மூலவர்: நீலமேகப்பெருமாள்
உற்சவர்: சவுரிராஜப்பெருமாள்
தாயார்: கண்ணபுரநாயகி
தீர்த்தம்: நித்யபுஷ்கரிணி
பூஜை: வைகானஸம்
திருக்கண்ணபுரம் மயிலாடுதுறையில் இருந்து (30 கி.மீ.) சன்னாநல்லூர் வழியே திருப்புகலூர் சென்று, அங்கிருந்து சுமார் 2 கி.மீ. தொலைவில் உள்ளது. நன்னிலம் நாகப்பட்டினம் செல்லும் பஸ்களும் திருப்புகலூர் வழியாக செல்கின்றன. நம்மாழ்வார், பெரியாழ்வார், ஆண்டாள், திருமங்கையாழ்வார், குலசேகராழ்வார் ஆகியோர் மங்களா சாஸனம் செய்துள்ளனர்.
உற்சவர் சவுரிராஜப் பெருமாள் தலையில் முடியுடன் இருக்கிறார். அமாவாசையன்று திருவீதி உலா செல்லும்போது மட்டும் திருமுடி தரிசனம் காணலாம். சவுரி என்ற சொல்லுக்கு முடி என்றும் அழகு என்றும் பொருள். ஒருசமயம் இக்கோயில் அர்ச்சகர் சுவாமிக்கு சாத்திய மாலையைத் தன் காதலிக்கு அளித்துச் சூட்டி விட்டார். அப்போது மன்னர் கோயிலுக்கு வந்து விட்டார்; மன்னருக்கு மரியாதை செய்ய அர்ச்சகரிடம் மலர் மாலை இல்லை. தன் காதலிக்குச் சூட்டிய மாலையையே மன்னருக்குப் போட்டு விட்டார்! அந்த மாலையில் பெண்ணின் கூந்தல் முடி இருந்ததை மன்னர் கண்டார்; மாலையில் முடி எப்படி வந்தது என்று கேட்டார். அர்ச்சகரும் பெருமாளின் தலையில் இருந்த முடிதான் அது என்று பொய் சொல்லிவிட்டார். மன்னனுக்குச் சந்தேகம் வந்தது; தான் பெருமாளின் திருமுடியைப் பார்க்க வேண்டும் என்றார்! அர்ச்சகர் அன்றிரவு சுவாமியிடம் தன்னைக் காத்தருளும்படி வேண்டிக்கொண்டார். மறுநாள் மன்னர் கோயிலுக்கு வந்தார்; அர்ச்சகர் சுவாமியின் தலையை மன்னருக்குக் காட்டினார்; சுவாமி திருமுடியுடன் காட்சி கொடுத்தார். இதனால் சவுரிராஜப் பெருமாள் என்ற பெயர் ஏற்பட்டது.
முன்னொரு காலத்தில் சில முனிவர்கள் இத்தலத்தில் பெருமாளை வேண்டி தவம் செய்தனர். எப்போதும் பெருமாளையே தியானித்து வணங்கி வந்ததால் நெற்கதிர்கள் போன்று அவர்களது தேகம் மெலிந்து விட்டது. அப்போது உபரிசிரவசு எனும் மன்னன் தன் படையுடன் இவ்வூர் வழியாகச் சென்று கொண்டிருந்தான். வீரர்களுக்குப் பசியெடுத்தது. தவம் செய்து கொண்டிருந்த முனிவர்களை நெற்கதிர்கள் என்று நினைத்து, வீரர்கள் அவர்களை வாளால் வெட்டினார்கள். விஷ்ணு ஒரு சிறுவன் வடிவில் வந்து உபரிசிரவசுவுடன் போர் புரிந்தார். சிறுவனை ஒன்றும் செய்ய முடியவில்லை. மன்னன் தான் கற்றிருந்த அஷ்டாட்சர மந்திரத்தைச் சிறுவன் மீது ஏவினான். அம்மந்திரம் சிறுவனின் பாதத்தில் சரணடைந்தது. எதிர்த்து நிற்பது மகாவிஷ்ணு எனத் தெரிந்து மன்னன் மன்னிப்பு கேட்டான். பெருமாள் நீலமேகப்பெருமாளாக காட்சி தந்தார்.
பாற்கடலில் அமிர்தம் பெற்றுத் திரும்பிக் கொண்டிருந்தார் கருட பகவான். வரும் வழியில் அமிர்தத்தைத் தான் கொண்டு வருவதை நினைத்து அவருக்குக் கர்வம் ஏற்பட்டது. கர்வத்துடன் அவர் இத்தலத்திற்கு மேலே பறந்து சென்றதால், தன் சக்தியை இழந்து கடலில் விழுந்தார். கருடன் மன்னிப்பு வேண்டித் தவம் செய்தார். விஷ்ணு அவரை மன்னித்து வாகனமாகவும் ஏற்றுக்கொண்டார். மாசி பவுர்ணமியில் கடற்கரையில் கருடனுக்கு காட்சி தரும் விழா நடக்கிறது.
இங்குள்ள தீர்த்தம் விசேஷமானது. உத்ராயணத்தின் போது மூன்று நாட்கள் இத்தீர்த்தத்தில் அனைத்து நதிகளும் நீராடித் தங்களுடைய பாவத்தை போக்கிக் கொள்வதாக ஐதீகம். இவ்வூர் பூலோக வைகுண்டம் என்று கருதப்படுவதால் சொர்க்கவாசல் கிடையாது. இத்தலம் பஞ்ச கிருஷ்ண தலங்களில் ஒன்றாகும்.
உற்சவ மூர்த்தியின் திருமேனியில் வலப்புருவத்திற்கு மேல் சிறு தழும்பு உள்ளது. முற்காலத்தில் அந்நியர் திருமதில்களை இடித்து வந்தபோது, திருக்கண்ணபுரத்து அரையர் மனம் புழுங்கிக் கையிலிருந்த தாளத்தை வீசி எறிந்தார். அது பெருமானது புருவத்தில் பட்டது. அத்தழும்பு இன்றும் உள்ளது. பெருமாள் சக்கரம் பிரயோகச் சக்கரம் வதம் பண்ணுவதாய் உள்ளது. சவுரிராஜப் பெருமாளிடம் திருமங்கை ஆழ்வார் மந்திர உபதேசம் பெற்ற தலம் இது.
திருக்கண்ணபுரம் 609704.