பட்டீச்சரம் அருள்மிகு தேனுபுரீஸ்வரர், பட்டீஸ்வரர். அம்மன் பல்வளை நாயகி, ஞானாம்பிகை. தலவிருட்சம் வன்னி. ஞானவாவி தீர்த்தம். இதற்கு மழபாடி (இது திருமழபாடி அன்று), பட்டீச்சரம், பட்டீஸ்வரம் என்ற பெயர்கள் உண்டு. தஞ்சாவூர் மாவட்டத்தில் அமைந்துள்ளது. திருஞானசம்பந்தர் பாடிய தலம் இது.
இங்கு திருஞானசம்பந்தருக்கு ஆனி மாதத்திலே முத்துப்பந்தல் விழா மிகச் சிறப்பாக நடைப்பெறுகிறது. பட்டீச்சரத்து துர்க்கை மிகவும் பிரசித்தம்.
மார்க்கண்டேயர் வழிபட்டத் தலம். சோழர்களால் கட்டப்பட்டது. விச்வாமித்ர முனிவருக்குக் காயத்ரி மந்திரம் சித்தி பெற்று, பிரம்மரிஷி பட்டம் பெற்றதும் இந்த ஊரிலேதான். இங்கிருக்கின்ற அஷ்டபூஜ துர்க்கைக்கு விஷ்ணு துர்க்கை, துர்காலக்ஷ்மி, நவசக்தி நாயகி, நவயோக நாயகி, நவக்கிரக நாயகி என்றெல்லாம் பெயர்கள். பைரவரும் பிரசித்தம். இராஜராஜன் முதலான சோழ மன்னர்கள் அனைவரும் இந்த துர்க்கை அம்மனை வழிபட்டனர்.
சோழர்கள் போருக்குப் புறப்படும்போது இந்த துர்க்கையினுடைய அருளாசியைப் பெற்ற பின்னரே செல்வர். இங்கு துர்க்கை சாந்தஸ்வரூபியாக இருக்கின்றாள். சிம்ம வாகனம் வலப்புறம் இல்லாமல், சாந்த ஸ்வரூபியால் இடதுபுறம் அமைந்திருக்கின்றது.
திருஞானசம்பந்தர் பல தலங்களுக்கும், பல இடங்களுக்கும் சென்று வழிபட்டு வந்தபோது வெயில் சுட்டெரித்தது. அவர் சின்னக் குழந்தை ஆதலால் இறைவனே பூதகணங்களை அனுப்பி முத்துப்பந்தலை அனுப்பி வைத்தார். இதனால் ஞானசம்பந்தர் இறைவனுடைய அருளை வியந்து போற்றி முத்துப்பந்தலிலே நடந்துவந்தார்.
ஞானசம்பந்தர் வருகின்ற அழகிய காட்சியைக் காண்பதற்காக, சிவபெருமானே நந்தி பெருமானை விலகி இருக்கச் சொன்னார்.
காமதேனு பசுவினுடைய மகள் பட்டி பூஜித்ததால் பட்டீச்சரம் என்ற பெயராகும். ராமருக்கும் இங்கு சாபம் நீங்கியது என்று சொல்வார்கள். பராசக்தியே இந்தத் தலத்தில் வழிபட்டாள். இந்தக் கோயிலிலே நாயக்கர் கால கலை அம்சம் காணப்படுகிறது. மராட்டியர் கால ஓவியங்களும் உள்ளன. மிகப் பழமையானக் கோயிலாகும். பராசக்தி தானே தவம் செய்வதற்காக அமைத்த தலம். தேவர்கள் மரம், செடி, கொடி வடிவங்களில் வந்து உதவி செய்தனர். காமதேனுவினுடைய புத்ரியான பட்டியும் தேவியின் தவத்திற்குப் பணிவிடைகள் செய்தது. அதற்கு உவந்து பெருமான் தன்னுடைய சடைமுடியுடன் காட்சி தந்தார்.
அதனால் கபர்தீஸ்வரர் என்ற பெயர். இந்தத் தலத்தினுடைய பெருமையை உணர்ந்து தானும் ஒரு மணலினால் லிங்கத்தை அமைத்துப் பூஜித்து வந்தது. ஞானவாவியின் நீரைக்கொண்டு நீராட்டி வழிபட்டது. பட்டி வழிபட்டதால் பட்டீஸ்வரம் என்றப் பெயராகும்.
இந்தத் தலபுராணம் சமஸ்கிருதத்தில் உள்ளது. தமிழில் உரைநடையில் பட்டீஸ்வரர் மான்மியம் என்று மொழி பெயர்க்கப்பட்டுள்ளது.
இந்தத் தலத்திலே 5 நந்திகள் உள்ளன. அனைத்தும் சன்னிதியிலிருந்து விலகிய வண்ணமே உள்ளன.
இந்தத் தல விநாயகர் அனுக்ஞை விநாயகர், மதவாரணப் பிள்ளையார். இந்தத் தலத்திற்கு மகாவித்வான் மீனாட்சி சுந்தரம்பிள்ளைத் தலபுராணம் பாடத்தொடங்கி அது முற்றுப்பெறவில்லை என்பதும் தெரிகிறது.
இராமநாதரைப் பிரதிஷ்டை செய்து திரும்பியபொழுது இராமர் இங்கும் வில்முனையால் கோடி தீர்த்தம் உண்டாக்கினார். அதனால் இங்கு இராமலிங்க சன்னதி, கோடி தீர்த்தம் ஆகியவை உள்ளன. இந்த ஊருக்கு தேவிவனம் என்றும் இன்னொரு பெயர். சம்பந்தர், அப்பர், சேக்கிழார், மார்க்கண்டேயர் ஆகியோர் வழிபட்டார்கள்.
இந்தத் தலத்திற்கு 5 கல்வெட்டுகள் இருக்கின்றன. சோழர்காலக் கல்வெட்டுகள் காணப்படுகின்றன. பலிபீடத்தினுடைய அடியிலே இருக்கின்ற கல்வெட்டு திருஞானசம்பந்தர் மடம், திருநாவுக்கரசர் மடம், திருமூலர் தேவர் மடம் ஆகியவற்றைப் பற்றிக் குறிப்பிடுகின்றது. இங்கே திருப்பணி புரிந்த கோவிந்த தீக்ஷிதர் அவருடைய மனைவியார் ஆகியோருடைய திருவடிவங்கள் உள்ளன.
இது கும்பகோணம் - தஞ்சாவூர் இருப்புப் பாதையிலே தாராசுரத்திற்கு தென்மேற்கே சுமார் 3கி.மீ தொலைவிலே உள்ளது. காவிரியினுடைய தென்கரைத் தலமாகும்.
இந்த ஊரினுடைய STD CODE – 0435.
சிவ சிவ.