திருஆப்பாடி. இப்பொழுது திருவாய்ப்பாடி என்று வழங்கப்படுகிறது. இறைவன் பாலுகந்த நாதர். அம்மன் பெயர் பெரியநாயகி, பிரகன்நாயகி. தலவிருட்சம் ஆத்தி மரம். தீர்த்தம் மண்ணியாறு. இது தஞ்சாவூர் மாவட்டதிலே அமைந்திருக்கின்றது.
திருநாவுக்கரசருடைய பாடல் பெற்ற ஸ்தலமாகும். சண்டேஸ்வரருக்கு இறைவன் காட்சியளித்த தலம். இறைவன் சுயம்பு மூர்த்தி. இது பாடல் பெற்ற ஸ்தலங்களில் 40-வது தேவாரத் தலமாகும்.
எச்சதத்தன் என்ற வேதியருக்கும், பவித்ரைக்கும் மகனாகப் பிறந்தவர் விசாரசர்மன் என்பவர். 7-வது வயதிலே இவருக்கு முறைப்படி உபநயனம் நடந்தது. சிவபக்தியுடன் வாழ்ந்து வந்தார். ஒருநாள் ஒரு கன்றுக்குட்டி, தன்னை மேய்க்கும் இடையனை முட்டப் பாய்ந்தது. இடையன் அதைக் கம்பால் அடித்தபோது, விசாரசர்மன் கருணை கொண்டு, இனிமேல் அதைத் துன்புறுத்த வேண்டாம், நானே அதை மேய்க்கிறேன் என்று கால்நடைகளை மேய்த்து வந்தார். பக்தியிலேயே அன்புடன் மாடு மேய்த்து வந்ததால் எல்லாப் பசுக்களும் மிக அதிகமாகப் பால் கொடுத்தன.
மண்ணியாற்றங்கரையிலே மணலாலே, ஆத்திமர நிழலிலே சிவலிங்கத்தை செய்து வழிபட்டான். பசுக்கள் அதற்குத் தானே பாலைப் பொழிந்தன.
இதைப் பார்த்த சிலர் தந்தையான எச்சதத்தனிடம், உன் மகன் பாலைக் கறக்கிறான் என்று கூறினார்கள். தந்தையும் மறைந்திருந்து பார்த்தபோது, ஒருநாள் எப்போதும் போல விசாரசர்மன் பூஜை செய்து கொண்டிருந்தான். பசுக்களும் பால் சொறிந்தன. நிறைய பால், குடங்களில் இருந்தது. எச்சதத்தன் விசாரசர்மனைத் திட்டியதோடு பால்குடங்களை காலாலே தட்டிவிட்டார்.
சிவபூஜையிலே திளைத்திருந்த விசாரசர்மன், இடையூறு செய்த தந்தையை ஒரு கோலால் தாக்கினார். அந்தக் கோலே மழுவாக மாறி, தந்தையினுடைய கால்களை வெட்டியது.
இதை அறியாமல் மீண்டும் சிவபக்தியிலேயே திளைத்துவிட்டார் விசாரசர்மன். பக்தியைக் கண்ட சிவபெருமான் பார்வதியுடன் தரிசனம் தந்து, இனி நானே உனக்குத் தந்தையாவேன் என்று கூறி, தன் கழுத்தில் இருந்த கொன்றை மலையை விசாரசர்மனுக்குச் சூட்டி, சண்டிகேஸ்வரர் என்ற பட்டத்தையும் தந்தார். பால் அபிஷேகத்தை ஏற்றதால் பால் உகந்தநாதரும், ஆ (பசு) மேய்த்த தலத்தினால் ஆப்பாடி என்றும் வழங்கப்படுகிறது.
இங்கு இராஜராஜன், மூன்றாம் குலோத்துங்கன், பாண்டியன் ஜடாவர்மன், திருபுவன சக்கரவர்த்தி, சுந்தர பாண்டிய தேவர், பிறகு பல்லவ மன்னர்கள் காலத்தினுடைய புவன சக்கரவர்த்தி, கோப்பெரும்சிங்கத் தேவர், விஜயநகர பரம்பரையான வீரபொக்கன உடையார் மகனார் ஹரியப்ப உடையார் ஆகியோரினுடைய காலத்தினுடைய கல்வெட்டுகள் காணப்படுகின்றன. இதேபோல் ஹரியப்ப உடையார் காலத்து கல்வெட்டு, “ஆகவராமன் பணம்” என்னும் ஒரு நாணயத்தின் பெயரையும் சொல்கிறது.
இந்தக் கோவில் 2000 ஆண்டுகளுக்கு மேல் புராதனமானது.
PINCODE – 612504.
சிவ சிவ.