சோலைமலை. பழமுதிர்சோலை. அருள்மிகு சுப்பிரமண்ய சுவாமி திருக்கோவில். வள்ளி, தெய்வானையுடன் முருகன் காட்சியளிக்கிறார். தலவிருட்சம் நாவல். தீர்த்தம் நூபுரகங்கை (சிலம்பாறு). சோலைமலை மதுரை மாவட்டத்திலே அமைந்திருக்கின்றது. திருப்புகழ் பாடல்பெற்ற ஸ்தலமாகும். முருகனுடைய அறுபடை வீடுகளில் இது 6-வது படைவீடாகும்.
பொதுவக நாவல் மரத்தின் பழங்கள் ஆடி, ஆவணி மாதத்தில் பழுக்கும். ஆனால், இந்தத் தலத்து நாவல் மட்டும் ஐப்பசியில் பழுக்கின்றது. இந்த ஊரினுடைய PINCODE – 625301.
மலைக்குக் கீழே அழகர் கோவில். மலைக்கு மேலே பழமுதிர்ச்சோலை. ஒருமுறை ஔவைப் பாட்டி இந்த வழியாக வந்து கொண்டிருந்தபோது, ஒரே வெயிலாக இருந்தது. களைப்பாக உட்கார்ந்திருந்தார். ஒரு நாவல் மரத்தின் மேலே முருகன் அமர்ந்திருந்தபோது, என்ன பாட்டி களைப்பாக அமர்ந்திருக்கிறீர்கள். உமக்கு நாவல்பழம் வேண்டுமா என்று கேட்டார். அவசியம் வேண்டும் என்று சொன்னார்.
உடனே முருகன் உங்களுக்கு சுட்ட பழம் வேண்டுமா? சுடாத பழம் வேண்டுமா என்று கேட்டார். பாட்டியும் புரியாமல் சுட்ட பழத்தையே கொடேன் என்று கேட்டார்.
சிறுவன் மரத்தை உலுக்கியவுடன், பழங்கள் கீழே விழுந்தன. அதில் மண் ஒட்டிக் கொண்டிருந்தது. ஔவைப் பாட்டி அந்தப் பழத்தை எடுத்து மணலை உதிர்ப்பதற்காக, பழத்தை ஊதினார். அப்போது அந்தச் சிறுவன் பழம் மிகவும் சுடுகிறதோ என்று சிரிப்புடன் கூறியவுடன் வந்தவன் சிறுவன் அல்ல, முருகப்பெருமானே என்று உணர்ந்து கொண்டார்.
இதன்மூலம் முருகப்பெருமான், உயிர்களின் மீது உலகப்பற்று என்ற மணல் ஒட்டிக்கொண்டிருக்கின்றது; அதற்குக் கல்வியறிவு மட்டும் போதாது, மெய்யறிவும் தேவை என்பதை, ஔவைப் பாட்டிக்கு உணர்த்தினார்.
இந்த பழமுதிர்சோலை அருமையான முருகனுடைய ஸ்தலமாகும். இங்கு நூபுரகங்கை தீர்த்தத்தில், காவல் தெய்வமாகிய ராக்காயி அம்மனையும் தரிசிக்கலாம்.
வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா.