திருக்காட்கரை அப்பன். திவ்யதேசம். காட்கரையப்பன். தாயார் பெருஞ்செல்வ நாயகி, வாத்சல்யவல்லி. கபில தீர்த்தம். புராணப்பெயர் திருக்காட்கரை. இப்பொழுது திருக்காக்கரை என்று வழங்கப்படுகிறது. இது கேரள மாநிலத்திலே எர்ணாகுளம் மாவட்டத்தில் உள்ளது. நம்மாழ்வாரால் மங்களாசாஸனம் செய்யப்பட்டது.
இந்தக் கோவிலினுடைய நுழைவு வாயிலில் மகாபலியினுடைய ஆஸ்தானம் உள்ளது. அந்த இடத்திலே ஒரு சிம்மாசனம் வைக்கப்பட்டு, பக்கத்திலே விளக்கேற்றி மகாபலியை மக்கள் வழிப்படுகின்றனர்.
கேரள பாணியிலே இது ஓடு வேய்ந்த வட்ட வடிவிலான கோவிலாகும். முகப்பிலே உள்ள மண்டபத்தில் பெருமாள் வாமனராக வந்த கதை சிற்பமாகச் செதுக்கப்பட்டு உள்ளது.
இந்தக் கோவிலுக்கு வெளியிலே தேவி பகவதி, சாஸ்தா, யக்ஷி, கோபால கிருஷ்ணன் ஆகியோரினுடைய சன்னிதிகளும் உள்ளன.
இந்தக் கோவிலைப் பரசுராமர் ஸ்தாபித்தார் என்பது நம்பிக்கை. மகாபலி சிறந்த சிவபக்தன். அவன் வழிபாடு செய்ததாகச் சொல்லப்படும் லிங்கம் ஒன்றும் இங்கே இருக்கின்றது. சைவர், வைணவர் இருவரும் இந்தத் தலத்தில் வந்து வழிபடுகின்றனர். இந்தக் கோவிலிலே வாமனருக்குக் கருவறை தனியாக உள்ளது. சிவபெருமானுக்குக் கருவறை தனியாக உள்ளது. 5 கால பூஜைகள் நடைபெறுகின்றன.
வாமனரை வழிபடுவதற்கு முன்பு சிவபெருமானை வழிபடுவதை பக்தர்கள் வழக்கமாகக் கொண்டுள்ளனர். இது மிகவும் பழமை வாய்ந்த கோவிலாகும்.
இந்தக் கோவிலிலே தமிழ்க் கல்வெட்டுகள் உள்ளன. பொதுஆண்டு 9 முதல் 12-ம் நூற்றாண்டு வரை சேரமன்னர்கள் இந்தத் தலத்தைப் பிரபலப் படுத்தினார்கள்.
திருக்காக்கரைத் தலத்திலும் ஓணப்பெருவிழா மிகச் சிறப்பாக நடைபெறுகிறது. இந்தத் தலத்திலே வாமனர் நின்றத் திருக்கோலத்திலே அருள்பாலிக்கிறார். இவருக்குக் கதாயுதம் கிடையாது. கருவறை விமானம் புஷ்கல விமானம் என்று சொல்லப்படுகிறது. தாயாருக்குச் தனி சன்னிதி கிடையாது.
10 மற்றும் 13-ம் நூற்றாண்டைச் சேர்ந்த 18 கல்வெட்டுகள் இந்தத் தலத்திலே உள்ளன. வாமனர், மகாபலியைப் பாதாளத்திற்கு அனுப்புவதற்கு முன்பாக மகாபலி ஒரு வரம் கேட்டான். வருடத்திற்கு ஒருமுறை தனது தேச மக்களைச் சந்திக்க வேண்டும் என்று வேண்டினான். பகவானும் ஏற்றுக்கொண்டார். அதுதான் ஆவணி மாதத்திலே வருகின்ற திருவோண நட்சத்திரம் ஆகும். இதை ஓணமாக, கேரள மாநிலம் எல்லா இடங்களிலும் பிரபலமாகக் கொண்டாடுகின்றனர்.
இந்த ஊரினுடைய PINCODE -683028.
ஓம் நமோ நாராயணாய.