மூலவர்: அருள்மிகு கற்பக வினாயகர்
ஊர்: பிள்ளயார்பட்டி
மாவட்டம்: சிவகங்கை
தல விருட்சம்: மருதமரம்
சிவகங்கை மாவட்டம் திருப்புத்தூர் தாலுகா, திருப்புத்தூர் - காரைக்குடி மெயின் ரோட்டில் உள்ளது பிள்ளையார்பட்டி ஊர். விநாயகருக்கு உரிய மிகப்பெரிய குடைவரைக் கோயில். விநாயகர் சதுர்த்தியன்று 18படி அளவில் மிகப்பெரிய கொழுக்கட்டை நைவேத்தியம் செய்யப்படுகிறது. முருகப்பெருமானுக்கு 6 படை வீடு இருப்பது போல, விநாயகருக்கும் 6 படை வீடு இருக்கிறது.இவ்வூர் விநாயகரின் ஐந்தாவது படை வீடாகும். இக்கோவில் நகரத்தார் திருப்பணி செய்த கோயில்.
சுமார் 1600 ஆண்டுகள் பழமையான இக்கோயில், மகேந்திர பல்லவர் காலத்தில் உருவாக்கப்பட்டது. தற்போது நகரத்தார்களால் நிர்வாகம் செய்யப்பட்டு வருகிறது. தென்னிந்தியாவில் அர்ஜுன (மருத மரம்) வன திருத்தலங்கள் நான்கு உள்ளன. திருநெல்வேலி மாவட்டத்தில் திருப்புடைமருதூர், தஞ்சை மாவட்டத்தில் திருவிடைமருதூர், ஆந்திர மாநிலத்தில் ஸ்ரீசைலம் மல்லிகார்ஜுனம், சிவகங்கை மாவட்டத்தில் பிள்ளையார்பட்டி ஆகிய ஊர்கள்.
ஆவணி மாதம் விநாயகர் சதுர்த்தி இங்கு நடக்கும் மிகப்பெரிய திருவிழாவாகும். இது 10 நாள் நடக்கும். பிள்ளையார் சதுர்த்திக்கு 9 நாட்களுக்கு முன்பு காப்புகட்டி, கொடியேற்றம் முதலியவை நடபெறும். 10ம் நாள் காலையில் தீர்த்தவாரியும், உச்சிகால பூஜையின் போது மிகப்பெரும் கொழுக்கட்டை நைவேத்தியமும் நடக்கும். இரவு ஐம்பெருங்கடவுள்கள் திருவுருவங்களுக்கும் தங்க, வெள்ளி வாகனங்களில் திருவீதி உலா நடக்கும்.
விநாயகர் சதுர்த்தியன்று உச்சிகால பூஜையின் போது விநாயகருக்கு முக்குறுணி அரிசியால் செய்யப்பட்ட மிகப்பெரிய ஒரே கொழுக்கட்டை தயாரித்து நைவேத்யம் செய்வார்கள். 18 படி அரிசியின் மாவும், எள் 2 படியும், கடலைப்பருப்பு 6 படியும், தேங்காய் 50ம், பசுநெய் 1 படியும், ஏலம் 100 கிராம், வெல்லம் 40 கிலோவும் ஆகியவற்றைச் சேர்த்து, கலந்து, உருண்டை பிடித்து, துணியால் கட்டி, அன்னக் கூடையில் கட்டுவார்கள். தண்ணீர் நிரம்பிய அண்டாவினுள் இறக்கி, அதன் அடிப்பகுதி கீழே படாமல் தொங்கவிட்டு, அந்தப் பெரிய பாத்திரத்தில் 2 நாள் தொடர்ந்து வேக வைக்கப்படும். பிறகு இதனை உலக்கை போன்ற கம்பில் கட்டி, பலர் சேர்ந்து, காவடி போலத் தூக்கி வந்து நிவேதனம் செய்வர். மறுநாள் அதன் சூடு ஆறிய பின்பு அதனைப் பக்தர்களுக்கு வினியோகம் செய்வார்கள்.
விநாயகருக்குத் தேர்த்திருவிழா நடைபெறும் ஒருசில இடங்களில் பிள்ளையார்பட்டியும் ஒன்று ஆகும். விநாயகருக்கும், சண்டிகேசுவரருக்குமாக இரண்டு தேர்கள் உள்ளன. பிள்ளையார் தேரில் இரண்டு வடங்களில் ஒன்றினைப் பெண்களும் இன்னொரு வடத்தை ஆண்களும் இழுப்பார்கள். சண்டிகேசுவரர் தேரைப் பெண்களும் குழந்தைகளும் மட்டுமே இழுக்கலாம். தேர்வலம் வரும் நேரத்தில் மூலவருக்கு சந்தனக்காப்பு சாத்தப்படும். ஆண்டிற்கு ஒருமுறை மட்டுமே இந்த சந்தனக்காப்பு நடைபெறுகிறது.