அருள்மிகு கந்தசாமி திருக்கோவில், செய்யூர். மூலவர் கந்தசாமி. அம்மன் வள்ளி, தெய்வானை. தலவிருட்சம் வன்னி, கருங்காலி மரம். செய்யூர் என்பது காஞ்சிபுரம் மாவட்டத்திலே உள்ளது. திருப்புகழ் பாடல்பெற்ற தலமாகும்.
இங்கு வெளிப்பிராகாரத்திலே ஒவ்வொரு நட்சத்திரத்திற்கும் ஒன்றாக, மொத்தம் 27 பூத கண வேதாளங்கள் அமைந்திருப்பது இந்தக் கோவிலினுடைய சிறப்பு அம்சமாகும்.
வேதாளங்களை சிவகணங்களாகக் காணலாம். வேதாளங்கள் பைரவரின் ஆணைக்கு உட்பட்டவை. ஒவ்வொரு தேய்பிறை அஷ்டமியிலும், பைராவாஷ்டமி என்று சொல்வார்கள். அவரவருக்குரிய நட்சத்திரங்களுக்கு உடைய வேதாளங்களை வழிபட்டு, கோரிக்கைகளை முன்வைப்பது, இந்தக் கோவிலிலே நடைபெறுகின்றது.
வழக்கமாக விநாயகர், தட்ஷிணாமூர்த்தி, லிங்கோத்பவர், பிரம்மா, சண்டிகேஷ்வரர், துர்க்கை ஆகியோர் சிவன் கோவிலிலே காணப்படுவார்கள்.
ஆனால், இந்தக் கோவிலிலே எல்லாமே முருகனுடைய அம்சமாகவேக் காணப்படுகின்றன. விநாயகருக்குப் பதிலாக நிருத்த ஸ்கந்தர், தட்ஷிணாமூர்த்தி இடத்திலே பிரம்மசாஸ்தா. விஷ்ணு மாடத்திலே பாலஸ்கந்தர், பிரம்மாவினுடைய இடத்திலே சிவகுருநாதர், துர்க்கை இருக்கும் இடத்திலே புலிந்தர் (வேடர் உருவிலே இருக்கின்ற முருகன்) ஆகியோர் காணப்படுகின்றனர்.
சண்டிகேஸ்வரரும், பைரவரும் அவரவருடைய இடத்திலே இருக்கின்றார்கள். சூரியனை முருகனாகவே கருதி, குகசூரியன் என்று அழைக்கப்படுகிறார்.
கந்தசாமிப் பெருமாளைப் போற்றி, அந்தகக்கவி வீரராகவ முதலியார், சேயூர் முருகன் பிள்ளைத்தமிழ், சேயூர் கலம்பகம் ஆகியவை இயற்றியுள்ளார். சேறை கவிராயப்பிள்ளை என்பவர் சேயூர் முருகன் உரை; முருகதாஸ ஸ்வாமிகள், சேயூர் முருகன் பதிகக்கோவை எழுதியிருக்கிறார். சிவப்பிரகாச சுவாமிகள் நெஞ்சுவிடு தூது எழுதியுள்ளார்.
வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா.