அருள்மிகு சத்தியமூர்த்தி பெருமாள், திருமெய்யம். மூலவர் சத்தியமூர்த்தி பெருமாள், உற்சவர் அழகியமெய்யர். தாயார் உஜ்ஜீவன தாயார். ஸ்தலவிருட்சம் ஆலமரம். தீர்த்தம் சத்யபுஷ்கரணி. திருமயம் என்று சொல்கிறார்கள். திருமெய்யம் என்றும் வழங்கப்படுகிறது. புதுக்கோட்டை மாவட்டத்திலே அமைந்திருக்கின்றது. திருமங்கையாழ்வாரால் மங்களாசாஸனம் செய்யப்பட்ட ஸ்தலமாகும். இங்கு திருவிழா காலங்களிலே லட்சக்கணக்கான மக்கள் வருவது சிறப்பு.
இந்தத் தலத்திலே சத்தியமூர்த்தி, திருமெய்யர் என்று 2 மூலவர்கள் காட்சி தருகிறார்கள். பல்லவர் காலத்திலே சைவ, வைணவ ஒற்றுமைக்கு எடுத்துக்காட்டாக, ஒரே சுற்றுச் சுவருக்குள்ளே சிவன் கோவிலும், இதற்குப் பக்கத்திலே பெருமாள் கோவிலும் இருக்கின்றன. ஒரே கல்லில் குடைவரைக் கோவில்களாக விளங்குகின்றன. நரம்பு தளர்ச்சி இருப்பவர்கள் இந்தத் தாயாரை வழிபடுவது விஷேசமாகும்.
சத்தியமூர்த்தி பெருமாள் என்ற நாமத்திலே இருப்பதனால், இந்த ஊருக்கு திருமெய்யம் என்று பெயர் வந்தது. மெய் - சத்தியம். மற்றொரு சன்னிதியிலே பாம்பணை மேலே திருமெய்யர் காட்சி தருகின்றார்.
இந்தத் திருஉருவம் இந்தியாவிலேயே மிகப்பெரியது என்றும் கூறப்படுகிறது. மகாபலிபுரம் சிற்பங்களைப் போலவே, பாறைகளில் நிறைய சிற்பங்கள் செதுக்கப்பட்டுள்ளன.
மது கைடபர்களாகிய அரக்கர்கள் பெருமாள் நித்திரையில் இருந்தபோது, ஸ்ரீதேவி, பூதேவியரை அபகரிக்க வந்தார்கள். அதைக்கண்டு பூதேவி திருமாலுடைய திருவடிகளுக்கடியில் சென்றுவிட்டாள். ஸ்ரீதேவி பெருமாளுடைய மார்பிலே ஒளிந்து கொண்டு விட்டாள்.
திருமாலுடைய யோகநித்திரையைக் கலைக்க மனமில்லாத ஆதிஷேசன், தன் வாயிலிருந்து விஷ ஜூவாலையைக் கக்கி அரக்கர்களை விரட்டி விடுகின்றார். பெருமாளின் அனுமதியில்லாமல் விஷ ஜூவாலையை கக்கியதற்காக ஆதிசேஷன் கொஞ்சம் பயந்து நிற்பது போல இந்தச் சிற்பம் காணப்படுகிறது. ஆனாலும் நன்மையே நீ செய்திருக்கின்றாய் என்று திருமால் ஆதிசஷனைப் பாராட்டியதாக புராணம்.
PINCODE – 622 507.