திருக்கருக்குடி. இப்பொழுது இது மருதாந்தநல்லூர் அல்லது மருதாநல்லூர் என்று வழங்கப்படுகிறது. சற்குணலிங்கேஸ்வரர், கருக்குடிநாதர், பிரம்மபுரீஸ்வரர். அம்மன் பெயர் அத்வைதநாயகி, கல்யாணி அம்பிகை, சர்வாலங்கார நாயகி. தீர்த்தம் யமதீர்த்தம். தலமரம் வில்வம்.
இது தஞ்சாவூர் மாவட்டத்திலே அமைந்துள்ளது. திருஞானசம்பந்தரால் பாடப்பட்ட தேவாரப் பதிகம் உள்ளது. காவிரி தென்கரைத் தலம். இங்கு இறைவன் மணலால் ஆன சுயம்பு லிங்கமாக அருள் பாலிக்கிறார்.
இங்கு கிழக்கு நோக்கிய கருவறையில் உள்ள சிவலிங்கம் மிகவும் சிறியது. மண்ணினைக் கையால் பிடித்துச் செய்த சுவடுகள் தெரிகின்றன.
அம்மன் சன்னி எதிரே தனஞ்சய வணிகனின் வணங்கிய சிலை ஒன்று உள்ளது. இவ்வூரின் அருகே ஏனாதிநாயனார் அவதரித்த தலமாகிய ஏனநல்லூர் உள்ளது. வீணாதட்சிணாமூர்த்தி உள்ளார்.
பிரம்மா, சற்குணன் என்ற அரசன் ஆகியோர் வழிபாடு செய்துள்ளனர். சற்குணன் வழிபட்டதால் சற்குணலிங்கேஸ்வரர் என்று அழைக்கப்படுகிறார்.
இராமாயண காலத்திலே இராமபிரான் இலங்கைக்குச் செல்லும்போது இந்தத் தலத்திற்கு வந்ததாகவும், குறித்த நேரத்திலே அனுமான் சிவலிங்கம் கொண்டுவர முடியாததால், இராமன் மணலிலேயே இரண்டு கைகளாலும் லிங்கம் பிடித்து வழிபட்டார். அதுவே இப்போது பிருத்விலிங்கம் என்ற புராணக்கதை உள்ளது.
அனுமான் கொண்டு வந்த லிங்கம் கோவிலுக்கு இடப்புறம் உள்ள அனுமந்தலிங்கம் என்ற பெயரிலே உள்ளது. தனஞ்சயன் என்ற வணிகனுக்குத் தொழுநோய் ஏற்பட்டதால் இத்தல இறைவனை வேண்டித் தொழுநோய் நீங்கப்பெற்றான்.
இந்தக் கோவிலிலே திரிபுவனச் சக்கரவர்த்தி இராஜ ராஜ தேவனுடைய 2-ம் ஆண்டில் செதுக்கப்பட்ட ஒரு கல்வெட்டு இருக்கின்றது. அந்தக் கல்வெட்டிலே சிவபெருமானுடைய பெயர் விழுமிய நாயனார் என்று குறிக்கப்பட்டுள்ளது.
இது கும்பகோணத்திற்கு தென்கிழக்கே சாக்கோட்டைக்கு அருகிலே 1.5 கி.மீ தொலைவிலே உள்ளது.
இந்த ஊரினுடைய PINCODE – 612402.
STD CODE - 0435.
சிவ சிவ.