திவ்யதேசம் திருக்கூடலூர். இது தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ளது. வையம் காத்த பெருமாள், ஜகத்ரட்சகப்பெருமாள். தாயார் பெயர் பத்மாசன வல்லி. தலவிருட்சம் பலா. தீர்த்தத்தின் பெயர் சக்ர தீர்த்தம். புராணப்பெயர் சங்கமாபுரி. திருமங்கை ஆழ்வாரால் மங்காளசாஸனம் செய்யப்பட்ட திவ்ய தேசம்.
ஹிரண்யாட்சகன் என்னும் அசுரன் பூமா தேவியிடம் சண்டையிட்டு, பூமியைப் பாதாள உலகத்திற்குக் கொண்டு சென்று விட்டான். பெருமாள் வராக அவதாரம் எடுத்து, பாதாளத்திற்கு உள்ளே சென்று அவளை மீட்டு வந்தார்.
பெருமாள் இந்தத் தலத்திலே தரையைப் பிளந்து உள்ளே சென்று, அருகில் உள்ள ஸ்ரீ முஷ்ணத்தில் பூமாதேவியை மீட்டுக் கொண்டு வெளியே வந்தார் என்பது தல புராணம். இதனை உணர்த்தும் விதமாகத் திருமங்கை ஆழ்வாரும் இந்த ஊரைப் “புகுந்தானூர்” என்று சொல்லி மங்களாசாஸனம் செய்து வைத்தார்.
வையகத்தை, அதாவது பூமியைக் காத்து மீட்டு வந்தவர் என்பதால், இவர் வையம் காத்த பெருமாள் என்று அழைக்கப்படுகிறார்.
இங்கு தலவிருட்சமான பலா மரத்தில் இயற்கையாகவே சங்கு வடிவம் தோன்றி இருக்கிறது. இந்தக் கோவில் சோழர் காலக் கோவில் ஆகும். பெருமாள் நின்ற திருக்கோலத்திலே அருள்பாலிக்கிறார். சன்னதியின் மேல் உள்ள விமானம் சுத்தசத்வ விமானம் என்று அழைக்கப்படுகிறது. இங்கு பெருமாளின் சக்கரமே அனைவருக்கும் பாதுக்காப்பாக இருக்கிறது. இந்தச் சக்கரத்தைப் பிரயோக சக்கரம் என்பார்கள்.
அம்பரிஷன் என்ற மன்னன் திருமாள் பக்தியிலேயே திளைத்திருந்ததால் எல்லாவற்றையும் இழந்து நாட்டைக்கூட இழந்தான். ஆனால் ஏகாதசி விரதத்தை மட்டும் விடாமல் கடைப்பிடித்து வந்தான். ஒரு நாள் அவனைப் பார்க்க துர்வாசமகரிஷி வந்தார். ஏகாதசி முடிந்து தூவதசி பாரணை செய்வதற்காக அம்பரிஷன் இருந்தான். துர்வாசர் குளித்து விட்டு வருகிறேன் என்றார். நேரம் கடந்தது. அதற்குள் துவாதசி பாரணை பண்ணவேண்டும்; ஆனால் சாப்பிட முடியாது; அதனால் துளசி தீர்த்தத்தை அருந்தினான். அம்பரிஷன் அருந்துவதைப் பார்த்த துர்வாசர், கோபம் கொண்டு கிருத்தி என்கிற அசுரனை ஏவினார். அம்பரிஷன் மனம் வருந்தி மகாவிஷ்ணுவை வேண்டினான்.
பக்தனைக் காப்பதற்காக மகாவிஷ்ணு துர்வாசமகரிஷி மீதே சக்கரம் ஏவினார். சக்கரம் அவரை விரட்டி அடித்தது ; கடைசியிலே சக்கரத்திடமே மன்னிப்புக் கேட்டார். அதனால் இந்தப் பெருமாளுக்கு அம்பரிஷ வரதர் என்ற பெயரும் உண்டு.
காவேரி தன்னுடைய பாவங்களை எல்லாம் எங்கே போக்கிக் கொள்வது என்று கேட்டபொழுது, நீ திருக்கூடலூர் தலத்திற்குச் சென்று பெருமானை வழி பட்டால் உன்னுடைய பாவம் எல்லாம் போகும் என்றார் ப்ரம்மா.
ஒரு காலத்திலே ஒரு கிளி, ஹரி ஹரி என்று சொல்லி திருமாலுக்குத் தினம் ஒரு பழத்தை நைவேத்தியம் செய்வதாக ஒரு ஐதிகம் ஒரு நாள் அப்படி செய்யும் பொழுது, வேடன் அந்தக் கிளியை அம்பால் அடித்து விட்டான். அந்தக் கிளியும் ஹரி ஹரி என்று சொல்லியபடியே தரையில் விழுந்தது. வேடனுக்குப் பயம் வந்து விட்டது. மகாவிஷ்ணு அந்தக் கிளிக்குக் காட்சி கொடுத்து, நீ முற்பிறவிலே உன்னுடைய கல்வியினால் ஆணவத்துடன் இருந்தாய், அதனால் கிளியாகப் பிறந்தாய், ஆனால் என்னுடைய நாமத்தை மட்டுமே உச்சரித்ததால் உனக்கு சாப விமோசனம் என்று கூறி, கிளிக்கு சாப விமோசனம் கொடுத்த தலம்.
இத்தலத்திலே பௌர்ணமியிலே 108 தாமரை மலர்களுடன் ஸ்ரீ ஸூக்த ஹோமம் நடைபெறுகிறது.
இந்தத் தலத்திலே வராக அவதாரம் எடுத்து பூமிக்கு உட்பகுதியில் சென்றதால், பெருமாளுடைய திருப்பாதங்களுக்கு நடுவில் இருக்கும் இடமே உலகத்தின் மையம் என்பது ஐதிகம். நந்தக முனிவர் தேவர்களோடு கூடி வந்து சுவாமியை வழிபட்டுச் சென்றனர். அதனால் இந்த ஊர் கூடலூர் என்று பெயர் பெற்றது.
பின்கோடு 614 202.