திருவிண்ணகர் ஒப்பிலியப்பன். உற்சவமூர்த்தி பொன்னப்பன். தாயார் பெயர் பூமா தேவி. தீர்த்தம் அஹோராத்ர புஷ்கரணி, பகல்இராப் பொய்கை. வைகானச பூஜை விதி. ஊர் திருநாகேஸ்வரம், தஞ்சாவூர் மாவட்டம்.
இந்த திவ்யதேசம் பேயாழ்வார், திருமங்கையாழ்வார், நம்மாழ்வார் ஆகியோரால் மங்களாசாஸனம் செய்யப்பட்டுள்ளது. பெருமாளின் மங்களாசாஸனம் பெற்ற திவ்ய தேசங்களில் இது 13-வது திவ்யதேசம் ஆகும். தாயார் அவதரித்த தலம் சோழர்காலக் கோவில் ஆகும்.
இந்தக் கோவிலின் அருகே திருநாகேஸ்வரம் நாகநாதர் கோவில் அமைந்திருக்கின்றது. திருப்பதி வெங்கடாஜலபதிக்கு உண்டானது போல் இந்தப் பெருமாளுக்கும் தனியாக சுப்ரபாதம் உண்டு. திருமால் மார்க்கண்டேயரிடம் ஒரு பங்குனி மாத திருவோணத்தில் பெண் கேட்டு வந்தார். திருமணம் ஐப்பசி மாதம் திருவோணத்தன்று நடந்தது. இந்த அடிப்படையிலே இந்தத் தலத்திலே ஒவ்வொரு மாதமும் திருவோண நட்சத்திரத்தில் சன்னிதியில் அகண்ட தீபமும், வால் தீபமும் ஏற்றப்படுகிறது. இந்த தீபத்திலே மஹாலஷ்மி எழுந்தருளுவதாக ஐதீகம்.
ஆவணி திருவோணத்தன்று உதய கருட சேவை நடக்கிறது. தட்சிணகங்கை எனப்படும் நாட்டாற்றில் நீராடுதல் உண்டு.
இந்த சுவாமி தன்னுடைய வலது கையில் கீதை உபதேசமான “மாம் ஏகம் சரணம் வ்ரஜ” என்பதைக் காட்டி, சரணடைபவர்களைக் காப்பதற்கு உறுதி தருகிறார்.
திருவிண்ணகரப்பன் மூலவர். பொன்னப்பர் உற்சவர். மணியப்பன், என்னப்பன், முத்தப்பன் என்று மொத்தம் 5 கோலங்களில் திருமால் காட்சி தருகிறார். இப்போது முத்தப்பன் சன்னிதி இங்கு இல்லை.
மணியப்பன் சன்னிதியில் சுவாமியுடன் சங்கு சக்கரம் அருகிலேயே இருக்கின்றன. இந்தக் கோவிலினுடைய நெய்வேத்தியங்கள் உப்பில்லாமலேயே தயாரிக்கப்படுகின்றன. கோவிலின் தீர்த்தத்தில் இரவு, பகல் எந்த நேரமும் நீராடலாம். பூமாதேவி திருமாலுக்கு இடது புறத்தில் இருப்பார். ஆனால், அவளுக்கு மணம் முடித்த தலம் என்பதால், சுவாமிக்கு வலது புறம் இருக்கிறாள். பூமாதேவியைத் திருமாலுக்கு மணம் முடித்து தந்தபோது, மார்க்கண்டேய மகரிஷி, ஒரு போதும் என் மகளை விட்டுப் பிரியக்கூடாது என்று நிபந்தனை விதித்தார். அதனால் இங்குப் பெருமாள் தாயாருடன் இணைந்தே பவணி வருகிறார்.
பூமாதேவி விஷ்ணுவிடம் எப்போதும் மஹாலக்ஷ்மியை மட்டும் மார்பிலே தாங்கிக் கொண்டிருக்கிறீர்கள், எனக்கு அந்த பாக்கியம் எப்போது கிடைக்கும் என்று கேட்டார். நீ பூலோகத்தில் ஒரு ரிஷியின் மகளாகப் பிறப்பாய், அந்தப் பேற்றை அடைவாய் என்று சொன்னார். அப்போது 16 வயது மார்க்கண்டேய மகரிஷி மஹாக்ஷ்மியே தனக்கு மகளாக பிறக்க வேண்டும் என்று தவமிருந்தார்.
அப்போது லக்ஷ்மியின் அம்சமான பூமாதேவி, குழந்தையின் வடிவிலே ஒரு துளசிச் செடிக்குக் கீழே இருப்பதைக் கண்டார். ஞான திருஷ்டியால் அவர் மஹால்க்ஷ்மி என்று உணர்ந்து, துளசி எனப் பெயர் சூட்டினார். திருமண வயது வந்தபோது அந்தப் பெண்ணைக் கேட்டு, திருமால் ஒரு வயதான வேடத்தில் வந்தார்.
மார்க்கண்டேயர் அதற்குச் சம்மதிக்கவில்லை. அதனால் “சிறியவள் என் மகள், அவளுக்குச் சாப்பாட்டில் உப்பு கூட போட்டுச் சமைக்கத் தெரியாது” என்று தட்டிக் கழித்தார். திருமால் உப்பில்லாமல் இருந்தாலும் பரவாயில்லை சாப்பிட்டுக் கொள்கிறேன் என்று சொன்னார். வந்தவர் மஹாவிஷ்ணு என்பதை ஞான திருஷ்டியால் அறிந்து தன் மகளை மணம் முடித்துக் கொடுத்தார்.
அதனால் இன்று வரை உப்பில்லாத அப்பன் உப்பிலியப்பன் என்றும், யாரும் இவருக்கு ஒப்பில்லை, ஒப்பில்லாத அப்பன் என்பதால் ஒப்பிலியப்பன் என்றும் திருநாமம் பெற்றார். துளசி தேவி அவர் மார்பிலே துளசி மாலையாக மாறி நிரந்தரமாகத் தங்கியிருக்கிறார். இதனால் எல்லாப் பெருமாள் கோவில்களிலும் துளசி மாலையே பெருமானுக்கு உகந்ததாகக் கருதப்படுகிறது.
இந்த ஊரினுடைய PINCODE – 612 204.
STD CODE – 0435.
ஓம் நமோ நாராயணாய.