108 திவ்ய தேசத்திலே ஒன்றான திருக்கடல்மல்லை, இப்பொழுது இது மகாபலிபுரம் என்று அழைக்கப்படுகிறது. மூலவர் தலசயனப் பெருமாள். உற்சவ மூர்த்தி உலகுய்ய நின்றான். தாயாரினுடைய பெயர் நிலமங்கைத் தாயார். ஸ்தல விருட்சம் புன்னைமரம். தீர்த்தம் புண்டரீக புஷ்கரணி. இது காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ளது.
திருக்கடல்மல்லையாகிய இந்த ஊருக்கு திருமங்கையாழ்வார், பூதத்தாழ்வார் ஆகியோர் மங்களாசாஸனம் செய்துள்ளார்கள். இது பூதத்தாழ்வாரினுடைய அவதார ஸ்தலம். உற்சவப் பெருமாளுடைய கையிலே தாமரை மொட்டு இருக்கின்றது. 108 திவ்ய தேசங்களில் இது 64-வது திவ்யதேசம்.
2000 ஆண்டுகளுக்கு முன்பு மாமல்லபுரம் சிறந்த கடற்கரை நகரமாக இருந்தது. இங்கு ஒரு காலத்திலே 7 கோவில்கள் இருந்ததாக ஐதீகம். ஏழு கோவில் நகரம் என்றே வரலாற்றில் அழைக்கப்பட்டது. கடல் சீற்றம் காரணமாக அந்தக் கோவில்கள் அழிந்தன. பிறகு, பல்லவ மன்னன் இராஜசிம்மன் 3 கோவில்கள் கட்டினான். அதிலும் 2 கடல்சீற்றத்தினால் அழிந்துவிட்டது. எஞ்சிய ஒன்றுதான் இப்போது இருக்கின்ற கோவில். இந்த மூலவர் சன்னதியின் கீழே உள்ள விமானம் கனகாக்ருதி விமானம் எனப்படுகிறது. இந்த ஸ்தலத்திலே புண்டரீக மகரிஷி இறைவனுடைய தரிசனத்தைப் பெற்றார்.
14-ம் நூற்றாண்டிலே விஜயநகர மன்னனான பராங்குசன் ஆகம விதிப்படி கோவில் கட்டிப் பெருமாளைப் பிரதிஷ்டை செய்தார். இவருக்கே இப்பொழுது வழிபாடுகள் நடக்கிறது. இந்தத் தலத்திலே ஒரு காலத்திலே அடர்ந்த காடுகள் இருந்தன. புண்டரீக மகரிஷி என்பவர் தவம் செய்தார். குளத்திலே இருந்த தாமரை மலர்களைப் பறித்துத், திருப்பாற்கடலில் பள்ளி கொண்டுள்ள நாரயணனுடைய பாதங்களிலே சேர்ப்பிக்க வேண்டும் என்று நினைத்தார். பூக்களைக் கூடையிலே கொண்டு செல்கின்ற போது, குறுக்கே கடல் இருக்கிறது என்று புரிந்தது. பக்தியினுடைய பெருக்கினால் கடலைத் தன் கையாலேயே இறைக்கத் தொடங்கினார். கடலைக் கையால் இறைக்க முடியுமா என்பதைப் பற்றி அவர் கவலையே படவில்லை. கடலைக் கையால் இறைத்துக்கொண்டே இருந்தார்.
பகவான் நாராயனனும் வேறு ஒரு வேடத்தில் வந்து, “எதற்காக இப்படிக் கடலை இறைக்கீறீர்கள்? கடலை இறைக்க முடியுமா? உருப்படியாக ஏதாவது செய்யலாமே!, எனக்கு பசிக்கிறது சோறு கொடுக்க முடியுமா?” என்று ரிஷியிடம் கேட்டார். மகரிஷியும் தருகிறேன், ஆனால் சோறு கொடுத்த பிறகு, என்னுடைய பணியாகிய கடலை இறைக்கும் பணியைத் தொடர்வேன் என்று சொன்னார். பகவானுடைய கிருபையினாலே இந்தக் கடல் வற்றியே தீரும் என்றும் கூறினார். அந்த மலர்க்கூடையை வயதான வேடம் கொண்டு வந்த நாராயணனிடமே கொடுத்து, இதை வைத்துக் கொள்ளுங்கள், நான் சென்று உணவு கொண்டு வருகிறேன் என்று சென்றார்.
ஆனால் மகரிஷி வருவதற்குள் பகவான் அவர் கொண்டு சென்ற பூக்களை எல்லாம் தானே சூடிக்கொண்டு, தரை மேல் சயனிக்கும் கோலத்திலே காட்சியளித்தார்.
இதைக் கண்டு மகரிஷி, “ஒரு சிறியேனுடைய பக்திக்காகத் தாங்களே நேரில் வந்தீர்களே! உங்களைப் போய்ப் பூக்கூடையைச் சுமக்கச் செய்து விட்டேனே! என்னை மன்னித்து விடுங்கள்” என்றார். பெருமாள் கிட்டத்தட்ட 25க்கும் மேற்பட்ட திவ்ய தேசங்களில் கிடந்த திருக்கோலத்தில் சேவை சாதிக்கின்றார். பெரும்பாலான கோவில்களில் பாம்பணையில் பள்ளி கொண்டிருப்பதை நாம் காணலாம்.
திருமழிசை ஆழ்வாரின் வேண்டுகோளைக் கேட்க கிடந்த நிலையில் இருந்து சற்றே எழுந்திருப்பது போல் உள்ள நிலையில் ஆராவமுதனாய் உங்கள் கும்பகோணத்தில் கொண்ட சயனத்திற்கு உத்தான சயனம் என்று பெயர்.
திருமால் ஒரு எளியவானாய், பாம்பணை தவிர்த்து வெறும் தரையில் (வெறும் தலத்தில்) பள்ளி கொண்டது திருக்கடல்மல்லைக்கு விசேஷம் என்பர் ஆன்றோர்கள்.
மகாபலிபுரம் அதாவது திருக்கடல்மல்லையினுடைய STD CODE-04113.
மகாபலிபுரத்தினுடைய PINCODE-603104.