சோமநாதர். ஊர் பிரபாசப் பட்டினம். ஜுனாகட் மாவட்டம், குஜராத் மாநிலம். பார்வதியம்மன், சந்திரபாக அம்மன். தீர்த்தம் திரிவேணி தீர்த்தம், கபில தீர்த்தம், சூரிய, சந்திர தீர்த்தம்.
சோமநாதபுரம் அல்லது பிரபாசப் பட்டினம் 12 ஜோதிர்லிங்கங்களுள் ஒன்று. இது அம்மனுடைய 51 சக்தி பீடங்களில் ப்ரபாஸ சக்தி பீடமாகும். சந்திரனுடைய சாபம் தீர்ந்த தலம்.
இந்த ஊர் வரலாற்றுப் புகழ் பெற்றது. இந்த ஊரிலே 135 சிவன் கோவில்கள் உள்ளன. 5 விஷ்ணு கோவில்கள் உள்ளன. தேவிக்கு 25 கோவில்கள் உள்ளன. சூரியனுக்கு 16 கோவில்கள் உள்ளன. ஏகப்பட்டக் கோவில்கள் நாகர், சந்திரன் ஆகியோருக்கு உள்ளன. கோடையிலும் குளிர்ச்சியாகவே இருக்கும்.
சோமநாதபுரத்திலே இரு கோவில்கள் உள்ளன. ஒன்று ராணி அகல்யா பாயால் கட்டப்பட்டது. கருவறைக்குச் செல்ல குறுகிய பாதை. படிக்கட்டுகளில் இறங்கினால் பாதாளத்தில் சிவலிங்கம், மீண்டும் படிக்கட்டுகளில் ஏறி விஸ்வநாதர், அன்ன பூரணி, பைரவர், காளி சன்னிதிகளைத் தரிசிக்கலாம். புதிய சோமநாதர் ஆலயம் கடற்கரை ஓரத்தில் கட்டப்பட்டுள்ளது.
சோமன் என்று சொல்லக்கூடிய சந்திரன் இத்தலத்திலே சிவபெருமானை வழிபட்டுப் பேறு பெற்றார். அதனால் சோமநாதன் என்று பெயர்.
இந்த ஊரிலே கண்ணனுடைய காலிலே வேடனுடைய அம்பு பட்ட இடம், கண்ணன் உயிர் நீங்கிய இடம், கண்ணனுடைய உடல் தகனம் செய்யப்பட்ட இடம் ஆகியவையும் உள்ளன. பலராமர் பாம்பாக மாறிப் புற்றினுள்ளே மறைந்த இடமும் சோமநாதபுரத்திலேதான் உள்ளது.
புதிய சோமநாதபுரம் கோவில் வல்லபபாய் பட்டேல் அவர்களுடைய முயற்சியால் சிறப்பாகக் கட்டப்பட்டது.
ஆதிசங்கரர் ஸ்தாபித்த சாரதா பீடமும் உள்ளது. சோமநாதபுரத்தை கஜினி முகமது 17 முறை படையெடுத்துத் தாக்கி, இருந்த ஏராளமான செல்வத்தைக் களவாடிச் சென்றது வரலாறு. இந்த ஊரிலே இரண்யா நதி, கபில நதி, சரஸ்வதி நதி ஆகிய 3 நதிகளும் திரிவேணி சங்கமமாக ஒன்று கூடுகின்றன. பாண்டவர்கள் இந்த ஊரிலே தவம் செய்ததாகவும் புராணம் கூறுகிறது.
சந்திரன் அழகாக இருந்தார். தக்ஷனுடைய 27 பெண்களும் அவனை விரும்பித் திருமணம் செய்து கொண்டார்கள். இருப்பினும் ரோகிணி என்பவளிடம் மட்டும் அதிகப் பிரியமாக நடந்து கொண்டான், மற்றவர்கள் தந்தையான தக்ஷனிடம் சென்று புகார் கூறினார்கள். தக்ஷனும் சொல்லிப் பார்த்தான் சந்திரன் கேட்கவில்லை. தக்ஷனுக்குக் கோபம் வந்து சந்திரனுக்குத் தொழுநோய் வருமாறு சாபம் கொடுத்துவிட்டான். சாபத்தின்படி சந்திரனுடைய ஒளி மங்கியது. அதனால் ஊரிலே மூலிகைகள் வளரவில்லை.
அமிர்தம் சுரக்கும் சக்தியும் குறைந்துவிட்டது. சந்திரனுடைய கலைகள் ஒவ்வொன்றாகக் குறைந்து கொண்டே வந்தது. தேவர்களெல்லாம் சந்திரனை அழைத்துக்கொண்டு சிவபெருமானிடம் சென்றபோது, பிரபாசப்பட்டினமான இந்த இடத்திலே சென்று வழிபடுமாறு சொன்னார்.
சந்திரனும் இந்தத் தலத்திற்கு வந்து ஈசனை நோக்கிப் பிரார்த்தித்தபோது, சிவன் சந்திரனுடைய கலைகள் 15 நாட்கள் வளரவும், 15 நாட்கள் குறையவும் அருள்கொடுத்து, சந்திரனுடைய கலையைத் தன்னுடைய தலையிலே சூடிக்கொண்டார். சந்திரனுக்குக் கோழிமுட்டை வடிவிலே ஒரு ஜோதிர்லிங்கத்தைப் பரிசாகக் கொடுத்தார்.
அந்த ஜோதிர்லிங்கத்தைச் சந்திரன் இங்கே பிரதிஷ்டை செய்து வழிபட்டான். அதனால்தான் சோமன் வழிப்பட்டதால் சோமநாதலிங்கம் என்று பெயர்.
ஓம் சக்தி.