இறைவர்: வேதநாதர், வேதபுரீஸ்வரர், ரிக்வேதநாதர்.
இறைவியார்: வேதநாயகி
தல மரம்: வன்னி
தீர்த்தம் : வேத தீர்த்தம்
கீழ்வேளூரிலிருந்து (கீவளூர்) கச்சினம் வழியாகத் திருத்துறைப்பூண்டிக்கு செல்லும் வழியில் இத்தலம் அமைந்தள்ளது. கொள்ளிடம் தாலுகா, நாகப்பட்டினம் மாவட்டம். மக்கள் வழக்கில் சாத்தியக்குடி என்று அழைக்கிறார்கள்.
கோவிலின் பெயர் ஏழிருக்கை. ஆறு ஆதாரங்களுக்கும் மேலான ஏழாவது இடத்தை ஏழிருக்கை என்று கூறுவார்கள். இத்தலத் திருவிசைப்பா பதிகத்தில் கருவூர்த் தேவர் ஒவ்வொரு பாட்டிலும் "ஏழ் இருக்கையில் இருந்த ஈசனுக்கே" என்று பாடி இருக்கிறார்.
சாட்டியம் (ஜாட்யம்); வெப்பத்தால் வரும் சுரநோய். வெப்பநோய்க்குரிய தேவதையாகிய ஜ்வரதேவதை இறைவனை வழிபட்ட தலம் என்பதால், ஜாட்டியக்குடி (சாட்டியக்குடி) என்று பெயர் வந்தது. சாட்டிய (சாண்டில்ய) முனிவர் வழிபட்ட தலம் என்பதாலும் இப்பெயர். கோயில் பிராகாரத்தில் சாட்டிய முனிவரின் சிலா மேனியும் உள்ளது.
கருவூர்த்தேவர் இத்தலத்தின்மேல் திருவிசைப்பா பாடியுள்ளார். மூலவர் சிவலிங்கத் திருமேனி; சற்று உயர்ந்த பாணம்; சதுர ஆவுடையார் அமைப்பில் உள்ளது. அம்பாள் கோயில் பக்கத்தில் தனிக்கோயிலாக உள்ளது. இக்கோயில் கி.பி. 4ஆம் நூற்றாண்டில் கட்டப்பட்டது.
சாட்டியக்குடி - 614618.