திருக்கழிப்பாலை. பால்வண்ணநாதர் திருக்கோவில். அம்மன் பெயர் வேதநாயகி. தலவிருட்சம் வில்வம். தீர்த்தம் கொள்ளிடம். இது திருக்கழிப்பாலை என்றும், காரைமேடு என்றும் அழைக்கப்படுகிறது. கடலூர் மாவட்டத்திலே உள்ளது. அப்பர், சுந்தரர், சம்பந்தர், அருணகிரிநாதர் ஆகியோர் பாடியுள்ளார்கள். இது காவிரியின் வடகரையிலே உள்ள தலமாகும். சிவபுரி என்றும் சொல்கிறார்கள்.
இங்கு கிழக்கு நோக்கிய 3 நிலை இராஜகோபுரம் உள்ளது. அதிகாரநந்தி தன்னுடைய துணைவியாருடன் இருக்கிறார். கொள்ளிட ஆற்றின் வெள்ளத்தினால், கோவில் முழுவதும் பாழாகிவிட்டது. எனவே, தற்போது உள்ள இடத்திலே கோவில் கட்டி, அதிலே கழிப்பாலை இறைவனையும், இறைவியையும் எழுந்தருளச் செய்துள்ளார்கள்.
இங்குள்ள பைரவருக்கு, நாய் வாகனம் கிடையாது. 27 மண்டை ஓடுகள், பூணூல், பாம்பு அரைஞாண், ஜடாமுடி, சிங்கப்பல் இவற்றுடன் தனிக்கோவிலிலே காட்சி தருகிறார். காசியிலுள்ள பைரவரை அமைத்த சிற்பியே, இங்குள்ள பைரவரையும் அமைத்ததாகச் சொல்கிறார்கள். இந்த பைரவரை வணங்கினால், காசியில் உள்ள பைரவரை வணங்கிய பலன் கிடைக்கும் என்று புராணங்கள் கூறுகின்றன.
இங்குள்ள நடராஜருடைய ஜடாமுடி, அள்ளி முடிந்த கோலத்திலே இருக்கின்றது. கபிலமுனிவர் ஒவ்வொரு சிவத்தலங்களாகத் தரிசித்தார். வில்வ வனமான இந்தப் பகுதியிலே பூசை செய்தார். பசுக்கள் தானாகவே பால் சுரந்த காரணத்தினால், மணல் முழுவதும் வெண்மையாகக் காட்சியளித்தது.
மணலை எடுத்து லிங்கமாக அமைத்து பூஜை செய்தார். அப்போது வந்த மன்னனுடைய குதிரையினுடைய குளம்பு பட்டதால், லிங்கத்தினுடைய மேலே பிளவு பட்டுவிட்டது. முனிவர் வேறு ஒரு லிங்கப் பிரதிஷ்டை செய்தபோது, இறைவன் காட்சியளித்து, பசுவின் பால் கலந்த மணலில் செய்த லிங்கமே, எங்களுக்கு மகிழ்ச்சியாகும்; அந்த லிங்கத்தையே பூசை செய்யவும் என்று சொன்னார்.
காமதேனுவே இங்கு பால் சொரிந்துள்ளதாக ஐதீகம். இறைவன் சுயம்பு மூர்த்தி. திருக்கழிப்பாலைக்கு முதலாம் இராஜராஜ சோழன், அவனுடைய மகன் ராஜேந்திரசோழன், ஆகியோருடைய காலங்களிலே இருந்த கல்வெட்டுகள் கிடைத்துள்ளன.
இந்த ஊரினுடைய PINCODE - 608002.
சிவ சிவ.