மூலவர்: அருள்மிகு சாரநாதப் பெருமாள்
தாயார்: அருள்மிகு சாரநாயகி, பஞ்சலெட்சுமி
தீர்த்தம்: சார புஷ்கரிணி
ஊர்: திருச்சேறை, தஞ்சாவூர் மாவட்டம்
இங்கு மட்டும் தான் பெருமாள் ஸ்ரீதேவி, பூதேவி, மகாலட்சுமி, சாரநாயகி, நீலாதேவி என்ற ஐந்து தேவியருடன் காட்சி தருகிறார். இவ்வூரின் மண் மிகவும் சத்து (சாரம்) நிறைந்தது என்பதால் இந்தத் தலத்தின் நாயகர் சாரநாதப்பெருமாள் எனப்பட்டார். திருச்சாரம் என்பது காலப்போக்கில் மருவி திருச்சேறை ஆனது. பெருமாளின் மங்களாசாசனம் பெற்ற 108 திவ்ய தேசங்களில் இது 15 வது திவ்ய தேசம். கும்பகோணத்திலிருந்து திருவாரூர் செல்லும் அனைத்துப் பேருந்துகளும் இவ்வூர் வழியாகச் செல்கின்றன.
பிரளயத்தின் போது பிரம்மா இத்தலத்தில் இருந்த மண்ணால் ஒரு கடம் (குடம்) செய்து, அதில் வேதங்களை வைத்துக் காப்பாற்றியதாகப் புராணம். காவிரித்தாய் ஒரு முறை பெருமாளிடம் எல்லாரும் கங்கையே உயர்ந்தவள், அதில் நீராடினால் பாவங்கள் தொலையும் என்று பெருமையாகப் பேசுகிறார்கள்,. அந்தப் பெருமை எனக்கும் வேண்டும் என்று கேட்டு, இவ்வூரில் சாரபுஷ்கரணியில் அரச மரத்தடியில் தவம் செய்தாள். தவத்திற்கு மகிழ்ந்த பெருமாள் குழந்தை வடிவில் காவிரித்தாயின் மடியிலே தவழ்ந்தார். காவிரித்தாய் பெருமாளை கங்கையிலும் மேலான நிலை எனக்கு தந்தருள வேண்டும் என்றாள். இன்றும் மூலஸ்தானத்தில் பெருமாளுக்கு இடது பக்கம் காவிரித்தாய் இருக்கிறாள்.
திருமங்கையாழ்வார் மங்களாசாஸனம் செய்துள்ளார்.
தைப்பூச விழா சிறப்பாகக் கொண்டாடப்படுகிறது. காவிரித்தாய்க்கு பெருமாள் காட்சியளித்த தைமாதம் பூச நட்சத்திரத்தில் வியாழன் சஞ்சரித்த காலமாகும். எனவே 12 ஆண்டுகளுக்கு ஒரு முறை தை மாதம் பூச நட்சத்திரத்தில் வியாழன் வரும் போது இந்த சாரபுஷ்கரணியில் நீராடுவது என்பது மகாமகத்திற்கு இணையாகக் கருதப் படுகிறது.
பூதேவியின் தந்தை மார்க்கண்டேயர் இத்தலத்தில்தான் முக்தியடைந்தார். மன்னார்குடிராஜகோபால சுவாமி கோவில் திருப்பணிக்காக அழகிய மணவாள நாயக்கர் மன்னன் ஆணைப்படி இவ்வூர் வழியாக வண்டிகள் சென்ற போது, வண்டிக்கு ஒரு கல் என்று இக்கோயில் திருப்பணிக்காக நரசபூபாலன் என்பவன் இறக்கி வைத்தான். மன்னன் இதை விசாரிக்க வந்தான். பயந்து போன நரசபூபாலன் பெருமாளை வேண்டியதால்,. பெருமாள் மன்னனுக்கு மன்னார்குடி ராஜகோபாலனாகக் காட்சி அளித்தார். மன்னன் இக்கோயிலுக்கும் திருப்பணிகள் செய்தான்.
திருச்சேறை - 612605.