திருமழபாடி. இறைவன் பெயர் வைரத்தூண் நாதர், வஜ்ர ஸ்தம்பேஸ்வரர், வைத்யநாதர், மழுவாடீஸ்வரர்.
இறைவியார் பெயர் சுந்தராம்பிகை, அழகம்மை.
தலமரம் பனை. தீர்த்தம் கொள்ளிடம், லட்சுமி தீர்த்தம், சிவகங்கை தீர்த்தம். பாடி வழிபட்டவர்கள் அப்பர், சுந்தரர், சம்மந்தர், ஐயடிகள் காடவர்கோன், சேக்கிழார், நந்திதேவர், திருமால், மார்கண்டேயர் புருஷாம்ருகரிஷி ஆகியோர்.
மார்கண்டேயனுக்காக மழுவையேந்தி சிவன் ஆடிய இடமாதலால் மழுவாடி என்று பெயர் பெற்றது. புருஷாம்ருகரிஷி பிரம்ம லோகத்தில் இருந்த சிவலிங்கத்தை இங்கு எழுந்தருள வைத்தார். இதை மீண்டும் பிரம்மன் பெயர்த்து எடுக்க முனைந்தபோது, எடுக்க முடியாமல் திணறி , இது “வைரத்தூண் தானோ” என்று பிரம்மா வியந்தார்.
அதனால் வைரத்தூண்நாதர் என்று பெயர். சுந்தரரை ஈசன் மழபாடிக்கு நீ வர மறந்தனையோ! என்று அழைத்த திருத்தலமாகும். இங்கு நந்தியம் பெருமானுக்குத் திருக்கல்யாண விழா ஆண்டுதோறும் பங்குனி புனர்ப்பூசத்தன்று கொண்டாடப்படுகிறது. கொள்ளிடம் இந்தத் தலத்திலே தெற்கில் இருந்து வடக்கு நோக்கி உத்தரவாகினியாக ஓடுகிறது.
இந்தக் கோவிலினிலே சோழர், பாண்டியர், ஹொய்சாளர் ஆகியோரது 30 கல்வெட்டுகள் உள்ளன. இது திருவையாற்றுக்கு வடமேற்கே 6 கீ.மீ தூரத்தில் உள்ளது.
சேரரினுடைய கிளைமரபாகிய மழவர்கள் பாடி செய்துகொண்டிருந்த இடம் என்றும் பெயர். பாடி என்றால் தங்குமிடம். பாடி என்றாலும் பாசறை என்றாலும் ஒன்றே. அதனால் மழவர்பாடி என்பது மழபாடி என்றானது.
நந்திதேவர் சுயசை அம்மையாரை மணம் செய்து கொண்ட தலம் ஆகும். இந்தத் தலத்துக்கு ஸ்ரீகமலை ஞானப்பிரகாச தேசிகர் அவர்களால் இயற்றப்பட்ட ஸ்தல புராணம் ஒன்றும் உள்ளது.
நந்தியம் பெருமானுக்கு உரித்தான ஒரு தனிக்கதையும் இந்தப் புராணத்தின் மூலம் தெரியவருகிறது. திருவையாற்றிலே வசித்த சிலாத முனிவர் என்பவர் குழந்தை வேண்டிச் சிவனை நோக்கி தவம் இருந்தார். சிவன் அசரீரியாக புத்ரகாமேஷ்டி யாகம் செய்வாயாக! யாக நிலத்தை நிலத்தை உழும்போது பூமியில் இருந்து ஒரு பெட்டி கிடைக்கும். ஆனால் அந்த பெட்டியிலுள்ளக் குழந்தை 16 ஆண்டுகள்தான் உயிரோடு இருக்கும் என்று அசரீரி ஒலித்தது. சிலாத முனிவரும் அப்படியே செய்து, அந்த பெட்டியில் இருந்து 3 கண்களும், 4 தோள்களும் சந்திரனை அணிந்த ஒளியுடன் ஒரு குழந்தை இருப்பதைக் கண்டு வியந்து, பெட்டியை மூடிவிட்டார். பிறகு மறுபடியும் திறந்தபோது சாதாரண குழந்தையாகச் காட்சியளித்தது, அந்தச் சின்னங்கள் இல்லாமல்.
அதற்கு ஜபேசர் என்று பெயர். குழந்தைக்கு 14 வயது ஆனதும் இன்னும் 2 ஆண்டுகள் தானே இருக்கின்றது என்று நினைத்து மிகவும் வருத்தப்பட்டார். அதைக் கண்ட ஜபேசர் தன்னுடைய ஞான திருஷ்டியினாலே, அயன அரி தீர்த்தக் குளத்திலே திருவையாற்றில், ஒற்றைக் காலில் நின்று தவம் புரிந்தார்.
நீரில் நின்றிருந்தபொழுது நீர்வாழ் உயிரினங்கள் எல்லாம், இவரைக் கொஞ்சம் கொஞ்சமாகத் தின்று விட்டன. ஆனாலும் இவர் தவத்தை விடவில்லை. இதனைக் கண்டு மகிழ்ந்த சிவன், ஜபேசரைக் குணப்படுத்தி ஆயுளையும் தந்தார். ஜபேசருக்கும், சுயசாம்பிகைக்கும் திருமழ பாடியில்தான் திருமணம் நடந்தது.
திருமணமான பிறகு ஜபேசர் சிவனை நோக்கிக் கடும் தவம் இருந்தார். அதற்கு மெச்சிச் சிவ கணங்களுடைய தலைவர் பதவியையும், கைலாயத்தினுடைய முதல் வாயிலினுடைய காவல் உரிமையையும் சிவன் இவருக்கு அளித்தார். அவரே நந்திதேவர் ஆவார்.
இங்கு 30 கல்வெட்டுகளில் ஒரு முக்கியமான விஷயம் தெரிய வருகிறது. சோழ அரசர்களில் ராஜேந்திரன் காலத்திலேயே ராஜாதிராஜன் பட்டம் ஏற்றான் என்று தெரிகிறது. அதனால் ஒரு அரசன் இருக்கும்பொழுதே அவருடைய மகன் பட்டம் கட்டி ஆளத் தொடங்கியதையும்அறிகிறோம். ஹொய்சாள அரசன் நரசிம்மன் காலத்தில் கோவிலைக் கட்டியதாகவும் ஒரு கல்வெட்டால் அறிகிறோம்.
STD CODE - 04329.
சிவசிவ.