சேங்கனூர் சத்யகிரீஶ்வரர். அம்மன் சகிதேவி அம்மை. தலவிருட்சம் ஆத்தி. தீர்த்தம் வன்னியாறு, சத்திய புஷ்கரணி. புராணப்பெயர் சேய்ஞலூர். இப்பொழுது சேங்கனூர் என்று வழங்கப்படுகிறது. தஞ்சாவூர் மாவட்டம். திருஞானசம்பந்தரினுடைய தேவாரப் பாடல்பெற்ற ஸ்தலமாகும். இது சண்டேஶ்வர நாயனார் அவதாரத் தலமாகும்.
இங்கு இறைவன் சுயம்பு மூர்த்தியாக இருக்கிறார். இங்கு சண்டேஶ்வரநாயனார் அர்த்தநாரி திருக்கோலத்தில் இருக்கிறார். அருகேயுள்ள திருவாய்ப்பாடி சண்டேஶ்வர நாயனார் முக்தி பெற்ற ஸ்தலமாகும்.
சிவன் காட்சி கொடுத்ததால் சண்டேஶ்வரரே பிறை, சடை, குண்டலம், கங்கை ஆகியவற்றை அணிந்து காட்சி தருகிறார். சிபி சக்கரவர்த்தி, ஹரிச்சந்திரன் ஆகியோர் வழிபாடு செய்துள்ளார்கள். அருணகிரிநாதருடைய திருப்புகழ் பாடல் உள்ளது.
வைணவத்திலே பெரியவாச்சான் பிள்ளை என்பவர் அவதார ஸ்தலம் இதுதான். பிரணவ மந்திரத்தினுடைய பொருள் தெரியாததால் பிரம்மனை முருகன் சிறையில் அடைத்தார். பிறகு பிரணவத்தைச் சிவனுக்கு உபதேசம் பண்ணினார். அப்போது சிவனே முருகனுக்குச் சீடனாக ஆனதால் முருகனுக்கு சிவத்துரோக தோஷம் உண்டானது. அதனைத் தீர்த்துக் கொள்வதற்காக முருகன் இத்தலத்திலே வந்து, தினமும் நீராடி சிவனை வழிபட்டு தோஷம் நீங்கினார்.
சூரபத்மனை அழிக்க வரும்போது இந்தத் தலத்திலே தங்கி சிவபூஜை செய்து முருகன் ருத்ர பாசுபத படையைப் பெற்றார். அதனால் இதற்கு குமாரபுரம் என்றும், சேய் (முருகன்) நல் ஊர் என்றாகி, சேய்ஞலூர் என்றாகிவிட்டது.
ஒருகாலத்திலே வாயு பகவானுக்கும், ஆதிஷேசனுக்கும் சண்டை நடந்தது. ஆதிஷேசன் மேருமலையை இறுக்கிப் பிடித்துக்கொண்டதும், வாயுதேவன் பெரிய காற்றால் மலையை அசைக்க முயன்றான்.
அதனுடைய ஒரு சிறு பகுதி, இந்தப் பகுதியில் விழுந்ததால் சத்யகிரி என்ற பெயர். மேலும் இது கோச்செங்கட்சோழன் கட்டிய மாடக்கோவிலாகும். இந்தக் கோவில் கட்டுமலை மேலே உள்ளது.
இந்த ஊர் கும்பகோணம் திருப்பனந்தாள் சாலையில் நெடுங்கொல்லைக் கிராமம் தாண்டி சேங்கனூர் கூட்டுரோடு அமைந்துள்ளது. அதிலிருந்து 1கி.மீ உள்ளே செல்லவேண்டும்.
STD CODE – 0435.
சிவ சிவ.