திருநின்றவூர் பக்தவத்ஸலப் பெருமாள். உற்சவருடைய பெயர் பக்தராவிப்பெருமாள். தாயார் பெயர் என்னைப் பெற்ற தாயார் என்கிற சுதாவல்லி. தலவிருட்சம் பாரிஜாதம். தீர்த்தம் வருண புஷ்கரணி. திருநின்றவூர் திருவள்ளூர் மாவட்டத்திலே, அமைந்திருக்கின்றது.
திருநின்றவூருக்குத் திருமங்கையாழ்வார் மங்களாசாஸனம் செய்திருக்கின்றார். திருநின்றவூரிலே குபேரன் தன்னுடைய நிதியெல்லாம் இழந்து வாடிய போது, தாயாரை வழிபட்டு மீண்டும் பெற்றார் என்கிறது புராணம். தாயார் சகல சௌபாக்கியங்களும் அருளும் வைபவ லக்ஷ்மியாக இருக்கின்றாள். கோவிலிலே ஆதிசேஷனுக்கு என்று ஒரு சன்னிதி உள்ளது.
பெருமாள் இங்கு கிழக்கு நோக்கி நின்ற திருக்கோலத்தில் காட்சி தருகிறார். இங்குள்ள விமானம் உத்பல விமானம் ஆகும். சமுத்திரராஜன், வருணன் ஆகியோர் பெருமாளினுடைய தரிசனத்தை இந்த ஊரில் கண்டார்கள்.
பெருமாளிடம் கோபித்துக்கொண்டு ஒருமுறை மஹாலக்ஷ்மி வைகுண்டத்தை விட்டு, இங்கு வந்து இந்த ஊரில் வந்து நின்றதால் ‘திரு’நின்றவூர் என்று பெயர். அவரை சமாதானம் செய்வதற்கு சமுத்திரராஜன் வந்தார். ஆனால் லக்ஷ்மி மறுத்துவிட்டாள். சமுத்திரராஜன் மீண்டும் வைகுண்டத்திற்குச் சென்று, மஹாவிஷ்ணுவிடம் நீங்கள் வந்து தேவியை அழைத்துக் கொள்ள வேண்டும் என்றார். பெருமாளும் நீ முன்னே செல், நான் பின்னாடி வருகிறேன் என்றார்.
சமுத்திரராஜன் தாயாரிடம் சென்று, நீ எனக்குப் பெண் இல்லை; நீ என்னைப் பெற்ற தாயார் என்று சொன்னார். என்னைப் பெற்ற தாயார் என்ற, அந்த சமுத்திரராஜனுடைய அழைப்பே, தாயார் பேராக மாறிவிட்டது. பிறகு, மஹாலக்ஷ்மி சமாதானமாகி, வைகுண்டத்திற்குச் சென்றார்.
இங்கு பெருமாளும், தாயாரும் திருமணக் கோலத்திலே அருள் பாலிக்கிறார்கள். நின்ற திருக்கோலத்திலே 11 அடி உயரத்தில் திருமேனி. இராஜகோபுரம் விஜயநகரக் காலத்தில் அமைக்கப்பட்டது.
திருமங்கையாழ்வார் பல திவ்ய தேசங்களை மங்களாசாஸனம் செய்துக் கொண்டு வரும்போது, இந்த ஊர் வழியாகச் சென்றார். ஆனால், இந்தத் தலத்தைப் பாடவில்லை. தாயார் உடனே பெருமாளிடம் சென்று மங்களாசாஸனம் வேண்டுமே! பாசுரம் வேண்டுமே! என்று கேட்டார். அதற்குள் ஆழ்வார் திருக்கடல்மல்லை என்கின்ற மகாபலிபுரத்திற்குச் சென்று விட்டார்.
பெருமாளும் மகாபலிபுரம் சென்று ஆழ்வாரிடம் பாசுரத்தைக் கேட்டவுடன், திருமங்கையாழ்வார் “…எம்மான் தன்னை நின்றவூர் நித்திலத்தை…கண்டது நான் கடல்மல்லைத் தலசயனத்தே” என்று பாடினார். அந்தப் பாடலைக் கேட்டுப் பெருமாளும் பாசுரத்தை எடுத்துக்கொண்டு வந்து, மஹாலக்ஷ்மியிடம் கொடுத்தார். தாயார் உடனே என்ன இது? எல்லாத் தலங்களுக்கும் 10 பாடல்களுக்கு மேலே இருக்கின்றது. திருநின்றவூருக்கு மட்டும் ஒரு பாட்டுத்தானா? என்று கேட்டார்.
பெருமாள் மீண்டும் ஆழ்வாரிடம் பாடல் பெற வேண்டும் என்று செல்லும்போது, அதற்குள் ஆழ்வார் திருவாரூருக்கு அருகே உள்ள திருக்கண்ணமங்கைக்குச் சென்று விட்டார். அங்கே கண்ணமங்கைப் பெருமாளை மங்களாசாஸனம் செய்கின்ற போது திருநின்றவூர் பெருமாள் வந்து நிற்பதை தன்னுடைய ஓரக்கண்ணால், ஞானக்கண்ணால் திருமங்கையாழ்வார் பார்த்து அவரையும் சேர்த்து திருக்கண்ணமங்கையிலேயே மங்களாசாஸனம் செய்தார். “…மாமணிக் குன்றினை, நின்றவூர் நின்ற நித்திலத் தொத்தினக், காற்றினைப் புனலைச் சென்று நாடி, கண்ண மங்கையுள் கண்டு கொண்டேனே” என்று ஆழ்வார் அருளிச் செய்தார்.
திருநின்றவூரின் PINCODE – 602 024.
STD CODE – 044.
ஓம் நமோ நாராயணாய.