இந்த ஊரை இப்பொழுது செதலபதி என்று கூறுகிறார்கள். வடமொழியிலே திலதர்ப்பணபுரி என்பார்கள். திலம் என்றால் எள். எள்ளை வைத்துக் கொண்டு தர்ப்பணம் செய்யும் இடம் என்று பொருள்படும். இறைவனுடைய திருப்பெயர் மதிமுக்தர், முக்தீஸ்வரர். இறைவியினுடைய திருப்பெயர் பொற்கொடி நாயகி, ஸ்வர்ண வல்லி.
இந்த ஊரினுடைய பெயர் திலதைப்பதி, கோவிலினுடைய பெயர் மதிமுத்தம். இந்த இடத்திற்குப் பெயர் கோவில்பத்து என்று சொல்வார்கள். இந்த ஊர் திருவாரூர் மாவட்டத்தில் அமைந்துள்ளது. அரசலாற்றினுடைய தென் கரையிலே உள்ளது. பூந்தோட்டத்தில் இருந்து 2 கி.மீ. கூத்தனூருக்கு அடுத்த கிராமம்.
இந்தத் தலத்தினுடைய மரம் மந்தாரை. இங்குள்ள தீர்த்தங்கள் தேவி தீர்த்தம், பிரம்ம தீர்த்தம், சக்ர தீர்த்தம், வசிஷ்ட தீர்த்தம், அரசலாறு, சந்த்ர தீர்த்தம். இந்தத் தலத்தை சம்பந்தர், சேக்கிழார், ராமர், லஷ்மணர், சூரியன், சந்திரன் ஆகியோர் வழிபட்டுள்ளனர்.
இந்தத் தலத்திற்கு சம்மந்தர் பாடிய பதிகம் ஒன்று உள்ளது. இந்தத் தலத்திலே அருணகிரிநாதர் பாடிய ஒரு திருப்புகழும் உள்ளது.
தலபுராணத்தின் படி, திருக்கைலாய மலையிலே எல்லாத் தேவர்களும் சிவ தரிசனம் செய்து கொண்டிருக்கிறார்கள். அப்பொழுது பிரம்மா ஊர்வசியைப் பார்த்துவிட்டார். அதனால் சிவன் பிரம்மாவிற்குச் சாபம் கொடுத்தார். அதைப் போக்கிக்கொள்ள பூமிக்கு வந்து மந்தார வனம் அமைத்து, அங்கே பிரம்மா வழிபட்டார். அப்போது அங்கே ஒரு புற்று இருந்தது. அதை அகற்ற முயன்றார். அந்தப் புற்றிலிருந்து பொன்மயமாக அம்பாள் காட்சியளித்தாள். அம்பாளுக்கு பிரம்மா ஆலயம் அமைத்து வழிபட்டார். இதனால் மகிழ்ந்த சிவன் பார்வதியோடு ரிஷப வாகனத்தில் காட்சியளித்தார். பிரம்மாவிற்கு சாப விமோசனம் கிடைத்ததாகத் தலபுராணம் கூறுகிறது.
இந்த இடத்திற்கு நான்கு யுகங்களிலும்வேறு வேறு பெயர்கள். மந்தாரவனம், பிறகு ஹரிஷேத்திரம், பிறகு பிரம்ம நாயகம், கலியுகத்திலே திலதைப்பதி அல்லது திலதர்ப்பணபுரி.
இந்த ஊருக்கு வைஷ்ணவ சம்பந்தமான ஒரு கதையும் உள்ளது, வாலகில்லியர்கள் என்கின்ற சிறிய வடிவம் கொண்டவர்கள், வைகுண்டம் சென்றார்கள். அவர்களைப் பார்த்து லக்ஷ்மி தேவி நகைத்து (சிரித்து) விட்டார். அதனால் அவர்கள் கோபம் கொண்டு லக்ஷ்மி தேவிக்குச் சாபம் கொடுத்தார்கள். லக்ஷ்மி தேவி பூமியிலே இந்த இடத்திற்கு வந்து மந்தார வனத்திலே சக்ர தீர்த்தத்தை உண்டாக்கினாள். சிவலிங்க பிரதிஷ்டை செய்து, 12 ஆண்டுகள் பூஜித்து, முக்தீச பெருமானின் திருவருளால் வைகுண்டம் திரும்பினார். அதேபோல், அம்பிகையும் தக்ஷ யாகத்திற்குச் சென்ற பழி நீங்குவதற்காக இந்த மந்தாரவன ஈஸ்வரனை பூஜித்தார்.
ராமரும், லக்ஷ்மணரும் ஜடாயுவிற்கும், தசரதருக்கும் இந்த இடத்தில்தான் பிதிர்க்கடன் செய்தார்கள். ராமர் அரசலாற்றில் நீராடி இந்த ஊரிலே பிதிர்க்கடன் செய்ததாக புராணம்.
கோவிலிலே கன்னி மூலையில் உள்ள கணபதிக்கு அருகில் உள்ள மண்டபத்தில் ராம, லக்ஷ்மணர்கள் மண்டியிட்ட நிலையிலே, மண்டியிட்டு பிண்டம் போடும் நிலையில் இருக்கின்ற உருவத்தை நாம் காணலாம்.
இந்த ஊருக்கு ஒரு தலபுராணம் உள்ளது. அது நாகலிங்கம் பிள்ளை என்பவரால் இயற்றப்பட்டது.
இந்த ஊருக்கு மகாபாரதம் சம்மந்தமான ஒரு கதையும் உள்ளது. சகாதேவன் ஜோதிடத்தில் வல்லவன். துரியோதனன் சகாதேவனிடம் சென்று எந்த நாளில் யுத்தம் தொடங்க வேண்டும் என்று கேட்கிறான். சகாதேவனும் அமாவாசை அன்று துவங்க வேண்டும் என்கிறான். மறுநாள் அமாவாசை. கிருஷ்ணர் ஒரு தந்திரம் செய்கிறார். ஒரு குளக்கரையிலேஅமர்ந்து கொண்டு தர்ப்பணம் செய்ய ஆரம்பித்து விட்டார். சூரியனும், சந்திரனும் உடனே நேரில் வந்து, என்ன கிருஷ்ணா நாளைதானே அமாவாசை? என்று கேட்டார்கள். அமாவாசை என்றால் என்ன என்று கிருஷ்ணர் கேட்கிறார். சூரியனும், சந்திரனும் சேர்ந்திருப்பது எங்கிறார்கள். அப்போது கிருஷ்ணர் சொல்கிறார், நீங்கள் இருவரும் இப்பொழுது என் முன்னே சேர்ந்து இருக்கிறீர்கள், அதனால் இன்றுதான் அமாவாசை. அதனால்தான் தர்ப்பணம் செய்கிறேன் என்று முன்பேயே ஆரம்பித்துவிட்டார். அந்த தர்ப்பணம் இந்த ஊரில் நடந்ததாக ஐதீகம்.
இந்த ஊரினுடைய STD CODE 04366.
இந்த ஊரினுடைய PIN CODE 609 405