருத்துவரின் மனைவி வேதிகையின் கருவைக் காத்ததால் - கரு+கா+ஊர் என்று பெயர். நிருத்துருவ முனிவரின் பத்தினி வேதிகை, கர்பகாலத்தில் அயர்ச்சியால், ஊர்த்துவபாத முனிவரை உபசரிக்கவில்லை. கோபம் கொண்ட முனிவர், அவளது கர்ப்பம் சிதையுமாறு சாபம் இட்டார். துயரமுற்ற தம்பதியர்,இறைவனையும் இறைவியையும் சரணடைந்தனர்.கரு சிதையாமல் அம்பாள் காத்து ரக்ஷித்ததால் கர்ப்ப ரக்ஷாம்பிகை என்று அழைக்கப்படுகிறாள்.
மாதவி வனம் என்னும் இத்தலம் ஒரு காலத்தில் முல்லைக்காடாக இருந்தது. இறைவர் திருமேனி மணலால் ஆக்கப்பெற்றது. ஞானசம்பந்தர் பதிகம் ஒன்றும், அப்பர் பதிகம் ஒன்றும் உள்ளன. மூலவர் சுயம்பு மூர்த்தி; மேற்பாகம் பிருதிவிபாகம்; புற்று மண்ணாலாகியது. இறைவன் திருமேனியில் முல்லைக்கொடி சுற்றிய வடு உள்ளது.
காவிரியின் தென்கரையிலுள்ள பஞ்ச ஆரண்யங்களுள் (வனம், காடு) இதுவுமொன்று; அவை:- 1. கருகாவூர் - முல்லைவனம், 2. அவளிவணல்லூர் - பாதிரிவணம், 3. அரதைப்பெரும்பாழி - வன்னிவனம், 4. இரும்பூளை - பூளைவனம், 5. கொள்ளம்புதூர் - வில்வவனம். இந்த ஐந்து தலங்களையும் ஒரே நாளில், வைகறை/விடிகாலை, காலை, நண்பகல், மாலை, அர்த்த சாமம் ஆகிய காலங்களில் வழிபடும் பழக்கம் உள்ளது.
இத்தலத்தைத் தரிசிக்க வேண்டும் என்று எண்ணி மூன்று அடி நடந்தால், முதலாவது அடியால் பாவ வினைகள் அகலும்; இரண்டாவது அடியால், தேவ உலகைப் பெறலாம்; மூன்றாவது அடியால் சிவசாயுஜ்ஜியம் பெறலாம் என்கிறது தலபுராணம் . இத்தலத்தை நினைத்தாலும், பெயரைச்சொன்னாலும் , கண்டாலும், இங்கு வசித்தாலும், இவ்வூர் வழியாகப் பிற ஊர்களுக்குச் சென்றாலும் பாவங்கள் நீங்கும் என்பது தலபுராணம்.
கோயிலில் மதுரைகொண்ட கோப்பரகேசரிவர்மன், முதலாம் இராஜராஜ சோழன், முதலாம் இராஜேந்திர சோழன், முதற் குலோத்துங்க சோழன், விக்கிரம சோழன், இவர்கள் காலத்துக் கல்வெட்டுக்கள் இருக்கின்றன.
கர்வத்தால் படைப்புத் தொழிலை இழந்த பிரமன் இங்கு வந்து, இறைவனை வழிபட்டு மீண்டும் படைப்புத் தொழிலைப் பெற்றான். கோஹத்தி தோஷம் நீங்குவதற்காகக் கௌதம முனிவர் இறைவனை வழிபட்டார். தக்ஷ சாபம் நீங்குவதற்காகச் வேண்டிச் சந்திரன் வழிபட்டான். பங்குனி மாதப் பௌர்ணமியில் சந்திரனின் கிரணங்கள் இறைவன் திருமேனி மீது படுவதைக் காணலாம்.
இவ்வூர் கும்பகோணம் - ஆவூர் - மிலட்டூர் வழியாகத் தஞ்சாவூர் செல்லும் சாலையில் உள்ளது. இத்தலத்திற்கு தஞ்சாவூரில் இருந்தும், கும்பகோணத்திலிருந்தும் பேருந்துகள் உள்ளன.
PIN - 614302.