சிங்கப்பெருமாள் கோவில். மூலவர் பாடலாத்ரி நரசிம்மர். உற்சவர் ப்ரகலாத வரதர். அம்மன் தாயார் பெயர் அகோபிலவல்லி. தலவிருட்சம் பாரிஜாதம், சுத்த புஷ்கரணி தீர்த்தம். வைகானஸ பூஜை விதி.
ஊர் சிங்கப்பெருமாள் கோவில், காஞ்சிபுரம் மாவட்டம். இங்கு நரசிம்மர் அருள் பாலிக்கிறார். பௌர்ணமி கிரிவலம் இங்கே சிறப்பு.
மார்கழி, தை மாதங்களிலே நரசிம்மரினுடைய பாதங்களிலும், ரதசப்தமி நாளில் நரசிம்மரினுடைய திருமேனியிலும் சூரிய ஒளி விழுகிறது.
ஜாபாலி மகரிஷி, நரசிம்மரினுடைய தரிசனத்திற்காக, இந்தத் தலத்திலே கடுமையான தவம் இருந்தார். இவரது தவத்தில் மகிழ்ந்த பெருமாள் பிரதோஷ வேளையிலே மகரிஷிக்குத் தரிசனம் தந்ததால், பிரதோஷத்தன்று திருமஞ்சனம். மூலவர் சங்கு சக்கரம் ஏந்தியுள்ளார்.
இந்தக் கோவிலில் நரசிம்மர் இடது காலை மடித்து வலது காலைத் தொங்கவிட்ட நிலையில் தரிசனம் தராமல், வலது காலை மடித்து, இடது காலைத் தொங்கவிட்ட நிலையில் மிகப்பெரிய மூர்த்தியாக அருள் பாலிக்கிறார்.
வலது கை அபயகரம், இடது கை தொடை மீது வைத்த நிலையில் உள்ளது. கிழக்கு நோக்கி அமர்ந்துள்ள திருமேனி.
மிக முக்கியமாக இங்கு நரசிங்கப் பெருமாள், நெற்றியில் ஒரு கண்ணுடன், முக்கண் மூர்த்தியாய் சேவை சாதிக்கின்றார். இதை விசேஷமாக, ஆரத்தி காண்பிக்கும் போது, அவருடைய திருமண் காப்பு சற்று விலக்கிக் காண்பிப்பார்கள்.
குகைக்கோவிலிலே மூலவர் இருப்பதால், அந்தக் குன்றினையும் சேர்த்து வலம் வரவேண்டும். இங்கு மூலவர் சன்னதியின் கீழ் உள்ள விமானம் பிரணவகோடி விமானம் எனப்படும். சிறப்பாக, கடன்தொல்லை நீங்குவதற்காக மக்கள் பிரார்த்தனை செய்கிறார்கள்.
கோவிலுக்குப் பின்னே அழிஞ்சல் மரம் என்பது உள்ளது. அதையும் வழிபட வேண்டும்.
பாடலம் என்றால் சிவப்பு, அத்ரி என்றால் மலை. நரசிம்மர் கோபமாகச் சிவந்த கண்களுடன் இம்மலையில் தரிசனம் தந்ததால் பாடலாத்ரி என்று பெயர். இது பல்லவர் காலத்துக் குடைவரைக் கோவிலாகும்.
இங்கு கோவிலினுடைய முகப்பிலே தசாவதாரக் காட்சிகள் உள்ளன. 12 ஆழ்வார்களும் மூலவராகவும், உற்சவராகவும் உள்ளனர். இக்கோவிலில் வெளிப்பிராகாரத்தில் மலையைச் சுற்றி பிரதக்ஷிணம் செய்யும் போது அங்குள்ள பத்துக் கடை எனப்படும் (கோவில் திருமடைப்பள்ளிக்கும் இதற்கும் எந்த சம்பந்தமும் கிடையாது) இடத்தில் சுடச்சுட விற்கப்படும் மிளகு தோசை மிகப் பிரபலம்.
இந்த ஊரினுடைய PINCODE - 603 202.
ஓம் நமோ நாராயணாய.