கிருபாசமுத்திரப் பெருமாள், திருச்சிறுபுலியூர், திருவாரூர் மாவட்டம்
மூலவர்: அருமாகடலமுதன், சலசயனப்பெருமாள்
உற்சவர்: கிருபாசமுத்திரப்பெருமாள், தயாநாயகி
தாயார்: திருமாமகள் நாச்சியார்
தல விருட்சம்: வில்வ மரம்
தீர்த்தம்: திருவனந்த தீர்த்தம், மானச தீர்த்தம்
பூஜை: பாஞ்சராத்ரம்
புராணப் பெயர்: சலசயனம், பாலவியாக்ரபுரம்
மங்களாசாஸனம் பெற்ற 108 திவ்ய தேசங்களில், இது 24ஆவது திவ்ய தேசம். புஜங்க சயனம்; தெற்கே திருமுக மண்டலம்; புலிக்கால் முனிவராகிய வியாக்ரபாதர் வழிபட்டார்; பெருமாள் அவருக்குப் பாலனாகச் சயன கோலத்தில் காட்சி தந்தார்; அதனால் இத்தலம் திருச்சிறுபுலியூர் என்று பெயர்பெற்றது. மயிலாடுதுறையிலிருந்து (35கி.மீ) பேரளம் செல்லும் வழியில், கொல்லுமாங்குடியில் இருந்து 3 கி.மீ. தூரத்தில் திருச்சிறுபுலியூர் உள்ளது. அருகிலுள்ள ரயில் நிலையம் பேரளம். திருமங்கையாழ்வார் மங்களாசாஸனம் செய்துள்ளார்.
108 திருப்பதிகளில் தெற்கு நோக்கி அமைந்த தலங்கள் இரண்டு தான். ஸ்ரீரங்கம், திருச்சிறுபுலியூர். ஸ்ரீரங்கத்தில் மிகப்பெரிய திருமேனியுடன் சயனித்திருக்கும் பெருமாள், திருச்சிறுபுலியூரில் பாலகனாகச் சயனத்தில் இருக்கிறார். சிதம்பரம் நடராஜரை வணங்கும் வியாக்ரபாதரும் பதஞ்சலியும் மூலஸ்தானத்தில் உள்ளனர். பெருமாள் நந்தியாவர்த்த விமானத்தின் கீழ் அருள்பாலிக்கிறார்.
புலிக்கால் முனிவர் வியாக்ரபாதர் தில்லை நடராஜப்பெருமானிடம் தவமிருந்து முக்தி வேண்டினார். சிவபெருமான் சிறுபுலியூர் சென்று பெருமாளை வணங்குக என்று சொன்னார். அதன்படி இத்தலம் வந்து பெருமாளை வேண்டினார். பெருமாளும் முக்தி கொடுத்து அவரை மூலஸ்தானத்தில், தன் அருகிலேயே வைத்துக் கொண்டார். நடராஜரின் அருகில் இருக்கும் பதஞ்சலியும் (ஆதிசேஷன்) வியாக்ரபாதரும், இங்கேயும் மூலஸ்தானத்தில் இருப்பது விசேஷம்.
கன்வ முனிவருக்கும் இங்கே பெருமாள் அனுக்கிரஹம் செய்தார். ஆதிசேஷனுக்குத் தனி கோயில் உள்ளது. ஒரு காலத்தில் ஆதிசேஷனுக்கும் கருடனுக்கும் பகை ஏற்பட்டது. இந்தப் பகை நீங்குவதற்கு ஆதிசேஷன் இத்தலப் பெருமாளை நோக்கித் தவம் இருந்தார். தவத்திற்கு மகிழ்ந்த பெருமாள் மாசி மாதம் வளர்பிறை ஏகாதசி தினத்தன்று ஆதிசேஷனுக்குக் காட்சி கொடுத்து, ஆதிசேஷனை அனந்த சயனமாக்கிக் கொண்டு, குழந்தை வடிவம் கொண்டு, சயன கோலத்தில் சேவை.
சித்திரை பிறப்பு, வைகாசி பிரமோற்சவம், ஆடிப்பெருக்கு, ஆடிப்பூரம், ஆடி ஜேஷ்டாபிஷேகம், கோகுலாஷ்டமி, நவராத்திரி பவித்ர உற்சவம், ஐப்பசி மூலத்தில் மணவாள மாமுனிகள் உற்சவம், திருக்கார்த்திகை, வைகுண்ட ஏகாதசி, மகர சங்கராந்தி, மாசி சுக்லபட்ச ஏகாதி, பங்குனி உத்திரம் என்று, உற்சவங்கள் சிறப்புடன் நடக்கின்றன.
குழந்தை பாக்கியம் வேண்டி ஏராளமான பக்தர்கள் வருகிறார்கள். தோஷ நிவர்த்தித் தலமாகவும் உள்ளது. மன நோய் தீரவும் வேண்டுதல் செய்கிறார்கள்.
திருச்சிறுபுலியூர் 609 801.